Tuesday, September 29, 2009

தடைகள் தகரும்


தடைகள் தகரும்


இசைக் கருவி மிகமிகச் சீரானதாக இருந்தாலும் முறையாக இசைக் கப்பட்டால் மட்டுமே அதிலிருந்து இன்னிசை எழும்.

அப்படித்தான் மனமும், மிகத் தெளிவானதாக இருந்தாலும் முறையாகப் பயன்படுத்தினால் மட்டுமே அது முன்னேற்றத்துக்கு உதவும்.

உங்கள் குடும்ப ஒற்றுமையில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா? உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே ஏதாவது பிரச்னையா?

உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் ஏதாவது தகராறா?

நீங்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறீர்களா?

இப்படியெல்லாம் கேட்டால், நீங்கள் இல்லை என்று சொல்லலாம்.

ஆனால், உங்களில் பலருக்கும் அவரவர் வாழ்க்கைத் துணையிடம் நேரடியாகக் கேட்க அல்லது சொல்ல முடியாத ஏதாவது ஒரு விஷயமாவது இருக்கும். அது அடிக்கடி உங்கள் மனதில் தோன்றி உறுத்திக்கொண்டே இருக்கும்.

உதாரணமாக, நீங்கள் ஒரு குடும்பத்தலைவி என்று வைத்துக் கொள்வோம். உங்கள் கணவர், மிகவும் அன்பானவர். எல்லோரிடமும் பாசமானவர். ஆனால், தினமும் அலுவலகத்திலிருந்து தாமதமாகவே வருவார். கேட்டால், உங்களுக்காகத்தானே உழைக்கிறேன்... இப்போது நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால்தானே சம்பாதிக்க முடியும்? என்பார்.

உங்களுக்கோ மாதத்தில் சில நாட்களாவது சீக்கிரமாக வரலாமே... குடும்பத்தோடும் குழந்தைகளோடும் நேரம் செலவிடலாமே! என்று கேட்கத் தோன்றும். ஆனால் நேரடியாக அப்படிக் கேட்க முடியாமல் தவிக்கிறீர்கள்.

இந்த அழுத்தி வைத்த உணர்வு என்ன ஆகும்? ஏதாவது ஒரு சமயத்தில் பெரிய குற்றச்சாட்டாக அவர் மீது சுமத்தப்பட்டு அதனால் உறவுப்பாலத்தில் பெரிதாக விரிசல் விடும். இப்படி ஒரு சங்கடம் வருவதை நீங்கள் விரும்புவீர்களா?

நிச்சயம் மாட்டீர்கள். அதேசமயம் உங்கள் நியாயமான கோரிக்கையையும் உங்கள் கணவரிடம் சொல்லியாக வேண்டும். அதற்கு என்ன வழி?

உங்கள் கணவரிடம் நேரடியாக அன்பாகப் பேசிக் கேட்பதுதான் மிகச் சிறந்த வழி. ஆனால், உங்கள் கணவர் இருக்கும் மனநிலையில், அவர் அதைக் கேட்கத் தயாராக இல்லை.

அப்படியானால் என்ன செய்வீர்கள்? உங்களில் சிலர், மனஅழுத்தம் தாளாமல் வேறு யாரிடமாவது அதைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், உங்கள் பிரச்னையில் மூன்றாம் நபர் மூக்கை நுழைக்க அனுமதிப்பதைப்போல் முட்டாள்தனம் எதுவுமே இல்லை. ஒருவேளை, அது உங்கள் மனஅழுத்தத்தைக் கொஞ்சம் குறைப்பதாக ஆரம்பத்தில் தோன்றலாமே தவிர, போகப்போக மூன்றாம் நபராலும் ஒரு புதுப்பிரச்னை எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிடும்.

பழைய காலத்து நகைச்சுவைக்கதை ஒன்று சொல்வார்கள். ஒரு நாட்டின் ராஜாவுக்கு, காது கழுதைபோல் நீளமாக இருக்குமாம். அதை மறைத்து மூடிட எப்போதும் தலைப்பாகையோடு இருப்பானாம் அந்த மன்னன்.

ஒருநாள், அவருக் குத் தலைமுடி வெட்டி விடப்போன நாவிதர் அதைப் பார்த்து விட்டார். வெளியில் சொன்னால் சிரச்சேதம் என்று மிரட்டி அனுப்பினான் அரசன்.நாவிதர் பல நாட்கள் அந்த ரகசியத்தைப் பாதுகாத்தார். ஆனால் அதுவே அவரது மன தில் அழுத்தமாகவே, காட்டில் ஒரு பெரிய பள்ளம் தோன்றி அதற்குள் அந்த ரகசியத்தை உரக்கச் சொன்னார். அவரது மன அழுத்தம் குறைந்தது. சிலகாலத்துக்குப்பின் அங்கே முளைத்த ஒரு மரம், அரசனின் முரசாக வடிவமைக்கப்பட்டது. அரசனின் முன்னிலையில் அது முதன் முதலாக அடிக்கப்பட்டது. மறுகணம், அதிலிருந்து ஓசை எழுந்தது. டும்.. டும்.. டும்.. என்றல்ல.. ராஜா... காது.. கழுதைக்காது என்று ஒலி எழுப்பியது அந்த முரசு.

இது வேடிக்கைக்கதை என்றாலும் இதிலும் ஒரு பாடம் இருக்கிறது. பிரச்னையே வராது என்று நினைத்து வெற்றிடத்தில் நின்று ஒரு விஷயத்தைச் சொன்னாலும் கூட அதுவே பிரச்னைக்கு விதையாகி மரமாக வளர்ந்துவிடும் என்பதுதான்.

இப்போது, மூன்றாம் நபரிடம் உங்கள் தனிப்பட்ட விஷயத்தைச் சொன்னால் அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்!

நேரடியாகவும் சொல்ல முடியாது, பிறரிடமும் சொல்லஇயலாது... அப்படியானால் என்னதான் தீர்வு!? என்கிறீர்களா? அதற்கான ஒரே வழி, மனதோடு பேசுவதுதான்.

ஆமாம். நேரடியாகப் பேச முடியாத எதையும் நீங்கள் உங்கள் ஆழ்மனதால் மற்றவரின் ஆழ்மனதோடு பேசச் செய்யலாம்.

ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்து, மனதை ஆல்ஃபா நிலைக்குக் கொண்டு செல்லுங்கள். உங்கள் ஆழ்மனதிடம் கூறுங்கள்.

என்கணவர்/என் மனைவியின் ஆழ்மனம் விழித்திருக்கும் சமயத்தில் இந்த விஷயத்தைச் சொல்... அவரது ஆல்ஃபா மைண்டுடன் பேசு....! என்று.

என்ன சொல்ல வேண்டும்? எப்படிச் சொல்ல வேண்டும்?

அது, அடுத்து...

()