Thursday, September 2, 2010

சித்தர்களும்... பெண்களுக்கான தீர்வுகளும்.!

சித்தர்களும்... பெண்களுக்கான தீர்வுகளும்.!


சித்தர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள் என்கிற கருத்தினை "வாலைபூசை" பதிவுகள் ஓரளவிற்கு மாற்றியிருக்கும் என நம்புகிறேன். பெண்களை அழகியல் சார்ந்த ஒரு போகப் பொருளாய் பார்க்கும் ஆணாதிக்க சமூகத்தின் எண்ணப் பாங்கினையே சித்தர்கள் சாடினர் என்பதை சித்தர்களின் பாடல்களை ஆழ்ந்து நோக்கும் எவரும் உணர்ந்து கொள்ள முடியும்.

சித்தர்கள் பெண்களுக்காக உடலியல் ரீதியான பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அருளியிருக்கின்றனர். அவற்றை தொகுக்கும் சிறு முயற்சியாக இனி வரும் பதிவுகள் அமையும்.

முகப்பரு

பருவ வயதை எட்டிய அனைவருக்குமான கவலைகள் இந்த பரு பற்றியதாகவே இருக்கும். அலோபதி மருத்துவ முறை சார்ந்த பல தீர்வுகள் இருந்தாலும் அவை சருமத்தை பாதிப்பதுடன், செலவு கூடியதும் ஆகும்.பொதுவில் எண்ணைபசையான சருமம் கொண்டவர்களே பருவினால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.

முகப்பரு பிரச்சினையில் இருந்து விடுபட சித்தர்கள் அருளிய முறைகளைப் பார்போம்.

வேப்பங் கொழுந்தை, மஞ்சள் கிழங்குடன் சேர்த்து சிறிது நீர்விட்டு மைப்போல அரைத்து முகப்பரு இருக்கும் இடங்களில் பூசி, உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவிவர முகப்பரு இருந்த இடம் தெரியாமல் மறையும்.

அம்மான் பச்சரிசி செடியின் பாலை முகப்பரு இருக்கும் இடங்களில் பூசி, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவர முகப்பரு மறையும். இதை யார் காணாதவாறு செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சந்தன கட்டையை அரைத்து முகத்தில் தழும்புகள் உள்ள இடங்களில் பூசி நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர தழும்புகள் மறையும்.

அடுத்த பதிவில் மாதவிலக்கு பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பற்றி பார்ப்போம்...