Saturday, December 11, 2010

எத்தனுக்கு எத்தன் எங்கும் இருப்பான்..

எத்தனுக்கு எத்தன் எங்கும் இருப்பான்..

 

மதுரை புகைவண்டி நிலையத்தில், மூன்று இளைஞர்கள் மூன்று  டிக்கெட் வாங்கிக்கொண்டு சென்னை செல்லும் புகை வண்டியில் ஏறினர்.

அவர்களை போலவே  வேறு ஒரு மூன்று பேர் ஒரே ஒரு டிக்கெட் மட்டும் வாங்கிக்கொண்டு அவர்கள் ஏறிய அதே பெட்டியில் ஏறினர். இந்த மூன்று இளைஞர்களும் ஒரே ஒரு டிக்கெட் வாங்கிய அவர்களிடம் போய் ,'ஒரு டிக்கெட் வாங்கி, மூன்று பேர் எப்படி பயணம் செய்வீர்கள்?' என்று கேட்டனர். ''பொறுத்திருந்து பாருங்கள்,'' என்று பதில் வந்தது.

மூன்று டிக்கெட் வாங்கியவர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்தார்கள்.ஒரு டிக்கெட் மட்டும் வாங்கியவர்கள் மூவரும் கழிப்பறையினுள் சென்று தாழிட்டுக் கொண்டனர்....சிறிது நேரத்தில்  டிக்கெட்  பரிசோதகர் வந்து பெட்டியிலிருந்த அனைவரிடமும் பரிசோதித்துவிட்டு, நேராக சென்று கழிப்பறையின் கதவைத் தட்டினார்.உடனே கதவு லேசாகத் திறந்தது..ஒரு கை ஒருடிக்கெட்டை வெளியே நீட்டியது.பரிசோதகர்  வாங்கிப் பார்த்துவிட்டு சென்று விட்டார்.

சிறிது நேரம் சென்றபின் மூவரும் கழிப்பறையிலிருந்து வெளிவந்து இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்... நாங்கள் ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் பிராயாணம்   செய்வோம் என்று பெருமையாக கூறிக்கொண்டனர்.

ஒரு வாரம் கழித்து சென்னையில் வந்த வேலை முடிந்ததும்  அந்த மூன்று இளைஞர்களும் மதுரை  திரும்ப ரயில் நிலையம் வந்தார்கள். அங்கு தற்செயலாக, ஒரு டிக்கெட் மட்டும் வாங்கி தங்களுடன் சென்னை வரை பிரயாணம் செய்த அந்த மூன்று இளைஞர்கள் மதுரை செல்ல டிக்கெட் வாங்க நிற்பதைப் பார்த்தார்கள்.

அவர்கள் இம்முறையும்  ஒரு டிக்கெட் மட்டும் வாங்குவதைப் பார்த்தார்கள். சென்ற முறை மூன்று டிக்கெட் வாங்கியவர்கள்  இப்போது ஒரு டிக்கெட்டும் வாங்காமலேயே புகைவண்டியில் ஏறினார்கள்.'ஒரு டிக்கெட் கூட இல்லாமல் எப்படி சமாளிப்பீர்கள்?' என்று இவர்களை அவர்கள் கேட்டார்கள், ''பொறுத்திருந்து பாருங்கள்,'' என்று பதில் வந்தது.



டிக்கெட் பரிசோதகர் வருவது போல தெரிந்ததும் ஒரு டிக்கெட் வாங்கிய மூவரும் வழக்கம் போல வேகமாக ஒரு கழிப்பறையில் நுழைந்தனர். டிக்கெட் ஏதும் வாங்காதவர்கள் வேறு ஒரு கழிப்பறையில் புகுந்தனர். சிறிது நேரத்தில் டிக்கெட் எதுவும் வாங்காத மூவருள் ஒருவர் கழிப்பறையில் இருந்து வெளியே வந்தார். அடுத்த கழிப்பறை கதவு தட்டி, 'டிக்கெட் காண்பியுங்கள்,' என்று பரிசோதகர் போலக் கேட்டார். கதவு லேசாகத் திறந்தது. ஒரு கை ,ஒரு டிக்கெட்டுடன் வெளி வந்தது. தட்டியவர்,அந்த டிக்கெட்டை வாங்கிக்கொண்டு தன் நண்பர்கள் இருந்த கழிப்பறையில் புகுந்து கொண்டார். பழையபடி அதே டெக்னிக் தான்.....

 

எத்தனுக்கு எத்தன் எங்கும் இருப்பான்..