Friday, March 11, 2011

கடவுள் ஒருவரே என்கிறீர்கள். அப்படியானால்

 
'கடவுள் ஒருவரே என்கிறீர்கள். அப்படியானால், அவர் எப்படி எல்லா இடத்திலும் நிறைந்திருக்க முடியும்?'' என்று என்னை வம்புக்கு இழுத்தான் என் மருமகன். ஹாஸ்டலில் தங்கி, ஐஐடி-யில் படிக்கிறான்.

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், சற்றுத் தடுமாறினேன். பிறகு, அவனைப் பார்த்து ''உங்க அப்பாவுக்கு எத்தனை மூக்கு?'' என்று கேட்டேன்.

குழம்பிய மருமகன், ''இதென்ன கேள்வி, ஒரு மூக்கு தான்'' என்றான்.

''எத்தனை மூக்குக் கண்ணாடி வைத்திருக்கிறார்?''

''ஒரே ஒரு மூக்குக் கண்ணாடிதான்.''

''ஆனால், அதைக் காணாவிட்டால் குளியல் அறை, சமையலறை, வாசல் வராந்தா, ஈஸிசேர் கைப்பிடி, படுக்கை அறை, டாய்லெட் ரூம், டி.வி. ஸ்டாண்ட், தனது தலை என எல்லா இடத்திலும் தேடுகிறார். எல்லாரும் அவருக்கு உதவியாக, அவரவருக்குத் தெரிந்த முறையில் தேடுகிறீர்கள். அழுக்குத் துணிக்கூடையில் உள்ள துணி களையெல்லாம் எடுத்து கீழே போட்டு, சட்டைப் பைகளில் தேடுகிறார் ஒருவர். 'நல்லா யோசனை பண்ணிப் பாருங்க. எழுந்ததிலிருந்து என்னென்ன பண்ணினீங்க? பேப்பர் படிச்சீங்களா?' என்று கேட்டபடியே, பேப்பர்களையெல்லாம் உதறோ உதறு என்று உதறுகிறார் ஒருவர்.

மூக்குக் கண்ணாடி தொலைந்ததற்கும், பழைய பேப் பர்களை இப்படி உதறிக் குப்பையாட்டம் போடுவதற்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை, மூக்குக் கண்ணாடி அதற்குள் ஒளிந்திருக்கலாமல்லவா?

ஆக, ஒரு பொருள் எல்லா இடத்திலும் இருக்கக்கூடும் என்பது கண்ணாடியைத் தேடுவதிலேயே தெரிகிறதல்லவா? பசுவின் பால் அதன் மடியில் மட்டுமா இருக்கிறது. உடம்பு முழுவதிலும்தானே? யோசனை பண்ணு!'' என்றேன்.

ஐ.ஐ.டி. அசரவில்லை. ''சரி, நீங்களோ எல்லாக் கடவுள் களையும் கும்பிடுகிற வழக்கம் உடையவர். அதனால், உங்க ளுக்கு ஒரு கஷ்டம் என்றால், 'பிள்ளையாரப்பா, முருகா, ஈஸ்வரா, பெருமாளே, ஐயப்பா, காளியம்மா... காப்பாற் றுங்கள்!' என்று எல்லாத் தெய்வங்களையும் உத விக்கு அழைப்பீர்களா? அல்லது, ஒரே ஒரு தெய்வத்தை மட்டும் கூப்பிடுவீர்களா?'' என்று கேட்டான்.

''ஏன், எல்லாப் பெயரையும் சொல்லித்தான் கூப்பிடுவேன்,'' என்றேன்.

''சரி, ஒரே சமயத்தில் முருகனும் விஷ்ணுவும் உங்களுக்கு உதவக் கிளம்புகிறார்கள் என்று வைத் துக்கொள்ளுங்கள்; 'அவர்தான் காப்பாற்றப் புறப்படு கிறாரே! நாம் வேறு போக வேண்டுமா!' என்று நினைத்துக் கொண்டு, இருவருமே புறப்படாமல் தங்கிவிட நேருமல்லவா?'' என்று மடக்கினான் அந்தப் பயல்.

தயானந்த சரஸ்வதி சுவாமிகள் இந்தக் கேள்விக்கு, ஒரு கூட்டத்தில் அளித்த பதிலை, மருமகனுக்குக் கூறினேன்.

''உலகில் ஒரு விபத்து அல்லது உடல்நலக் குறைவு ஒரே சமயத்தில் பல இடங்களில் உள்ளவர்களுக்கும் ஏற்படு வது உண்டுதானே? ஒரே கடவுளாக இருந்தால், அவர் யாரைக் கவனிக்க விரைவார்? நிறையக் கடவுளர் இருந்தால், 'நீ டெல்லிக்குப் போ, நீ பம்பாய்க்குச் செல், அமெரிக்காவில் ஏதோ தகராறாம்; நீ போய் அதைக் கவனி!' என்று தலைமைக் கடவுள், தன் கீழ் உள்ள பல கடவுள்களையும் ஆங்கங்கே சென்று உதவ, உடனடியாக அனுப்பி வைப்பார். ஆகவே, பல கடவுள்கள் இருப்பது நல்லதுதான்!'' என்றேன்.

தொடர்ந்து, ''நீ ஐடி பையன் என்பதால், உனக்குப் புரிகிற மாதிரியே சொல்கிறேன்; ஓர் அலுவலகத்தில் எத்தனையோ சிஸ்டங்கள் இருக்கும்; பலர் அவற்றில் அமர்ந்து வேலை செய்வார்கள்; ஆனால், அத்தனைக்கும் பொதுவாக ஒரே ஒரு சர்வர்தானே இருக்கிறது! அதுபோல, பல வித கடவுள் களைக் கும்பிட்டாலும், ஒரே கடவுளைக் கும்பிடுகிற மாதிரி தான்! ஒரே கடவுளைக் கும்பிட்டாலும், பல கடவுள்களைக் கும்பிடுவது போலத்தான்'' என்றேன்.

'ஸர்வானன சிரோக்ரீவ: ஸர்வபூத குஹாயச' என்கிறது உபநிஷத். 'எங்கும் முகத்தையும் தலையையும் உடையவன்; எல்லா உயிர்களின் உள்ளத்திலும் உள்ளவன்' என்பது பொருள்.