Monday, March 28, 2011

மலையே கவிழ்ந்தாலும் மகிழ்ச்சியாக இருங்க...

ங்குச் சந்தை முதலீடு என்பது ஏற்ற இறக்கத்தைக் கொண்டது. இதில், புள்ளிகள் தடாலடியாக இறங்கி, போட்ட முதலீடு கணிசமாக கரையும்போது பலருக்கு அதிர்ச்சி ஏற்படக் கூடும். அதைத் தாங்கிக்கொள்ளும் விதமாக நம் உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம்.

பக்குவத்துக்கான வழி சொல்கிறார் இதய சிகிச்சை நிபுணர் வி.சொக்கலிங்கம்.

''மனிதனின் மனமே அவனை வாழ வைக்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஐம்புலன்களின் உணர்வுகளை மூளைக்கு எடுத்துச் சென்று, எண்ணங்களாக மாற்றி ஒருவரை அறிவுடையவனாக மாற்றுவது மனதின் செயலாக இருக்கிறது. இந்த மனம் மூன்று கூறுகளை உள்ளடக்கியது. அவை உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவைகளாக இருக்கின்றன. மனதின் தன்மைதான் ஆளுமை என்கிற பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்கிறது.

மனிதர்கள் பலவித குணங்களைக் கொண்டவர்கள். ஒரு வகையினர் எதிலும் தீவிரம் மற்றும் கோபம் கொள்பவர்கள். அடுத்த வகையினர் தங்களுக்கு ஏற்படும் உணர்வுகள், எண்ணங்களை வெளிப்படுத்தாதவர்களாக - முகமூடி அணிந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பிரிவில் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். அடுத்து அறிவு, பதவி, பணம் படைத்திருந்தும் மன அழுத்தம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் இந்த மூன்று வகையாக இருக்கக்கூடாது!'' எனச் சொல்லும் சொக்கலிங்கம், அப்படிபட்டவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும் விளக்குகிறார்.

''இந்த மூன்று வகையினருக்கும் உயர் ரத்த அழுத்தம் (ரத்தக் கொதிப்பு), ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் (நீரிழிவு) அதிகமாக இருக்கிறது. இவர்களுக்கு உருவாகும் மன அழுத்தம் மூலம் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இந்தப் பாதிப்பு இருப்பவர்கள் நெய், முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், மூளை போன்ற கொலஸ்ட்ரால் அதிகம் கொண்டவற்றை சாப்பிடவில்லை என்றாலும், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். காரணம், மன அழுத்தம் காரணமாக கொலஸ்ட்ராலை கல்லீரல் தானே உற்பத்தி செய்துவிடும். இது போன்ற பாதிப்பு உள்ளவர்களைத்தான் திடீர் அதிர்ச்சி அதிகமாக பாதிக்கிறது.

அதிர்ச்சி என்பது மனதின் வெளிப்பாடு. அதிர்ச்சியால் இதயம் மற்றும் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகிறது. எக்காரணம் கொண்டும் மன அழுத்தம் ஏற்படக்கூடாது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதயத் துடிப்பு வழக்கமாக 70-லிருந்து படிப்படியாக 100, 120 என அதிகரித்து 200-ஐ கூடத் தாண்டக் கூடும். மேலும், ரத்த அழுத்தமும் கூடிவிடும். அதாவது, மன அழுத்தத்தின் மூலம் உருவாகும் கொலஸ்ட்ரால் அனைத்தையும் அதிகரித்து மனிதனை ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

சிகரெட், பீடி, மதுபானங்களில் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணுவது மாயை! இப்போது 20-25 வயது இந்திய இளைஞர்களைக்கூட மாரடைப்பு அதிகம் தாக்குகிறது. இது அமெரிக்கர்களை விட 4 மடங்கு, சீனாவைவிட 10 மடங்கு, ஜப்பானைவிட 20 மடங்கு அதிக பாதிப்பாகும். இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 90 பேர் மாரடைப்பால் மரணம் அடைகிறார்கள்!

மாரடைப்பைத் தடுக்க மன மகிழ்ச்சி முக்கியம். மலையே கவிழ்ந்தாலும் மகிழ்ச்சியைக் கைவிடக் கூடாது. வெற்றி அடைவது என்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சி. ஆனால், உண்மையில் மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் வெற்றி.

தொழிலை சுமையாக நினைக்கக்கூடாது. 20 மணி நேரம் மன மகிழ்ச்சியுடன் வேலை பார்த்தாலும் பாதிப்பு இருக்காது. இதையே கஷ்டப்பட்டு 2 மணி நேரம் சுமையாக நினைத்து வேலை பார்த்தால் இதய பாதிப்பு நிச்சயம் வரும்.

மன அழுத்தம் அல்லது அதிர்ச்சி ஏற்படும்போது இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் வேக வேகமாக சுருங்கி விரியும். அப்போதுதான்  மாரடைப்பு ஏற்படுகிறது. மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் வேகமாக சுருங்கி விரியும் போது பக்கவாதம் ஏற்படுகிறது.  

மேலும், புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் வரவும் மன அழுத்தம் காரணமாக இருக்கிறது.    

மன அழுத்தத்தைக் குறைக்க தியானமும் யோகாசனமும்  நல்ல வழிகள். உடம்பில் எல்லா உறுப்புகளுக்கும் சக்தியைக் கொடுப்பது யோகாசனம். மூளைக்கு வலிமை சேர்ப்பது தியானம்.

மன அழுத்தம் மற்றும் மன அதிர்ச்சி இல்லாமல் உலகில் யாரும் வாழ முடியாது.  பாசிடிவ் ஆக நினைக்கும்போது மூளை என்டாக்ரின் மற்றும் மெலட்டோனின் ஆகிய திரவங்களையும் கல்லீரல் நல்ல கொழுப்பையும் அதிக அளவில் சுரந்துவிடும். மன அதிர்ச்சி ஏற்படும்போது அதை உடல் தாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம். குறிப்பாக, நடை பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். புகைப்பது மட்டும் அல்ல, புகைப்பவர் அருகில்கூட இருக்கவேண்டாம். வாழ்க்கை என்பது இனிய பயணம். அது பந்தயம் அல்ல. பந்தயம் என்றால் போட்டி பொறாமை வந்துவிடும். பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டாளர்கள், டிரேடர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அதிகமாக உடல் உழைப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மேலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். இவை தவிர்க்கப்பட வேண்டும்.

100 வருடங்கள் வாழ ஒரு மனிதன் வருடத்துக்கு 100 மணி நேரம் யோகாசனம், உடற்பயிற்சி செய்தால் போதும். அதாவது தினசரி 15-20 நிமிடம் இவற்றை மேற்கொண்டால் போதும். ரத்த அழுத்தம் 100-ஐ தாண்டாது. சர்க்கரை அளவு 100, கொலஸ்ட்ரால் அளவு 100-ஐ தாண்டாது. 100 வயதைத் தாண்டி வாழ வேண்டும் என்றால் உடம்பிலும் பாரம் இருக்கக் கூடாது. மனதிலும் பாரம் இருக்கக் கூடாது!'' - முத்தாய்ப்பாக முடிக்கிறார் டாக்டர் சொக்கலிங்கம்.