Friday, April 1, 2011

மகனை கடத்தல்

தெய்வநாயகி அம்மாளின் மகன் சாரதி அவளைப்பார்க்க மாதத்தில் ஒருமுறை வருவான். சில மாதங்களில் வராமலும் இருந்து விடுவான். அவள் இருக்கும் முதியோர் இல்லத்திற்கு மட்டும் தவறாமல் மாதாமாதம் பணம் அனுப்பி விடுவான்.

 

தெய்வநாயகி அம்மாவுக்குப் பெண்குழந்தைகள் இல்லை. ஒரே மகன் சாரதி. வங்கி ஒன்றில் அதிகாரியாக இருக்கிறான். அவன் மனைவி பானு. நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவள். பட்டதாரி என்றாலும் இல்லத்தரசியாகவே இருந்தாள். மாமியார் மீதும் அப்படி ஒரு மரியாதை.

 

குழந்தை பிறந்த கொஞ்சநாளிலேயே பானுவின் போக்கு மாறிவிட்டது. தெய்வநாயகி இருவராலும் ஒதுக்கப்பட்டாள். சாரதி மனைவி பக்கமா? தாயார் பக்கமா? எனக் குழம்பி அம்மாவை விட்டுச் சற்று ஒதுங்கியே இருந்தான்.

பேரனைக் கையில் எடுத்துக் கொஞ்சுவதற்கு அவள் அனுமதிக்கவில்லை. எட்டவே வைத்திருந்தாள். மாமியாரிடமிருந்து நோய் எதாவது தொற்றிக்கொள்ளுமோ  என்று அநாவசியமாகப் பயந்தாள்.

அதற்கேற்றாற்போல, மாமியார் திடீரென ஒருநாள் காய்ச்சலில் படுத்தாள். டைபாய்டுக் காய்ச்சல் என மருத்துவச் சோதனை சொன்னது. மகன் தனியாக ஒரு நர்ஸ் வைத்துப்பார்த்தான். அவ்வப்போது அவனும் சென்று பார்த்தான். அவள் பத்து நாட்களில் சுகமான பின் வீட்டிற்குப் அழைத்துவராமல் நேராக ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்த்தான்.

 

காப்பகத்திலிருக்கும் தெய்வநாயகிப் பாட்டியைப் பார்க்கப் பேரன் பிரபுவை எப்போதாவது மகன் கூட்டி வருவான். அது இரண்டு மாதத்திற்கொரு முறையோ ஒரு மாதத்திற்கு ஒரு முறையோ இருக்கலாம். ஃபோனில் தொடர்பு கொள்ளும்போது மகன் இருந்தால் பேரனுடன் பேச வைப்பான். அவள் மட்டும் இருந்தால், ""உங்க மகன் வந்தபிறகு பேரனோடு பேசுங்கள்'' என்று ஃபோனை வைத்து விடுவாள்.

 

தெய்வநாயகி அம்மாள் தன் மகன் வருகிற நாளை மட்டும் காலண்டரில் வட்டமாக அடையாளமிட்டு வைப்பாள். இன்று மாதக்கடைசி ஒருவேளை வரலாம் எனவும் நினைத்தாள். காலண்டரைப் பார்த்தாள். பொங்கலன்று தன் மகன் வந்த வட்ட அடையாளத்தைப் பார்த்தாள். பொங்கலுக்குக் கூட அவன் வீட்டிற்கு அவளைக் கூப்பிடவில்லை. பொங்கல் தன்னோடு இருக்கும் முதியோர்களோடுதான் கொண்டாடினாள். ஏனோ இன்று தன்மகன் தன்னைப் பார்க்க வர மாட்டானா? என்று நினைத்தாள்.

 

சாரதி பானுவிடம் வீட்டிலிருந்து ஆபீஸ்போகும்போதே ""இன்று ரிட்டயர் ஆகும் ஆபீஸர்க்குப் பிரிவு உபச்சார விழா. வர லேட்டாகும்'' என்று சொல்லியிருந்தான்.

 

அவர்கள் வீடு புதிதாக உருவாகியிருந்த நகர். ஆதலால் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தது . பக்கத்து வீடுகளில் என்ன நடக்குமென்று யாரும் அலட்டிக்கொள்வதில்லை. "அனந்த சயனம் காலனிதான்' அது...

மகன் பிரபு மூன்றரை மணிக்கெல்லாம் ஸ்கூல்விட்டு வந்துவிடுவான். மகன் வந்த சிறிது நேரத்துக்கெல்லாம் மூன்றுபேர் திபுதிபுவென உள்ளே நுழைந்தார்கள்.

 

அவள் அவர்களைப் பார்த்தவுடன் பயத்தால் அலற முயன்றபோது சட்டென்று ஒருவன் அவள் வாயைப் பொத்தினான். இன்னொருவன் மகன் பிரபுவின் வாயைப் பொத்தினான். பானு திமிர முயன்றபோது அவளை அலறவிடாது வாயையும் கையையும் கட்டி அருகிலிருந்த ரூமுக்குள் தள்ளி வெளியே தாழ்போட்டான். பிரபுவை வாயைப்பொத்தியவாறே வெளியே ஓடி அவர்கள் வந்த காரில் கொண்டுபோய் போட்டனர். கார் விரைந்தது.

 

பானு கையும் காலும் கட்டப்பட்ட நிலையில், அந்த ரூமிற்குள் விழுந்து கிடந்தாள். மகனுக்கு என்ன நேர்ந்ததோ? எனப் பதைத்தாள். கொள்ளையடித்தார்களா? மகனை என்ன செய்தார்களோ? என மகன் நினைவு வந்தபோது அவள் நினைவை எதுவோ அடைத்து அவள் மயக்கமுற்றாள்.

தெய்வநாயகி அம்மாளுக்கு தான் எதிர்பார்த்ததுபோலவே மகன் வந்து நின்றதும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொண்டு நேரே அம்மாவைப் பார்த்துவிட்டுப் பிறகு வீட்டிற்குச் செல்லலாம் என நினைத்து காப்பகத்திற்கு வந்துவிட்டான்.

 

""நல்லாயிருக்கியாப்பா?'' அம்மா கேட்டபோது, ""ஆமாம்மா'' என்றவன் கண்ணில் நீர் துளிர்த்தது. சிறிது நேரம் அவளுடன் காப்பகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்.

 

""அம்மா இன்னைக்கு எங்கூட வீட்டுக்கு வந்துடு. நாளைக்கு எனக்கும் லீவுதான். சாயங்காலம் உன்னைக் கொண்டுவந்து இங்க விட்டுர்றேன்'' என்று அன்றைக்கு அவனுக்குத் தாய்மேல் அன்பு அதிகமாகப் பொங்கியது. ""இல்லப்பா என் பேரனைப் பார்க்கணும்னு ஆசையாயிருக்கு. நீ கூட்டிட்டு வந்திருப்பேன்னு நினைச்சேன்.

 

நான் உன்கூட வந்து பேரனைப் பார்த்துட்டு பத்துமணிக்குள்ள திரும்பி வந்துர்றேன். இப்ப ஏழு மணிதான் ஆகுது. கார்லதான் போகப்போறோம்'' என்று அவன்கூட வரச் சம்மதித்தாள்.

 

வீடு இருட்டிக் கிடந்தது. சாரதி திடுக்கிட்டான். ""ஏன் லைட் எரியலை?'' அவசரமாகக் காரிலிருந்து இறங்கி உள்ளே ஓடினார்கள். கதவெல்லாம் திறந்திருந்தது. ஸ்விட்சைத் தட்டுத் தடுமாறிப் போட்டான். விளக்குகள் எரிந்தபோது அறையில் எந்த அலங்கோலமும் இல்லை.

 

டீப்பாயில் அவளது செல்போன் இருந்தது. ""பானு... பானு... பிரபு... பிரபு'' இருவரும் கத்தினர். பக்கத்து வீட்டிற்கு ஓடினர். ""ஸôர் ஏதாவது தெரியுமா? ரெண்டு பேரையும் காணோம்'' ஒருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. மீண்டும் வீட்டிற்குள் வந்து எல்லாப் பகுதிகளிலும் தேடினர். பானுவை அடைத்துப்போட்ட ரூமைத் திறந்து விளக்கைப் போட்டபோது அவள் கட்டப்பட்டுக் கிடந்தாள். சாரதி அருகில் சென்று கட்டுகளை அவிழ்த்தான். மயக்கமாயிருந்த அவள் முகத்தில் ஒருவர் தண்ணீர் தெளித்தார். மயக்கம் தெளிந்த அவள் மெல்லக் கண்திறந்து பார்த்தாள்.

 

""என் பிரபு எங்கே?'' எனக் கேட்டாள். எல்லோரும் அதிர்ந்தனர். ஒவ்வொரு அறையாகத் தேடினர். எங்கும் இல்லை. மாடி தோட்டம் ம்ஹூம் அவனை எங்கேயும் காணோம். அவன் நினைவுகள் ஒவ்வொன்றாக வந்து அவளை அலைக்கழித்தன. ""பிரபு இல்லைன்னா நான் எப்படி இருப்பேன்'' அலறினாள்.

அவளை மூன்றுபேர் கட்டிப்போட்டதைக் கூறினாள். ""அவனை என்ன செய்தார்கள்? என்றுதெரியவில்லையே ஐயோ!''...

 

""வேறு ஏதாவது திருட்டுப் போயிருக்குதா பாருங்கள்'' ஒவ்வொரு அறையாகப் போனார்கள். ஒன்றும் களவு போகவில்லை. ""போலீஸ் ஸ்டேஷனுக்குப் ஃபோன் பண்ணுங்கள்.''

 

போலீஸ் சிறிது நேரத்தில் வந்தது. ஒவ்வொரு அறையாகப் பார்த்தார்கள். தடயங்கள் தேடினார்கள். பக்கத்து வீட்டுக்காரர்களை விசாரித்தனர். ஒன்றும் புலப்படவில்லை. ""பையனைக் கடத்திக்கொண்டு போயிருக்க வேண்டும். ஏதாவது ஃபோன் வருதான்னு பார்ப்போம். எல்லா இடத்திலும் தேடுவோம். எல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் சொல்லிடுவோம்.'' சொல்லப்பட்டது.

""இவங்க சொல்ற தகவல்படி சம்பவம் 3.30.க்கு நடந்திருக்கு. இப்போ ராத்திரி பத்து மணியாச்சு. ஏதாவது ஒரு வகையில் தகவல் கிடைக்குதான்னு பார்ப்போம். பணத்துக்காகக் கடத்தியிருக்கலாம்'' ஓர் அதிகாரி மட்டும் அவர்களோடு இருந்தார். மற்ற போலீஸôர் தேடும் பணியை விரைவு படுத்தினார்கள்.

 

பானுவுக்குச் சாரதி ஆறுதல் சொன்னான். தெய்வநாயகி அம்மாவும் ஆறுதல் படுத்தினாள். ""எப்படியும் கிடைச்சிடுவான். கடவுள்ட்ட பிரார்த்தனை பண்ணுவோம்.''

 

பூஜை அறைக்குள் பானுவை அழைத்துச் சென்றார். அங்கு சென்றபோதும் அவளுக்கு நிம்மதியில்லை. அழுது கொண்டிருந்தாள். ""கடவுள் என் பக்கத்துல இருந்தாலும் என் மகன் என் பக்கத்துல இல்லைன்னா எப்படி நான் உயிரோட இருப்பேன்'' அழுதாள்.

 

அதிகாரியும் சாரதியும் மற்றவர்களும் ஃபோனுக்காகக் காத்திருந்தார்கள். சாரதி பிரமைபிடித்துப் போய் இருந்தான். பானுவின் அழுகைச் சத்தம் அவனையும் அழ வைத்தது. இடையே ஃபோன் வந்தாலும் வேறு ஏதாவது இடத்திலிருந்து வந்ததாகவே அமைந்தது. போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஒரு ஃபோன் வந்தது. அதிகாரியிடம் கொடுத்தான். அவர்பேசி முடித்ததும், ""திருச்சிக்குப் பக்கத்துல போலீஸ் செக் பண்ணும்போது சந்தேகத்திற்கு இடமா ஒரு காரையும் அதிலிருந்த டிரைவர் சேர்த்து நாலுபேரும் ஒரு ஐந்து வயதுப்பையனும் இருந்திருக்கிறார்கள். பையன் அப்பா அம்மான்னு உங்க பேரைச் சொல்லியிருக்கான். பணத்துக்காகக் கடத்தியிருக்காங்க. நாம இப்ப இங்கியிருந்து புறப்பட்டு போவோம் வாங்க... ஐந்து மணிநேரம் ஆகலாம்'' என்று சொன்னபோது போலீஸ் உடன் இவர்கள் மூன்று பேரும் புறப்பட்டார்கள்.      

               

கார் திருச்சியை நோக்கி... மகனை நோக்கி... போய்க்கொண்டிருந்தது. பானுவும் தெய்வநாயகி அம்மாவும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். திடீரென்று தெய்வநாயகி அம்மாவின் கைகளிரண்டையும் தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டவள் ""மன்னித்து விடுங்கள் அத்தை. என் மகனைப் பிரிந்திருந்த இந்த நேரத்தில் உங்கள் மகனை உங்களிடமிருந்து கடத்தி நான் மட்டும் ஐந்து வருஷமாக வைச்சிருந்தேனே என நினைத்துப் பார்த்தேன். நான் எவ்வளவு கொடுமைக்காரி'' அவள் கண்ணீர்த்துளி இருவர் கையிலும் விழுந்து இருவர் மனங்களையும் குளிரச் செய்தது.