Wednesday, May 11, 2011

அனுபவங்கள் பேசுகின்றன !

ஜாங்கிரி சாப்பிட்ட பணம் !


என் கணவர் சில நாட்களுக்கு வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், மின் கட்டணத்துக்காக ஆயிரம் ரூபாய் தாள் ஒன்றை என்னிடம் தந்து ''கட்டிவிடு'' என்றார். அதை கைப் பைக்குள் வைத்த நான், அலுவலகம், வீடு என சுழன்றதில் மறந்து போனேன். நல்லவேளையாக பில் கட்டுவதற்கு இறுதி நாளன்று அந்த விஷயம் நினைவு வர, மின்வாரிய அலுவலகம் ஓடினேன். அரை மணி நேரம் வரிசையில் நின்று ஒருவழியாக என் முறை வந்தபோது ஹேண்ட் பேக்கில் இருந்து பணத்தை எடுக்க, அத்துடன் நான்கு நாட்களுக்கு முன் என் அலுவலக மீட்டிங்கில் கொடுத்த ஜாங்கிரியும் சேர்ந்தே வந்தது. ஜாங்கிரியின் எண்ணெய், மின் கட்டண அட்டையையும், அதற்குள் இருந்த ஆயிரம் ரூபாய் தாளையும் பதம் பார்த்திருந்தது. அந்த ரூபாய் நோட்டை வாங்க மறுத்து ''வேற ரூபாய் கொடுங்க'' என்று மின்வாரிய ஊழியர் கேட்க, வேறு வழியில்லாமல் வங்கிக்கு ஒடிச் சென்று பணம் எடுத்து வந்து கட்டினேன். இதன் காரணமாக  அரை நாள் விடுப்பு எடுக்க வேண்டியதாகிவிட்டது!

அதற்கு முன்புவரை கண்டதையும் வாங்கி ஹேண்ட்பேக்கில் வைக்கும் பழக்கமுள்ள நான், அதை அன்றோடு மூட்டைக் கட்டினேன்!


பாண்டு, பத்திரம் - பத்திரம்!

என் நண்பர் ஒருவர், தன் அவசரத் தேவைக்காக தெரிந்தவரிடம் கடன் வாங்கிஇருக்கிறார். அப்போது அதற்காக எழுதிய பாண்டில்,  ரூபாய் 9000 கடன் பெற்றதாக எழுதிக் கொடுத்து, கையெழுத்தும் இட்டுள்ளார். தெரிந்தவர்தானே என்று, தான் எழுதிக் கொடுத்த பத்திரத்தை பெரிதாக செக் பண்ணவில்லை என் நண்பர். இதைப் பயன்படுத்திக் கொண்டு கடன் கொடுத்தவர், 9000-க்குப் பக்கத்தில் இன்னொரு சைபரைப் போட்டு 90000 ஆக்கி விட்டார். காரணம்... எண்களால் எழுதப்பட்ட தொகைக்குப் பக்கத்தில், அதை எழுத்தாலும் எழுத வேண்டும் என்கிற மரபை மறந்ததுதான். இப்போது கோர்ட், கேஸ் என்று அலைந்து கொண்டிருக்கிறார் என் நண்பர். பாண்டு எழுத வேண்டிய சூழலில் அந்தமாதிரியான பாண்டு எழுதுவதில் தேர்ந்தவர்களை வைத்தோ, அல்லது விஷயம் தெரிந்தவர்களைக் கேட்டு எழுதினாலோ இதுபோன்ற மோசடி பிரச்னைகளில் இருந்து தப்பலாமே!


பப்ளிக் பூத்... பயமுறுத்தும் பிரச்னை!  

சமீபத்தில் என்னுடைய தோழி, தன் செல் போனில் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகிவிட்டதால், 'பப்ளிக் பூத்'தில் இருந்து வீட்டுக்குப் பேசி இருக்கிறாள். மறுநாள் அவள் வீட்டுக்கு ஒரு போன் வர, அவளுடைய மாமியார் எடுத்திருக்கிறார். அவரிடம் என் தோழியின் பெயரைச் சொல்லி, ''அவர் இருக்கிறாரா?'' என்று ஒருவர் விசாரித்திருக்கிறார். அந்தக் குரலிலும்... அவர் பயன்படுத்திய வார்த்தைகளிலும் ஏதோ கயமைத்தனத்தை உணர்ந்த தோழியின் மாமியார்... சற்றே சுதாரித்து, ''அப்படி யாரும் இங்க இல்லை'' என்று கட் செய்திருக்கிறார். பிறகு, என் தோழியிடம் அவர் விஷயத்தைச் சொல்ல, அப்போதுதான் நடந்த விபரீதத்தை ஊகித்திருக்கிறாள் என் தோழி. அதாவது, முதல் நாள் பப்ளிக் பூத்திலிருந்து பேசியபோது அருகில் நின்று குறுகுறுவென கவனித்திருக்கிறான் ஒருவன். அவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அவள் அங்கிருந்து அகன்ற பிறகு, அந்த நம்பரை டயல் செய்து பார்த்து, குறித்து வைத்துக் கொண்டு பிறகு, பேசியிருக்கிறான்.

இந்த மாதிரி வீண் வம்புகளைத் தவிர்க்க, பப்ளிக் பூத்களில் நாம் பேசி முடித்தவுடன் அத்தோடு வந்து விடாமல் ஒன்று, இரண்டு என சில நம்பர்களை டயல் செய்து வைத்துவிட்டால், நோ பிராப்ளம் ஃப்ரெண்ட்ஸ்!


 நூறு தக்காளி!







மதுரையில் வசிக்கும் என் மகள், யூ.கே.ஜி. படிக்கும் தன் மகன் அனிஷை அழைத்துச் சென்று, கடையில் ஐந்து ரூபாய்க்கு ஐந்து சாக்பீஸ் வாங்கிஇருக்கிறாள். வீட்டில் வந்து பார்த்தபோது நான்குதான் இருந்திருக்கிறது. ''சரிபார்த்து வாங்கறதில்லையா..? ஏமாளியா இருக்கியே...'' என்று குழந்தைக்கு முன்பாகவே திட்டியிருக்கிறார் அவளுடைய கணவர். விடுமுறைக்காக எங்கள் வீட்டுக்கு வந்திருந்த அனிஷ், என் மருமகளுடன் பக்கத்துக் கடைக்குச் சென்றான். ''தக்காளி என்ன விலை?'' என்று மருமகள் கேட்க... ''நூறு, நாலு ரூபாய்'' என்றிருக்கிறார் கடைக்காரர். அதை வாங்கிக் கொண்ட மருமகள், வீட்டு வாசலில் காலை வைத்த நிமிடமே... முந்திக்கொண்டு துறுதுறுவென என்னிடம் ஓடி வந்தான் அனிஷ்.

அதேவேகத்தில்... ''பாட்டி... எங்கம்மா மாதிரியே அத்தையும் ஏமாளியா இருக்காங்க. கடைக்காரர் நாலு

ரூபாய்க்கு நூறு தக்காளி தராம, மூணே மூணு தக்காளிதான் தந்தாங்க. எண்ணிப் பார்க்காம அத்தை வாங்கிட்டு வந்துட்டாங்க..!'' என்று மழலை மொழியில் புகார் வாசிக்க, அவன் சொன்ன டியூனிலேயே சிரித்தோம் நாங்கள்!