Tuesday, May 10, 2011

நூற்றுக்கு நூறு வாங்கினால்தான் புத்திசாலியா ?

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1
குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி

ஒரு மத்தியான வேளை. பிரபல பள்ளியின் 'கேட்'டுக்கு முன்பாக குழந்தை களுக்கு மதிய சாப்பாடு கொடுக்கக் காத்துக் கொண்டிருந்த அம்மாக்களில் ஸ்ருதியின் அம்மா ஆரம்பித்தார் இப்படி -

''ஸ்ரீஜித் அம்மா, உங்க பையன் மேத்ஸ்ல ரொம்ப கில்லாடியாமே... இன்டர்ஸ்கூல் காம்படிஷன்ல ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கிட்டு வந்தானாமே?!'' என்று கேட்க, ஸ்ரீஜித் அம்மாவின் முகத்தில் பிறவிப் பெரும்பயனை அடைந்த பெருமை!

''உங்க ஸ்ருதிகூட இன்டர்ஸ்கூல் காம்படி ஷன்ல டான்ஸ்ல ஃபர்ஸ்ட்தானே..?!'' என்று அவர் கேட்க,

''அட, நீங்க வேற... படிக்கற பாடத்துல ஃபர்ஸ்ட் வர்றதுதானே இன்டெலிஜென்ஸ்! அதுவும் மேத்ஸ் லைனா... அவனுக்கு மினி IQ (Intelligence Quotient)ரொம்ப அதிகம். அவனை அபாகஸ் கிளாஸ் ஏதாச்சும் அனுப் பறீங்களா..?'' என்று ஆரம்பித்தவர்... அவன் என்ன சாப்பிடுகிறான், எத்தனை மணி நேரம் படிக்கிறான், டி.வி. பார்க்கிறானா என்றெல் லாம் கேள்விகளாக அடுக்கிக் கொண்டே போனார்.

நம்மில் பெரும்பாலானவர்கள் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்குவதைத்தான் உண்மை யான புத்திக் கூர்மை என்று நினைக்கிறோம். உண்மையான புத்திக் கூர்மை என்பது ஒட்டுமொத்த விஷயங்களிலும் ஞானத்துடன் இருப்பது. உளவியல் மருத்துவ அறிஞர் ஹாவர்ட் கார்ட்னெஸ், ''ஒருவருடைய ஐ.க்யூ-வை சோதித்துப் பார்ப்பதற்கு அவருடைய மொழி அறிவையும், லாஜிக்கல் அறிவையும் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. காரணம், இவை மூளையின் இடது பக்கத்தில் இருக்கும் திறன்கள். மூளையின் வலது பக்கத்திலும் பல திறன்கள் இருக்கின்றன. அவற்றையும் கணக்கில் எடுத்தால்தான் ஒட்டுமொத்த ஐ.க்யூ-வையும் கணக்கிட முடியும்'' என்கிறார்.


எஸ்டிமேட், டெக்னிகல் திறன்கள் என்று கட்டடக் கலையின் நுணுக்கங்கள் அத்தனையும் விரல் நுனியில் வைத்திருக்கும் அந்த மேஸ்திரியைப் புகழாதவர்கள் இல்லை. பிரபல கல்லூரியில் கட்டடக் கலை பற்றி நான்கு வருடங்கள் படித்து வந்தவரின் டெக்னிகல் திறனைவிட, அந்த மேஸ்திரியின் திறன் வியப்பளிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால், காலேஜில் படித்தவர் என்பதற் காகவே, மேஸ்திரியைவிட அவரின் ஐ.க்யூ-தான் அதிகம் என்று சொல்ல முடியுமா? 'முடியாது' என்பதே உண்மை.

சரி, அப்படியானால் வலது பக்க மூளையில் இருக்கும் திறன்கள் என்ன என்பதுதானே உங்கள் கேள்வி? 'கைனஸ்தெடிக் இன்டலி ஜென்ஸ்' - ஸ்போர்ட்ஸ், டான்ஸ் போன்ற வற்றில் நாட்டம், 'மியூஸிக்கல் இன்டலி ஜென்ஸ்' - பாடல், இசை, இசைக் கருவிகள் இசைப்பதில் நாட்டம், 'ஸ்பேஷியல் இன்டலி ஜென்ஸ்' - சிற்பக்கலை, கட்டடக்கலை போன்றவற்றில் நாட்டம், 'நேச்சுரலிஸ்ட்  இன்டலிஜென்ஸ்' - இயற்கை பற்றிய படிப்புகளில் நாட்டம், 'இன்டர் பர்சனல் இன்டலிஜென்ஸ்' - அரசியல், கவுன்சிலிங், சேல்ஸ் போன்றவற்றில் நாட்டம், 'இன்ட்ரா பர்சனல் இன்டலிஜென்ஸ்' - ஆராய்ச்சி, எழுத்து, பத்திரிகை, தொழில் இவற்றில் நாட்டம், 'எக்ஸ்டன்ஷியலிஸ்ட் இன்டலி ஜென்ஸ்' - தத்துவம், ஆன்மிகம் இவற்றில் நாட்டம்... இவை அனைத்தும் ஐ.க்யூ-வில்தான் அடங்கும்.

உங்கள் வீட்டு செல்ல வாண்டு, வீட்டுக்குள் பாடிக் கொண்டே இருந்தால்... அவளுக்கு மியூஸிக்கல் இன்டெலிஜென்ஸ் இருக்கிறது என்று அர்த்தம். ஒரு பாட்டைக் கேட்கும்போதே, ''இந்த மாதிரி ட்யூன்ல ஏற்கெனவே இப்படி ஒரு பாட்டு இருக்குதே'' என்று கண்டுபிடித்து அவள் சொன்னால், ''அப்படியா..?!'' என்று நீங்கள் அதை ஆர்வமாகக் கேட்டாலே, அவளின் திறமை முன்னேற்றத்தின் முதல் படியை எடுத்து வைக்கும்.

ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு எந்தத் திறனில் இன்டலிஜென்ஸ் அதிகம் என்று உணர்வதில்லை. லாஜிக்கல் இன்டலிஜென்ஸ், அதாவது மேத்ஸ் நன்றாகப் போடும் குழந்தைக்கு, இங்கிலீஷ் பாடம் என்றால் வேப்பங்காயாக கசக்கலாம். ''மேத்ஸ்ல மட்டும் நூத்துக்கு நூறு வாங்கினா போதுமா சிநேகா..? தமிழ், இங்கிலீஷ் ரெண்டுலயும் வாங்கி னாத் தானே டோட்டல் மார்க் அதிகம் வரும்...'' என்று அந்தப் பாடத்தை படிக்கச் சொல்லி குழந்தைக்கு அதிகமான அழுத்தம் கொடுத்தால்... அந்தப் பாடத்தின் மீது வெறுப்பே வளரும். அதைப் பற்றி குறைந்தபட்சம் என்ன தெரிந்து இருக்க வேண்டுமோ... அதை அவள் தெரிந்து கொள்ள கூடுதல் முயற்சிகளை நீங்களும் செய்யலாமே!

ஆகையால், இனி கவனியுங்கள்... உங்கள் குழந்தையின் இன்டலி ஜென்ஸ் எதில் அதிகமிருக்கிறது என்று! அதை வளர்ப்பதற்கான வழிகள் என்னென்னவென்று!