Tuesday, June 7, 2011

பாசத்தால் ஏமாந்தவள்

தனியார் பஸ்ஸில் கண்டக்டராக இருந்த என் மாமா, தன் மனைவியின் பத்து பவுன் நகையை விற்று, டாடா சுமோ வண்டி வாங்க முயற்சி செய் தார். ஆனால், பணம் போதவில்லை என்பதால், ''உங்கிட்ட பணம் இருந்தா கொடும்மா. இல்லைனா, என் பொண்டாட்டி நகையை வித்து இந்த அளவுக்கு முயற்சி எடுத்தது எல்லாம் வீணாப் போயிடும்'' என்று என்னிடம் கண்கலங்கினார்.

நான் வாக்கப்பட்டதும் மிடில் கிளாஸ் ஃபேமிலிதான். என்றாலும், தாய் உறவு

மாமாவாயிற்றே என்ற பாச உணர்ச்சியில், கணவருக்குத் தெரியாமல் என் நகைகளை அடகு வைத்து 75 ஆயிரம் கொடுத்தேன். சந்தோஷமாக புது வண்டி வாங்கினார். ஆனால், என் சந்தோஷம்தான் தொலைந்து போனது. ஆம்... மாமா இப்போது கையூன்றி மேலே வந்து விட்டார். ஆனால், என் நகைகளை மட்டும் இன்னும் திருப்பித் தரவில்லை. கேட்டால், ''உன் நகையை எடுத்துட்டு நான் ஓடிடவா போறேன்..?'' என்கிறார் வெறுப்புடன். அவர் மனைவியிடம் கேட்டால், ''எங்கிட்ட கேட்டா கொடுத்தீங்க..?'' என்று தெனாவட் டாகப் பேசுகிறார். என் கணவரிடமும் விஷயத்தைச் சொல்ல முடியாமல், நகையையும் மீட்க முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறேன்.

உறவுகளுக்குள் பணம், நகை உதவி வேண்டாம்... அதுவும் கணவருக்கு தெரியாமல் வேண்டவே வேண்டாம் தோழிகளே!