Tuesday, June 7, 2011

கர்வம்


ந்தச் செயலையும் தன்னால் செய்ய முடியும் என்பது தன்னம்பிக்கை. தன்னால் மட்டுமே செய்யமுடியும் என நினைப்பது கர்வம். தனது திறமை அல்லது பெருமையை தானே உயர்வாக நினைத்துக்கொள்வதைக் கர்வம் என்பார்கள். தங்களது அழகு, செல்வம், உத்தியோகம், அதிகாரம், திறமை, உடல் நலம் ஆகியவற்றால் கர்வம் கொள்பவர்கள் உண்டு.

தன்னை அறிவாளியாக நினைத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைப்பதுதான் கர்வத்தின் வெளிப்பாடு. தன்னம்பிக்கை நேர்மறையான சிந்தனை; இதனால் விளைவது நன்மை மட்டுமே! கர்வம் என்பது எதிர்மறையான சிந்தனை; இதில் விளைவது தீமைகளே!

வாரியார் சுவாமிகள், அழகான கதையன்று சொல்வார்.

ஒரு ஊரில், பெரிய மனுஷன் ஒருத்தர், ஊர்க்காரர்கள் விசேஷங்களுக்கு தான் செல்லாமல், தனது செருப்பை மட்டும் அனுப்பி வைப்பாராம். தனது செருப்பு வந்தால், தான் வந்ததுக்குச் சமானம் என்பது அவரது நிலைப்பாடு. அந்த அளவுக்குக் கர்வம். அவர் இறந்தபோது, ஊரார் எவரும் அவரின் வீட்டில் இல்லை. அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதற்கு அடையாளமாக, அவரின் வீட்டைச் சுற்றி, ஊரில் உள்ளவர்களின் செருப்புகளே கிடந்தன!

தான- தருமங்கள் செய்யும் பலரில், ஒரு சிலர் மட்டும் அதனை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்வார்கள். அது, கர்வத்தின் வெளிப்பாடு. கோயில்களில் வெளிச்சத்துக்காக உபயமாக வழங்குகிற டியூப்லைட்டுகளில்கூட தங்களின் பெயர்களை எழுதி, புகழுக்கு வெளிச்சம் தேடிக் கொள்பவர்களும் இருக்கின்றனர். எல்லை மீறாத கர்வம், எவருக்கும் எரிச்சலைத் தராது. தீமை பயக்கும் கர்வத்தைக் கொண்டுள்ள மனம், பிறரை மதிக்காது; அவர்களின் வெற்றிகளை அலட்சியப்படுத்தும்; மட்டம் தட்டிப் பேசும்; சகிப்புத்தன்மை என்பது மருந்துக்கும் இருக்காது; கூட்டு முயற்சியில் கைகோக்காமல், விலகியே இருக்கும்; எங்கும், எதிலும் தன்னையே முன்னிலைப்படுத்தி அலட்டிக்கொள்ளும். ஒரு மனிதனின் அனைத்து துர்க்குணங்களுக்கும் அஸ்திவாரம், கர்வம்தான்!

குருக்ஷேத்திர யுத்தம் முடிவுக்கு வந்தது. அர்ஜுனன் மனதுக்குள், அவன் பெற்ற வெற்றி உற்சாகத்தைத் தர... அடுத்த கணம், அதுவே கர்வமாக உருவெடுக்கிறது. 'எத்தனை பாணங்களை எய்தோம்; எத்தனை எதிரிகளை வென்றோம்! இதோ.. இன்று தன்னிகரில்லாத வீரனாக நிற்கிறோம்!' என்று இறுமாப்புடன் யோசித்தவன், தேரில் இருந்து இறங்க முனைந்தான். கைலாகு கொடுத்துத் தேரில் இருந்து இறங்குவதற்குச் சாரதி உதவ வேண்டும் என்பது மரபு. ''கிருஷ்ணா, கொஞ்சம் கை கொடேன். தேரை விட்டுக் கீழிறங்கவேண்டும்'' என்றான்.

அவனது மனஓட்டத்தை அறியாமல் இருப்பாரா ஸ்ரீகிருஷ்ணர்?! மனதுக்குள் சிரித்துக் கொண்டார். ''இத்தனைக் காலம் தேரினைச் செலுத்தி, களைப்பாகிவிட்டேன். நீயே இறங்கிக்கொள்ளேன்'' என்றார். அர்ஜுனனும் சம்மதித்தான். ஆனால், கர்வம் மட்டும் இறங்கினபாடில்லை. வெற்றி மமதையுடன் கீழே இறங்க... அவனையடுத்து ஸ்ரீகிருஷ்ணரும் கீழே இறங்கினார்.அவ்வளவுதான்... தேர் குபீரென்று தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்துபோனது. அதிர்ந்துபோனான் அர்ஜுனன்.

மெள்ளப் புன்னகைத்தார் ஸ்ரீகிருஷ்ணர். ''அர்ஜுனா! உனக்கு நினைவிருக்கிறதா?

போரில் உன் மீது கர்ணன் நாகாஸ்திரத்தை எய்தபோது, உடனே தேரை கீழே அழுத்தினேன்; உன் தலை தப்பியது. அந்த பாணத்தின் பாதிப்பை, கொடியில் இருந்த அனுமன் இதுவரை ஏற்றிருந்தான். இப்போது தேரை விட்டு நான் இறங்கியதும், அனுமனும் இறங்கிவிட்டான். அஸ்திரம் தனது வேலையைக் காட்டிவிட்டது. இதோ, தேர் சாம்பலாகிப் போனது!'' என்றார். எரிந்து சாம்பலானது தேர் மட்டுமா? அர்ஜுனனின் கர்வமும்தான்! ஸ்ரீகிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டான்.

''மற்றவர்கள் அத்தனை பேரும் மண்டைக்கனம் பிடித்து அலைகிறார்கள்; நான் அவர்களைப் போல் இல்லை; நான் கர்வம் அற்றவன்'' என்று ஒருவன் பெருமிதத்தோடு மனசுக்குள் தன்னைத் தானே பாராட்டிக் கொள் வானேயானால், அவனும் கர்விதான்! உஷார்!