Friday, July 8, 2011

தாம்பத்தியம் - 8

தாம்பத்தியம் - 8

மன நிறைவு

மனைவி, கணவன் இருவரிடமே இருந்த நிறை,குறைகளை முடிந்தவரை பலவாறு விவரித்து விட்டேன்.  ஆனால் ஒரு குடும்பம் நல்லா நடப்பதற்கு இவற்றை பார்ப்பது மட்டுமே சரியாக  இருக்காது,   இதில் யார் பக்கம் தவறுகள் அதிகமாக இருக்கிறது என்றும், யார் சரி செய்து கொள்ள வேண்டும் என்பதையும் பார்க்கவேண்டும்.  

நான் முன்பே சொன்ன மாதிரி பெண்ணால் மட்டும்தான் பிரச்னை எது வந்தாலும் அதை நன்கு அலசி ஆராய்ந்து ஒரு நல்ல தீர்மானத்துக்கு  விரைவிலும் சுலபமாகவும் வரமுடியும்.  அதேபோல்தான் ஒரு குறையோ அல்லது அனைத்து குறைகளையுமே  ஒரு கணவன் பெற்று இருந்தாலும் அந்த பெண் , அந்த மனைவி நினைத்தால் , மனது வைத்தால் கண்டிப்பாக தனது கணவனை சரிபடுத்த முடியும் .  

அந்த மனைவி என்னால் மாற்ற முடியவில்லை என்று சொன்னால், ஒன்று மனைவி குறை சொல்லும் அளவிற்கு, அந்த கணவன் மீது தவறு இல்லாமல் இருக்கும் அல்லது அந்த பெண் திருத்த முயற்சிக்கவில்லை என்றுதான் அர்த்தம்....??! யாருமே குறைகளுடன் தான்  இருக்கவேண்டும் என்று வரம் வாங்கி பிறப்பது இல்லை, வளர்ந்த சூழ்நிலையால் இடையில் ஏற்பட்ட பிழை தான் இக்குறைகள்!! பெண் நினைத்தால் மாற்ற  முடியும்!!

                      நல்லவை ஆவதும் பெண்ணாலே....!
                      கேட்டவை அழிவதும் பெண்ணாலே. ...!!

இப்படித்தான் அந்த வார்த்தைக்கு அர்த்தம் இருந்து இருக்க வேண்டும்!  

ஆண்களை மட்டுமே குறை சொல்வதை விடுத்து, பெருந்தன்மையாக விட்டு விட்டு,  நம் குடும்பம் சந்தோசமாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்,  என்பதை பற்றி மட்டும் கவனித்து சரி செய்து கொண்டால் உங்கள் தாம்பத்தியத்தில் தினமும் தீபாவளிதான்.....!!

அன்பு செலுத்துவதில் அன்னையாகவும், பரிவு காட்டுவதில் சகோதரியாகவும், ஆலோசனை சொல்வதில் தோழியாகவும், நாலு சுவற்றுக்குள் மனைவியாகவும் நீங்கள் நடந்து கொள்ளும்போது எப்படிப்பட்ட கணவனும் உங்கள் மேல் உயிரையே வைப்பான்....!   இந்த வார்த்தைகள் பழையவைதான், ஆனால் எந்த காலமும் பொருந்த கூடியவை!!

ஒரு சிலரின் வீட்டில் திருமணம் ஆன புதிதில் மனைவி செலுத்தும் அதிக அன்பே கணவரின் மனதில் பின்னாளில் வெறுப்பை ஏற்படுத்தி விடும் ??!! அது எப்படி ?  ஒரு உண்மை சம்பவம்.....

திருமணம் ஆன புதிதில் கணவன், மனைவி இருவரில் அந்த மனைவி தனக்கு தன் பிறந்த வீட்டில் கிடைக்காத அன்பை எல்லாம் சேர்த்து மொத்தமாக கணவன் மேல் செலுத்த தொடங்கினாள்.  அன்பை கொடுக்கவில்லை...... அன்பால் அவனை மூழ்கடித்தாள்...... !! அவன் உலகை மறந்தான்.....! மனைவியின் மெய் அன்பால் திணறித்தான் போனான்!!   

எல்லாம் ஒரு குழந்தை பிறக்கும் வரைதான்..?  அவளது பெரும் பொழுதுகள் அந்த குழந்தையுடன் தான் கழிந்தன. இருந்தும் தன் கணவனுக்கு செய்யும் பணிவிடையில் எந்த குறையும் வைக்க வில்லை.   அவள் எப்போதும் போல் அதே அளவு அன்பைத்தான் அவன் மேல் செலுத்தினாள்.  ஆனால் அவன் மனதிலோ வெறுமை படர்ந்தது.  தனக்கு கிடைக்கவேண்டிய அன்பில் பங்கு போட வந்த ஒரு எதிரியாகத்தான், தன் குழந்தையை பார்க்க தொடங்கினான்.  மனைவி பேச அருகில் வந்தால்,  வெறுப்பை கொட்டியது அவனது நாவு ...! 

                  காரணம் அறியா பேதை அவள்....
                         கெஞ்சினாள்.... 
                  குழைந்தாள்... பரிதவித்தாள்...
                         ஒருநாள் பகல் பொழுதில் மனைவி
                   உணவு வைத்து கொண்டு, 
                         இருந்த நேரம்,  குழந்தை அழுததால் 
                   விரைந்து ஓடினாள் தூக்குவதற்கு,  
                          அதற்கு முன் எழுந்த அக்கணவன் 
                   சிறிதும் யோசிக்காமல் எடுத்து, 
                          வீசி எறிந்தான் குழந்தையை தரையில்...? 
                    மனைவியோ பதறி அதற்கு முன் 
                           தரையில், தான் விழுந்து அக்குழந்தையை 
                    அவள் மடியில் தாங்கினாள்....????!!  

விழுந்த அதிர்ச்சியில் குழந்தை அழவில்லை சிறிது நேரம்...? பின் இவள் சுதாரித்து , தூக்கிக்கொண்டு ஓடினாள் டாக்டரிடம்...?? 

அதற்கு பிறகு தன் கணவனை பயத்துடன் பார்க்க தொடங்கி விட்டாள். ஆனால் அந்த கணவனிடம் எவ்வித மன பிறழ்ச்சியும் இல்லை.  அலுவலகத்திலும் நன்கு பணிபுவதால்  அங்கே அவனுக்கு மிகவும் நல்ல பெயர்... !? எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன், உறவினர்கள் நண்பர்களிடமும் நல்ல பெயர்தான்....!!  பின் ஏன் இப்படி???

மனைவியின் அதிக அன்பு கூட ஒருத்தரை இப்படி மாற்றுமா??  பதில் தெரியவில்லை. குழந்தைக்கு 8  மாதம் ஆகும் வரை  பொறுத்து பார்த்த, அந்த மனைவி தனது பெற்றோர்களை வரவழைத்து தனது வீட்டிற்கு பக்கத்தில் ஒரு வீட்டை பார்த்து அவர்களை அங்கே இருக்குமாறு வேண்டி கொண்டு தனது குழந்தையை அவர்களிடம் விட்டுவிட்டாள்.  கணவன் வீட்டில் இருக்கும் வரைக்கும் ஒன்னும் தெரியாததுபோல் இருந்து கொண்டு அவன் அலுவலகம் சென்றதும் குழந்தையை பார்க்க ஓடிவிடுவாள்.  கணவனிடம், 'ஊரில் இருக்கும் பெற்றோரிடம் குழந்தையை விட்டு விட்டேன், உங்களை மட்டும் கவனித்து கொள்கிறேன் அது போதும் எனக்கு' ,என்று கூறி விட்டாள். 

இப்படியே இரண்டு மாதம் போய்விட்டது. கணவனும் மனைவி தன் மேல் இவ்வளவு அன்பு வைத்து இருக்கிறாளே  என்ற பெருமிதத்தில் மனம் நிம்மதி அடைந்து விட்டான். அவனுக்குள்ளும் குழந்தை மேல் பாசம் இல்லாமல் எப்படி இருக்கும் ?  தனக்கு கிடைக்க வேண்டிய அன்பு எங்கேயும் போக வில்லை என்று திருப்தியில் ஒரு நாள் 'குழந்தையை தூக்கி வருவோம்' என்று மனைவியை அழைக்க இவளோ மகிழ்ச்சி தாண்டவமாட, ' நீங்க வேலைக்கு போங்க .  நான் போய் அழைத்து வருகிறேன்' ,என்று அவனை வழியனுப்பி வைத்துவிட்டு குழந்தையையும், பெற்றோர்களையும் அழைத்து வந்து விட்டாள் .

இது ஏதோ கதை இல்லை என் நெருங்கிய உறவினர் வீட்டில் நடந்த உண்மை சம்பவம் தான். அவள் அனுமதி பெற்றே இதை எழுதுகிறேன்.

பெண் மனது வைத்தால் எந்த பிரச்சனையையும் சரி பண்ண முடியும் என்பதற்காகதான் இதை ஒரு உதாரணமாக சொல்ல வேண்டி வந்தது.


விவாகரத்து கேட்டு கோர்ட்க்கு போக வேண்டிய ஒரு குடும்பம் இன்று சந்தோஷ கடலில் திளைக்கிறது !!  

பெண்ணுரிமை , பெண் அடிமைத்தனம்

ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கைக்கு மேலே குறிப்பிட்ட இந்த வார்த்தைகள் அவசியம் இல்லை என்பது என் கருத்து. குடும்பத்தில்  ஆணை விட நான் எந்த விதத்தில் குறைந்து விட்டேன் என்று ஒவ்வொரு பெண்ணும் கொடி பிடித்தால் அங்கே குடும்பம் நடக்காது.  தினமும் பட்டிமன்றம்  தான் நடக்கும்!!  வெளியில் வேண்டுமானால் உரிமை கேட்டு சண்டை போடட்டும். வீட்டில் அது தேவை இல்லை.  

நாலு சுவற்றுக்குள் தன் கணவனுக்கு கட்டுப்பட்டு  இருப்பதால் யாரும் உங்களை குறைத்து மதிப்பிட போவதில்லை. இதில் அடிமை, அடக்கு முறை என்ற வார்த்தைக்கு வேலை இல்லை. அன்பால் கட்டுண்டு,   அப்படி வீட்டில் இருப்பவர்கள் தான் வெளியில் ராணியாக உலா வருகிறார்கள்.

 "கொண்டவன் துணை இருந்தால் , கூரை ஏறி கத்தலாம்..!!!"  -நன்றி ஆனந்தி 

தவறான கண்ணோட்டம்

ஒரு பெண் ஒழுக்கத்தில் தவறி விட்டால், உடனே யாரும் இந்த 'பெண்களே இப்படித்தான்' என்று மொத்தமாக தூற்றுவது இல்லை. ஆனால் ஆண்கள் அதே தவறை செய்தால் நம் பார்வையே வேறு விதமாக இருக்கிறது.  இந்த பட்டியலில் தனது கணவனையும் சில பெண்கள் சேர்ப்பதை பார்க்கும் போது தான் ஆண்கள் மேல் பரிதாபம் ஏற்படுகிறது.  என்ன பாவம் செய்தார்கள்? இந்த ஆண்கள்..!   

அவர்களுக்கு எப்பவும் அதே எண்ணம் தான் இருக்குமா?  வேற ஒன்றை பற்றியும் அவர்கள் நினைக்க மாட்டார்களா?  இல்லை அவர்கள் பிறந்ததே அதற்குத்தானா?  இந்த மாதிரியான எண்ணம் என்று மாறுமோ தெரியவில்லை??  

ஒரு 50   வயது அம்மாள் ஒருவரிடம் அவர்களது திருமணம் ஆன மகளை பற்றி விசாரிக்கும் போது , 'இருவரும் எப்படி இருக்கிறார்கள் ? பிரச்சனை ஒன்று இல்லையே ' என்று நான் சாதாரணமாக கேட்க "அவர்களோ அவளுக்கு என்ன அவனே கதி என்று இருக்கிறாள், ரொம்ப நல்லவனாம், அடிக்கடி சொல்லி மாய்ந்து போகிறாள்.  அந்த பெருமையில் வீட்டிற்கு நான் போனாலும் என்னிடம் சரியாக பேசுவதில்லை. இதெல்லாம் எவ்வளவு காலத்திற்கு, இவள் பேச்சை கேட்பான்?  எல்லாம் இவளுக்கு இளமை இருக்கும் வரைக்கும் தான்" என்று அவர்கள் அடுக்கி கொண்டே போக நான் வெறுத்து விட்டேன்.  

ஒரு தாயே இப்படி பேசுவார் என்று எதிர் பார்க்கவில்லை என்பதை விட ஆண்களை பற்றி அவர்கள் சொன்ன வார்த்தையை ஜீரணிக்க முடியவில்லை. வயதான காலத்திலும் பல தம்பதியர் எதை வைத்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்? பரஸ்பர அன்பினால் அல்லவா? புரியாத இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியபோவதில்லை. 

ஆண்களுக்கும் எல்லை கோடுகள் இருக்கின்றன. அவர்களும் ஒரு தாயின் வயிற்றில் உருவானவர்கள் தான், சகோதரிகளுடன் பிறந்தவர்கள் தான்.  ஒரு சிலர் தவறு செய்தார்கள் என்பதற்காக ஒட்டு மொத்த ஆண்களையும் அதே பார்வையில் பார்ப்பது முட்டாள்தனம் என்பது தான் என் கருத்து.