Friday, July 8, 2011

தாம்பத்தியம் - 9

தாம்பத்தியம் - 9

திருமண பந்தம் 

இப்பந்தம் இருவரை மட்டும் இணைக்கும் மண விழா இல்லை, இரு குடும்பங்களை இணைக்கும் திருவிழா.  இனிமையான இந்த விழாவில்தான் எத்தனை சாஸ்திரங்கள், சம்பிராதயங்கள் !! ஆச்சரியமான பல சடங்குகள்....!! அணியும் உடைகள் முதல் மண்டபம் வரை பெற்றவர்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள்.  ஆண், பெண் இருவரின் வாழ்விலும் ஒரு முக்கியமான கால கட்டமே இந்த திருமணம்தான்.  

திருமணதிற்கு முன் வாழும் வாழ்க்கை நம் பெற்றோர்களின்  விருப்பத்திற்கு ஏற்றார் போல்தான்  இருக்கும் .  அவர்கள் சேர்த்துவிடும் பள்ளி, கல்லூரிகளில் தான் நமது படிப்பு தொடரும், அவர்கள் எடுத்து கொடுக்கும் உடையைத்தான் உடுத்துவோம், நேரம் கழித்து வீட்டிற்கு போனால் டோஸ் கண்டிப்பாக இருக்கும்.  நமக்கு எது விருப்பம் என்று பார்த்து முடிவு செய்வார்கள் .  

திருமண வயது வந்ததையும் கவனித்து தகுந்த நேரம் பார்த்து  வரன் பார்க்க தொடங்கி விடுவார்கள்.  இப்ப உள்ள சூழ்நிலையில்  நம் விருப்பத்தையும்  கேட்க கூடிய  கூடிய   பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.   வரன் பார்க்கும் அந்த நேரத்தில் இருந்தே பெற்றோர்களின் படபடப்பு அதிகரித்து விடும்.  அதுவும் பெண்ணை பெற்றவர்களின் நிலையை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.  நல்ல  குணமுள்ள வரன் கிடைக்க வேண்டுமே என்று தவமே  இருப்பார்கள்....!!

பெண் பார்க்கும் வைபோகம்

பல வரன்களின் புகைபடங்களையும்  சரி பாத்து கடைசியில் தங்கள் தகுதிக்கு ஏற்றாற்போல்  ஒன்றை முடிவு செய்து  பெண் பார்க்க ஏற்பாடு செய்கிறார்கள்.    பெண் பார்க்க வருகிறார்கள் என்றவுடன் தனியாக பெண்ணிற்கு அலங்காரம்  செய்து, வசதி குறைந்தவர்கள் தங்கள் வீட்டில் நகை குறைவாக இருந்தாலும்  அக்கம்பக்கம் வாங்கியாவது  பெண்ணின் கழுத்தில் அணிவித்து தயார் செய்து வைப்பார்கள்.  டிபன், காபி என்று அனைத்தும் தயார் நிலையில் இருக்கும். இந்த தடபுடல் ஏற்பாடு சில பெண்களுக்கு பலமுறை கூட நடந்தேறும்.

வரதட்சணை என்னும் அரக்கன்

உறவினர் புடை சூழ மாப்பிள்ளை வந்து இறங்குவார்.  சம்பிரதாயமான பேச்சுகள் முடிந்ததும் பெண்ணை பார்ப்பார்கள்.   பெண்ணை பிடித்து விட்டாலும்,  மற்ற கொடுக்கல் வாங்கலில்  திருப்தி  ஏற்பட்டால் தான் சம்மதம் சொல்வார்கள்.  பையனை வளர்த்து படிக்க வைத்ததுக்கும் சேர்த்து ஒரு கணக்கு போட்டு மொத்த தொகையை சொல்வார்கள் .   (ஆனால் இந்த மாதிரி நேரத்தில் எந்த பெண் வீட்டாரும், "  உங்க பையனை வளர்த்தது உங்க கடமைதானே,  அதுக்கு நாங்க ஏன் பணம் கொடுக்கணும் " , என்று கேட்பதே இல்லை.)  

(பதிலுக்கு இவர்களும் " எங்க பெண்ணையும் வளர்த்து படிக்க வைத்து பத்தாதுக்கு ஒரு வேலையை வேற வாங்கி கொடுத்துள்ளோம், திருமணம்  முடிந்ததும், அவளுடன் சேர்த்து  அவள் சம்பளத்தையும் நீங்கதான வாங்க போறீங்க ? அதனால் எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு தொகையை நீங்க தான் எங்களுக்கு கொடுக்கணும் " என்று ஏன் கேட்பது இல்லை....?!!?)

காலங்காலமா தொடர்ந்து வரும் சந்தையில் மாட்டை விலை பேசுவது  மாதிரியான இந்த பழக்கத்தை யாரும் மாற்ற  கூடாது என்ற பிடிவாதத்தில் இருக்கும் போது யார்தான் என்ன சொல்லமுடியும்?  (வாங்குபவர்கள் மீது தவறா இல்லை கொடுப்பவர்கள் மீது தவறா )   இந்த பேச்சு வார்த்தைகள் பெண் வீட்டாரையும், பையன் வீட்டாரையும் ஒருவேளை திருப்தி படுத்தினாலும், அந்த நேரம் யாரும் ஒன்றை யோசிப்பதே இல்லை.   

அது  "சம்மந்தப்பட்ட அந்த பெண்ணின் மனநிலை!!".  தான் ஒரு பலிகாடாக மாற்றபடுவதை எந்த பெண்ணும் விரும்பவே மாட்டாள்.   இந்த விசயத்தில் அவள் சூழ்நிலை கைதியாகவே இருக்கிறாள்.  அதிக அளவில் பாதிக்கபடும் அவள்,  அதை அப்படியே திருமணத்துக்கு பின்னால் எதிரொலிக்கிறாள்.  இதுதான் பல மாமியார் மருமகள் சண்டைக்கான பிள்ளையார் சுழி என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை என்பதுதான் கொடுமை.     

அதைவிட கணவனை வரதட்சணை என்னும் ஒரு விலையை கொடுத்துதான் வாங்குகிறாள்.....! அப்படி இருக்கும்போது வாங்கியவள் அவள் விருப்பம் போல்தான் அந்த கணவனை நடத்தக்கூடும் ....!!  இதை ஜீரணிக்க முடியாவிட்டாலும் இன்றைய யதார்த்தம் இதுதான்!!  (எல்லா பெண்களையும் குறிப்பிடவில்லை)  பெற்றோர்கள் கேட்கும்  வரதட்சணை என்ற  அரக்கனால் ஒருவகையில் மறைமுகமாக பாதிப்படைவது அவர்களது மகன்தான்...!   தனது தாயாராலும் மனைவியாலும் பந்தாடபடுவது அவன்தானே....!!? 

எந்த பெண்ணும் வெளிபடையாக தனது  வெறுப்பிற்கு காரணம் இதுதான் என்று கூறுவது இல்லை.  அதனால் சம்மந்த பட்டவர்கள் பெண்ணின் குணத்தையும், அவளின் பிறந்த வீட்டு வளர்ப்பையும் குறை சொல்லி சமாதானம் அடைந்து கொள்கிறார்கள் அல்லது எதிர்த்து பிரச்சனை பண்ணுகிறார்கள்.  முடிவு கணவன் மனைவி உறவில் விரிசலில் கொண்டு போய் விடுகிறது....!!

இன்று தாம்பத்தியம் சீர்குலைய இந்த வரதட்சணை பிரச்னை ஒரு பெரிய காரணமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.  கணவன், மனைவிக்கு இயல்பாக இருக்க கூடிய பரஸ்பர அன்பையே இது கெடுக்கிறது.  சில பெற்றோர்களும் மகளுக்கு திருமணம் முடித்ததும்  தங்களது கடமை முடிந்து விட்டதாக முடிவு செய்து அதற்கு பின் தன் மகள் அங்கு வாழும் வாழ்க்கை எத்தகையது என்று கவனிப்பதே இல்லை.  

இதைவிட முக்கியமாக வரதட்சணை கொடுமை என்று அவலம் வேறு உள்ளது.
வசதி குறைந்தவர்கள் வீட்டில் தான் என்று இல்லை, சில மிக வசதி படைத்தவர்களின் வீட்டிலும் இந்த கொடுமை நடந்து கொண்டுதான்  இருக்கிறது !!?