Tuesday, August 23, 2011

ஆரோக்கிய உடம்பே ஆண்டவனின் சந்நிதி!

''ஆரோக்கியமும் ஆன்மிகமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கிறது. இறைவழிபாட்டில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்போது நம்மை அறியாமலேயே துர்க்குணங்கள் வெளியேறிவிடுகின்றன. தூய்மையான உள்ளம் கடவுள் வாழும் இல்லம் அல்லவா?

விரதம், தியானம், யாத்திரை, உணவுக் கட்டுப்பாடு என்கிற ஆன்மிக வாழ்க்கைமுறையே உடல் ஆரோக்கியத்துக்கான வழி! எனவே, வாழ்வின் ஆதாரமாக விளங்கும் உடலை பேணிக் காப்பதே, ஆன்மிகச் சேவைதான்!'' - எளிமையாகப் பேச ஆரம்பிக்கிறார் 'முதியோர் சிறப்பு மருத்துவர்'          வி.நடராஜன்.

''விரத நாட்களில், அசைவ உணவு வகைகளை அறவே தவிர்த்து விடுகிறோம். இறைவனின் திருநாமத்தை மட்டுமே உச்சரிப்பதால், மனம் அமைதியாகி நல்ல விஷயங்களில் மட்டுமே கவனம் செல்கிறது.

பக்கத்துத் தெருவில் இருக்கும் பலசரக்கு கடைக்குக்கூட பைக்கிலேயே சென்று வருகிற அளவுக்கு ஊரும் உலகமும் நவீன மயமாகிவிட்டது. உட்கார்ந்த இடத்திலேயே இருந்தபடி, உடம்பையும் பிணியையும் வளர்த்து அவதிப்படுபவரை அமைதிப் படுத்தி ஆரோக்கிய நிலைக்கு அழைத்துச் செல்வதுதான் பக்தி. அந்த வகையில், பழநி மலையானைத் தரிசிக்க பரங்கிமலை பக்தனை பாதயாத்திரை செல்ல வைக்கிறது, அது!  

வழிபாட்டு முறைகளில் மவுன விரதமும் ஒன்று. 'மோனம் என்பது ஞான வரம்பு' என்கிறார் ஒளவையார். புராண- இதிகாசங்கள் அனைத்திலும் வாழ்வியல் தத்துவம் ஒளிந்திருக்கும். சிவாலயங்களில், கல்லால மரத்தின் கீழ் தட்சிணா மூர்த்தி தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசு வதே இல்லை. எல்லாமே மவுன மொழியான சைகை மொழிதான். எனவேதான் 'ஊமைத்துரை, மவுனசாமி' என்றெல்லாம் இவருக்குப் பெயர் உண்டு! உயிர்ச் சக்தியான பிராண வாயுவைச் சமன்படுத்தும் மூச்சுப் பயிற்சியானது ஆரோக்கியத்துக்கும் ஆயுள் நீட்டிப்புக்குமான பயிற்சி முறை! தேவையற்ற பேச்சால், கரையும் பிராண சக்தியை உள்ளிருத்திப் பயன் தருவதே மவுன விரதம்!

'வேலை, வேலை' என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டிருக்கிற வாழ்க்கை... வார விடுமுறையில், நன்றாக ஓய்வெடுத்து வீட்டைச் சுத்தம் செய்து சந்தோஷம் அடைவீர்கள் இல்லையா? நாம் கடைப்பிடிக்கும் 'விரதம்' இந்த வேலையைத்தான் நம்முள்ளே செய்கிறது.


ஒருநாளில், மூன்று வேளை உணவு தேவை. அதனை அரைத்துச் செரித்து, தேவையான சக்தியைக் கொடுக்கிறது ஜீரண உறுப்புக்கள். ஆறு நாட்கள் ஓடியோடி உழைக்கும் நமக்கு ஞாயிறு ஓய்வு என்றால், நம் உடம்பில் தினமும் எந்திரமாக உழைக்கும் ஜீரண உறுப்புகளுக்கும் ஓய்வு தேவை தானே? அதற்காகத்தான் விரத முறைகள் உருவாகின!

விரதம் கடைப்பிடிக்கிற நாட்களில், உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு சக்தியாக மாற்றப்படுகிறது. அதுமட்டுமா? ஜீரண உறுப்புகளுக்குத் தேவையான ஓய்வும், உடலுக்குப் போதுமான புத்துணர்வும் ஒருசேரக் கிடைக்கிறது. இது அறிவியல் பூர்வமான உண்மை!

கொழுப்பு, ஹார்ட் அட்டாக், வாயுக் கோளாறு, நீரிழிவு போன்ற பல பிணிகளுக்கான வாசற்கதவைத் திறந்து வைப்பதே அசைவ உணவுகள்தான். எனவே அசைவம் தவிர்ப்பது நல்லது. சைவ உணவு சாத்வீகமான உணவு. 'சாத்வீகமான உணவே சாந்தமான மனநிலைக்கு உத்தரவாதம்' என்பதை அனுபவித்தால்தான் உணரமுடியும். மனமானது ஒருநிலைப்படும்போது, உயிரைக் கொன்று தின்பது 'பாவம்' என்ற உணர்வைக் கொடுக்கும்; உணவுக் கட்டுப்பாடு என்ற உன்னத உணர்வும் மேலோங்கிவிடும்!  

அடுத்தது, மனக்கட்டுப்பாடு! தியானம், யோகா, பிராணாயாமம் ஆகிய எல்லாமே அலைபாயும் மனதை, ஒருபுள்ளியில் நிறுத்துவதுதான்! எந்தவித மன சஞ்சலமும் இல்லாத அந்த நிலைதான் உடலுக்கும் மனதுக்குமான ஓய்வு!

தியானப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், மன அழுத்தம் மறையும்; மனச்சோர்வு விலகும்; பதட்டம் காணாமல் போகும்;  கோபதாபங்கள் குறையும்; நல்ல  சிந்தனைகள் பெருகும். எவர் மனமும் புண்படாமல் பேசுகிற பக்குவம் வந்துவிடும். காரியத்தில் வீரியம் பொருந்திக் கொள்ளும்'' என விவரிக்கும் நடராஜன் தன்னை வருத்திய சம்பவத்தையும் விளக்கினார்.  

''தன் வயிறு, தன் குடும்பம் என்று சுயநலமாக வாழ்வது என்பது மிகப்பெரிய சோகம்.

ஒருமுறை சென்னையின் பிரதான சாலையில் உள்ள ஒரு பெரிய சத்திரத்தில் பூஜை நடைபெற்றது. அந்த சத்திரத்துக்கு எதிரில் என் நண்பரின் வீடு. அங்கே சென்றிருந்தேன். சத்திரத்தின் வாசலில் சில வயோதிகர்கள் பசியும் பரிதவிப்புமாக நின்றிருந்தனர்.

சத்திரத்தில், பூஜை முடிந்து பந்தி போஜனமும் நிறைவுற்றது. இலைகள், குப்பைத் தொட்டி களுக்குள் விழுந்தன. வயோதிகர்கள் அந்தக் குப்பைத் தொட்டிக்குள் கைவிட்டு,  'சாப்பிட ஏதும் கிடைக்காதா?' என்று ஏங்கியபடி துழாவி னார்கள். அந்தக் காட்சி என் மனதில் ஈட்டியாய் இறங்கியது.

கூட்டு வழிபாடு என்ற பெயரில் பணத்தை ஒரு குழுவாகச் சேகரித்து, அவர்களே விருந்து உபசாரம் செய்து கொள்வதை என்ன சொல்ல..? ஏழையின் சிரிப்பில் அல்லவா இருக்கிறான், இறைவன்!  

அன்னதானம் வழங்கும்போது, ஏழைக்கு வயிறும் தானம் அளித்தவருக்கு மனதும் ஒருசேர நிரம்புகிறது. இதைத்தானே மதங்களும் மார்க்கங் களும் எடுத்துரைக்கின்றன. 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!' என்ற உயரிய தத்துவத்தைப் பின்பற்றுகிறவனே ஆண்டவனின் செல்லப்பிள்ளை!

காலையில் எழுந்ததும் நீராடி விட்டு, ஒரு விளக்கு அல்லது மெழுகுவத்தியை ஏற்றிவைத்து, 15 நிமிடம் தியானத்தில் ஈடுபடுங்கள். பிறகு 20 நிமிடம் பிராணாயாமம் செய்யுங்கள். இதன் மூலம்  முதுமையை நிச்சயமாக வெல்லலாம்!''  எனச் சொல்லும் நடராஜன் வாழ்வியல் நெறியாக இப்படிச் சொல்கிறார்...  

''எப்போதுமே 'எல்லாம் அவன் செயல்!' என்பதை நினைவில் நிறுத்துங்கள். நல்ல காரியங்களைச் செய்யுங்கள்; அப்படியான செயலில் ஈடுபடுபவர்களை மனதாரப் பாராட்டுங்கள். குடும்பத்தாரிடமும் சுற்றத்தாருடனும் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நம்மைப்போலவே எல்லோரும் வாழ பிரார்த்தியுங்கள்!''