Tuesday, October 11, 2011

30 வகை ஸ்வீட் - காரம்

வாழ்க்கை இயந்திரத்தனமாகி விட்ட இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும்கூட, 'இன்னும் இருபது நாள்தான் இருக்கு... பதிமூணு நாள்தான் இருக்கு' என்று 'கவுன்ட் டவுன்' செய்து கொண்டு எதிர்நோக்கப்படும் பண்டிகை என்றால், அது தீபாவளிதான்!

தீப ஒளி திருநாளில் உங்கள் இல்லத்தில் இன்ப ஒளி வீச வாழ்த்துக்கள்!

 மைதா மில்க் பர்ஃபி

தேவையானவை: மைதா - ஒரு கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - மூன்றரை கப், நெய் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: பாலை சுண்டக் காய்ச்சி கோவா பதத்தில் எடுத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, காய்ந்ததும் (லேசாக புகை வரும்போது) மைதா மாவை தூவி நன்றாக பொன்னிறமாக வறுக்கவும். கீழே இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும். இதனுடன் கோவாவை கட்டியில்லாமல் உதிர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். வேறொரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, இரட்டை கம்பி பாகு பதம் வந்தவுடன் அதில் மைதா கலவை, ஏலக்காய்த்தூள் தூவி இரண்டு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும். இப்போது பாத்திரத்தை கீழே இறக்கி சிறிது நேரம் கழித்து பார்த்தால்... ஏடு போல் படிந்து இருக்கும். அந்த சமயம் அக்கலவையை மேலும் கொஞ்சம் கிளறி நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி பரவலாக்கவும். பிறகு, துண்டுகள் போடவும்.

 ஜவ்வரிசி - வெல்ல லட்டு

 

தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், வெல்லத்தூள் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - கால் கப், முந்திரி - திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு,ஜவ்வரிசியை மிதமான தீயில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். நன்றாக ஆறியதும், மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.

இதனுடன் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, மீதமுள்ள நெய்யில் முந்திரி - திராட்சையை வறுத்து அதில் சேர்த்துக் கலந்து, சிறிய சிறிய லட்டுகளாக பிடிக்கவும்.

 கலர்ஃபுல் காராபூந்தி

தேவையானவை: கடலை மாவு - 2 கப், அரிசி மாவு - ஒரு கப், ஃபுட் கலர் (சிவப்பு, பச்சை) - தேவையான அளவு, வேர்க்கடலை - அரை கப், முந்திரி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து, மூன்று கிண்ணங்களில் பிரித்து வைக்கவும். ஒன்றில் ஆரஞ்சு, இன்னொன்றில் பச்சை என ஃபுட் கலரை சேர்த்துக் கலக்கவும். மூன்றாவது கிண்ணத்தில் கலர் எதுவும் சேர்க்கத் தேவைஇல்லை. பிறகு, ஒவ்வொரு கிண்ணத்திலிருக்கும் மாவையும் பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். பின்பு எண்ணெயை காய வைத்து, ஒவ்வொரு கலர் மாவையும் பூந்திக் கரண்டியில் பூந்திகளாக தேய்த்து பொரித்து எடுக்கவும். பூந்திகளை அகலமான தட்டில் கொட்டி, வறுத்த வேர்க்கடலை, முந்திரியை சேர்த்து, பொரித்த கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும்.

 ரிப்பன் பக்கோடா

தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், கடலை மாவு - ஒரு கப், நெய் - 2 (அ) 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, சிறிது கெட்டியாக அரைத்து எடுக்கவும். அதனுடன் கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், நெய் ஆகியவற்றை சேர்த்துப் பிசையவும். மாவை ரிப்பன் அச்சில் போட்டு, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

 சோமாசி

தேவையானவை - மேல்மாவுக்கு: மைதா - 2 கப், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

பூரணத்துக்கு : பொட்டுக்கடலை - ஒரு கப், துருவிய கொப்பரை - கால் கப், பூரா சர்க்கரை (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும். பூரா சர்க்கரை இல்லாவிட்டால் சாதாரண சர்க்கரையும் சேர்க்கலாம்) - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கசகசா - 2 டீஸ்பூன், துண்டுகளாக்கிய முந்திரிப் பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மேல்மாவுக்கு கொடுத்துள்வற்றை தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பொட்டுக் கடலை, கசகசா இரண்டையும் தனித்தனியாக வறுத்து, துருவிய கொப்பரை சேர்த்து மிக்ஸியில் பவுடராக்கவும். இதனுடன் பூரா சர்க்கரை, முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்... பூரணம் தயார்.

பிறகு, பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிது எடுத்து வாழை இலையில் மெல்லியதாக தட்டி, அதில் சிறிதளவு பூரணத்தை ஒரு பாதியில் வைத்து மறுபாதியால் மூடவும். இரண்டு ஓரங்களையும் தண்ணீர் தொட்டு ஒட்டவும். பிறகு, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதேபோல எல்லாவற்றையும் செய்யவும்.

 சிரோட்டி

தேவையானவை: மைதா - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், நெய் - 4 டீஸ்பூன், சர்க்கரைத்தூள் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: மைதா, அரிசி மாவு, நெய் மூன்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும். இந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து, சிறிய வடிவ பூரிபோல தேய்க்கவும். மூன்று மூன்று பூரிகளாக ஒன்றன் கீழ் ஒன்று வைத்து ஒட்டி, பின்புறமாக பாய்போல் சுருட்டவும். பிறகு, மூன்று துண்டுகளாக்கி ஒவ்வொன்றையும் கைகளால் வட்டமாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்து, மேலே சர்க்கரைத்தூள், ஏலக்காய்தூள் தூவி பரிமாறவும்.

தேங்காய் போளி

தேவையானவை - மேல் மாவுக்கு: மைதா மாவு - ஒரு கப், நெய் - 3 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

பூரணத்துக்கு: தேங்காய் துருவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை. நெய் - சுட்டு எடுக்க தேவையான அளவு.

செய்முறை: மேல் மாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றை தண்ணீர் விட்டு மிருதுவாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். பூரணத்துக்கு கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கெட்டியாகக் கிளறவும். மேல் மாவில் இருந்து சிறிது எடுத்து வாழை இலையில் வைத்து தட்டி, நடுவில் பூரணத்தை வைத்து மூடவும். மறுபடியும் மெல்லியதாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

 பக்கர்வாடி

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், சோள மாவு (அ) மைதா மாவு - அரை கப், புளித் தண்ணீர் - அரை கப், நெய் (அ) வனஸ்பதி - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பூரணத்துக்கு: கொப்பரை துருவல் - ஒரு கப், வெள்ளை எள் - கால் கப், கசகசா - கால் கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், ஏலக்காய், கிராம்பு பட்டை - தலா ஒன்று (பொடித்துக் கொள்ளவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோள மாவு (அ) மைதா மாவு, கடலை மாவு, நெய் (அ) வனஸ்பதி மற்றும் உப்பை தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ஊற வைக்கவும். இதுதான் மேல் மாவு. கடாயை காய வைத்து கொப்பரைத் துருவல், கசகசா, எள் மூன்றையும் எண்ணெய் விடாமல் வறுத்து சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியுடன் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், பொடித்த ஏலக்காய் - கிராம்பு - பட்டைத் தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாகக் கலக்கவும்  பூரணம் தயார்.

பிசைந்து வைத்திருக்கும் மேல் மாவிலிருந்து சிறிதளவு எடுத்து சப்பாத்தி போல தேய்க்கவும் அதன் மேல் புளித்  தண்ணீரை தெளித்து தடவவும். இப்போது தயாரித்து வைத்துள்ள பூரணத்திலிருந்து சிறிதளவு எடுத்து சப்பாத்தியில் பரப்பவும். சப்பாத்தியை பாய் போல் சுருட்டி, சிறுசிறு துண்டுகளாக 'கட்' செய்து, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

 அரிசிப்பொரி - வெல்ல மிட்டாய்

தேவையானவை: அரிசிப்பொரி - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பாதாம் பருப்பு - அரை கப், வறுத்த வேர்க்கடலை - முக்கால் கப், பொட்டுக்கடலை - முக்கால் கப், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: பொரி, பாதாம், வேர்க்கடலை, பொட்டுக்கடலை இந்த நான்கையும் மிக்ஸியில் பவுடராக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்தவுடன் ஏலக்காய்த்தூள், நெய் சேர்க்கவும். பின்பு பொடித்த பவுடரை தூவவும். உடனே கெட்டியாகிவிடும். கீழே இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டவும். சிறிது ஆறியவுடன் துண்டுகளாக்கவும்.

பயத்தமாவு ஈஸி பர்ஃபி

தேவையானவை: வறுத்து, அரைத்த பயத்தமாவு - ஒரு கப், சர்க்கரைத்தூள் - ஒரு கப், நெய் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி - திராட்சை - 2 டீஸ்பூன்.

செய்முறை: பயத்தமாவுடன் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நெய்யை கடாயில் ஊற்றி, அடுப்பில் வைத்து லேசாக புகைந்து வரும்போது... முந்திரி, திராட்சையை வறுத்து சூட்டுடன் மாவில் கொட்டவும். இதை நன்றாகக் கலந்து தட்டில் கொட்டி (கிண்ணத்தின் அடிப்பாகத்தால்) அழுத்தி விடவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து (ஃபீரிஸரில் வேண்டாம்) இரண்டு மணி நேரம் கழித்து பார்த்தால், நன்றாக செட் ஆகி இருக்கும். இப்போது துண்டுகள் போடவும்.

 முறுக்கு

தேவையானவை: கடலை மாவு - 2 கப், அரிசி மாவு - 2 கப், சமையல் சோடா, பெருங்காயத்தூள், சீரகம் (அ) வெள்ளை எள் - தலா அரை டீஸ்பூன், நெய் - கால் கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் உப்பு, நெய், சமையல் சோடாவை நன்றாகக் குழைக்கவும். இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து, சீரகம், (அ) வெள்ளை எள் மற்றும் பெருங்காயத்தூளையும் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்து கொண்டுஇருக்கும் எண்ணெயில் பிழிந்து, பொன்னிறமாக எடுக்கவும்.

 ரைஸ் பெப்பர் ரிங்ஸ்

தேவையானவை: அரிசி மாவு - 2 கப் (அரிசியை களைந்து, அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு காய வைத்து மாவாக அரைக்கவும்), மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - கால் கப், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெண்ணெயுடன் உப்பு சேர்த்துக் குழைக்கவும். அதனுடன் அரிசி மாவு, உளுத்தம் மாவு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக பிசையவும். அதிலிருந்து சிறிய அளவு மாவு எடுத்து நீளமாக உருட்டி இரண்டு முனைகளையும் சேர்த்து 'ரிங்' (வளையம்) போல் செய்யவும். எல்லா மாவையும் இதுபோல் செய்து கொள்ளவும். எண்ணெயை காய வைத்து, செய்து வைத்துள்ள 'ரிங்'குகளை பொரித்து எடுக்கவும்.

ஃப்ரூட் அல்வா

தேவையானவை: பப்பாளி, வாழை, ஆப்பிள், சப்போட்டா, மாம்பழம் ஆகியவற்றை துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்த பழக்கூழ் - 2 கப், வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 கப், பல் பவுடர் கால் கப், குளூக்கோஸ் பவுடர் - 3 டீஸ்பூன்,  ஃப்ரூட் எசன்ஸ் - அரை டீஸ்பூன், பாதம், முந்திரித் துண்டுகள் - 2 டீஸ்பூன், ஆரஞ்சு கலர் - அரை டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமான பத்திரத்தில் பழக்கூழ், சர்க்கரையை சேர்த்து கொதிக்கவிடவும். கலவை சிறிது கெட்டியாக வந்ததும் குளூக்கோஸ் பவுடர், பால் பவுடர், பாதம், முந்திரி துண்டுகள், வெண்ணெய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். நன்றாக கெட்டியானதும் எசன்ஸ், கலர் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்' என்று பரிமாறவும்.

 கோதுமை அல்வா

தேவையானவை: சம்பா கோதுமை - ஒரு கப், சக்கரை - 3 கப், நெய் - ஒரு கப், கேசரி பவுடர் - தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரித் துண்டுகள் - சிறிதளவு.

செய்முறை :  கோதுமையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் ஊற வைத்த தண்ணீரை சேர்த்து கோதுமையை விழுதாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதை அப்படியே தனியாக  அரை மணி நேரம் வைக்கவும். மேலே தண்ணீர் தெளிந்து இருக்கும். கீழே குழம்பாக பால் போன்று இருக்கும். மேலே தெளிந்த நீரை எடுத்து தனியே வைக்கவும். இந்த நீரில் தேவையான சர்க்கரையை சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் சிறிது விட்டு (சர்க்கரை மூழ்கும் வரை), அடுப்பில் வைத்து, இரட்டை கம்பி பதத்துக்கு வந்தவுடன் கோதுமைப் பாலை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாகக் கிளறவும். உருக்கிய நெய்யையும் சிறிது சிறிதாக ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும். அதில் முந்திரித் துண்டுகள், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்க்கவும். நன்றாக திரண்டு கெட்டியாக பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தவுடன் நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி சமப்படுத்தி, ஆறியவுடன் துண்டு களாக்கவும்.

ஸ்டஃப்டு பாதுஷா

தேவையானவை: மைதா மாவு - 2 கப், சர்க்கரை - இரண்டரை கப், சமையல் சோடா - ஒரு டீஸ்பூன், கெட்டியான தயிர் (சிறிது புளிப்பானது)  - ஒரு கரண்டி, வனஸ்பதி - அரை கப், எண்ணெய் - தேவையான அளவு.

ஸ்டஃப்பிங்குக்கு: பேரீச்சை, திராட்சை, முந்திரி, பாதம் - தேவையான அளவு.

செய்முறை: பேரீச்சை, திராட்சை, முந்திரி, பாதம் எல்லாவற்றையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதுதான் பூரணம். சர்க்கரையை மூழ்கும்வரை தண்ணீர் விட்டு திக்கு பாகு (ஒரு கம்பி பதம்) காய்ச்சவும்.

சமையல் சோடாவையும், வனஸ்பதியையும் குழைக்கவும். இதனுடன் மைதா, தயிர் சேர்த்து நன்றாக பிசிறிக் கொள்ளவும். தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவாக பிசைந்து சிறிது நேரம் ஊறவிடவும். சிறிதளவு மாவை எடுத்து உள்ளங் கையில் வைத்து மெதுவாக உருட்டி சொப்பு போல் செய்து, நடுவில் சிறிதளவு பூரணத்தை வைத்து மூடி, கையினால் லேசாக உருட்டி வடைபோல் தட்டி, நடுவில் கட்டை விரலால் லேசாக அழுத்தி, எண்ணெயில் பொரிக்கவும். தயாராக இருக்கும் சர்க்கரைப் பாகில் நனைத்து எடுத்து வைக்கவும்.

 அதிரசம்

தேவையானவை: அரிசி - ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒரு கப் (பாகு வெல்லம்), ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை அரை மணி ஊற வைத்து, களைந்து வடித்து, லேசாக ஈரத்துடன் இருக்கும்போது மாவாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு பொடித்த வெல்லத்தைப் போடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பிக்கும்போது அதை வடிகட்டியில் வடிகட்டி, திரும்பவும் அதே பாத்திரத்தில் போட்டு காய்ச்சவும். உருட்டும் பதத்துக்கு வந்தவுடன், பாகில் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி கிளறவும். கூடவே  ஏலக்காய்த்தூளையும் சேர்த்து கட்டித் தட்டாமல் கிளறவும். இறுகி வந்ததும்,  மெல்லியதாக தட்டி, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு, இருபுறமும் சிவந்ததும் ஒரு கரண்டியால் எடுத்து, மற்றொரு கரண்டியை வைத்து அழுத்தி, எண்ணெய் வடிந்ததும் ஒரு தாம்பாளத்தில் அடுக்கவும்.

 பொட்டுக்கடலை ஓமப்பொடி

தேவையானவை: பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், ஓமம் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓமத்தை சிறிது தண்ணீரில் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். இந்த தண்ணீருடன் பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள் உப்பு, மிளகாய்த்தூள்  சேர்த்துப் பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கோவா - பேரீச்சை பர்ஃபி

தேவையானவை: கோவா (சர்க்கரை இல்லாதது) - 2 கப், சர்க்கரை - ஒரு கப், பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) - ஒரு கப் (சிறிதளவு பாலில் ஊற வைக்கவும்), ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: கோவாவில் சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து மிதமாக தீயில் கிளறவும். கலவை இறுகும்போது நெய், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பாத்திரத்தின் ஒரங்களில் கலவை ஒட்டாமல் வரும்போது, அதை இறக்கி வைத்து

அடுப்பை அணைக்கவும். பிறகு, பாதி கலவையை எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும். இப்போது அரைத்து வைத்த பேரீச்சம்பழ விழுதை சமமமாக பரவலாக தடவவும். மீதி உள்ள கோவா கலவையை அதன் மீது சரிசமமாக பரப்பி, சிறிது ஆறியதும் துண்டுகளாக்கவும்.

ரவை தட்டை

தேவையானவை : ரவை - ஒரு கப், மைதா - 2 டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நெய், உப்பை நன்றாகக் குழைத்து... ஓமம், ரவை, மைதா சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். இந்த மாவை சிறிய சிறிய தட்டையாக தட்டி,  சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

பயத்தம் முறுக்கு

தேவையானவை: அரிசி - 5 கப், பயத்தம்பருப்பு - ஒரு கப், வெண்ணெய் - அரை கப், சீரகம், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியையும் பயத்தம்பருப்பையும் (வறுக்க வேண்டாம்) ஒன்றாக சேர்த்து மெஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும். இதனுடன் வெண்ணெய், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.  மாவை  ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். இதை முறுக்கு அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் முறுக்குகளாக பிழிந்து பொரித்தெடுக்கவும்.

நிப்பட்டுலு (ஆந்திரா தட்டை)

தேவையானவை: அரிசி மாவு - 2 கப், மைதா - கால் கப், கடலை மாவு அரை கப், வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், சீரகம் (அ) எள் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எண்ணெயைத் தவிர மற்ற எல்லா பொருட்களையும் தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து தட்டைகளாக தட்டவும். சூடான எண்ணெயில் தட்டைகளை பொரித்து எடுக்கவும்.

 கடலை மாவு பர்ஃபி

தேவையானவை: கடலை மாவு, மைதா மாவு - தலா  ஒன்றேகால் கப், சர்க்கரை - இரண்டரை கப், நெய் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமான கடாயில் நெய்யை ஊற்றி, கடலை மாவு, மைதா மாவு, சேர்த்துக் கலந்து, பொன்னிறமாக வறுத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும். வேறொரு பாத்திரத்தில் சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். இரட்டை கம்பி பதம் வந்தவுடன் வறுத்து வைத்துள்ள மாவில் ஒரு கையால் பாகை ஊற்றிக்கொண்டே, நீண்ட காம்பு உள்ள கரண்டியால் கிளறவும் (பாகை ஊற்றும்போதே கெட்டியாகிவிடும். கவனமாக கிளறவும்). உடனடியாக நெய் தடவிய தட்டில் கொட்டவும். சிறிது ஆறியவுடன் துண்டுகளாக்கவும்.

 மிளகு துக்கடா

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மைதா மாவு - ஒரு கப், மிளகுத்தூள் - 3 டீஸ்பூன்,  நெய் (அ) வனஸ்பதி - கால் கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நெய் (அ) வனஸ்பதியுடன் உப்பு சேர்த்து நன்றாகக் குழைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, மைதா மாவு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு பிசையவும். மாவை மெல்லிய சப்பாத்தி போல் தேய்த்து, கத்தியினால் குறுக்கு நெடுக்காக டைமண்ட் வடிவ துண்டுகளாக வெட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

 பால் பவுடர் பர்ஃபி

தேவையானவை: பால் பவுடர் - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - அரை கப்.

செய்முறை: அடுப்பில் நெய்யை ஊற்றி, காய்ந்ததும் பால் பவுடரை வறுத்து, நன்றாக ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, ஒரு கம்பி பாகு பதம் வந்தவுடன் பொரித்த பால் பவுடரை சேர்த்துக் கிளறி, கெட்டியாக வந்தவுடன் தட்டில் கொட்டவும். ஆறியவுடன் துண்டுகளாக்கவும்.

 வாழைப்பழ அல்வா

தேவையானவை: வாழைப்பழம் - 3, நெய் - 3 டீஸ்பூன், சர்க்கரை - அரை கப்.

செய்முறை: வாழைப்பழத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கவும்.  வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சர்க்கரையை கரைத்து பாகு காய்ச்சவும். ஒரு கம்பி பாகு பதம் வரும்போது, வதங்கிக் கொண்டிருக்கும் வாழைப்பழ கலவையில் ஊற்றி, நுரை அடங்கும் வரை நன்றாகக் கிளறி, கெட்டியானவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியவுடன் பரிமாறவும்.

 தூத்பேடா

தேவையானவை: சர்க்கரை இல்லாத கோவா - ஒரு கப், சர்க்கரை பவுடர் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், ஒன்றிரண்டாக உடைத்த பிஸ்தா - ஒரு டீஸ்பூன்.

செய்முறை : அடுப்பில் கோவாவை போட்டு, சர்க்கரை பவுடரை தூவி, கெட்டியாகக் கிளறவும். கையில் ஒட்டாமல் வரும்போது பிஸ்தா, ஏலக்காய்த்தூள் சேர்த்து கீழே இறக்கவும். சிறிது ஆறியவுடன் வட்டம், சதுரம், உருண்டை என விருப்பமான வடிவங்களில் செய்து பரிமாறவும்.

 

முந்திரி பால் ஸ்வீட்

தேவையானவை: முந்திரித் தூள்- அரை கப், பால், - ஒரு லிட்டர், சர்க்கரை - இரண்டரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: பாலுடன் சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். கலவை இறுகி கெட்டியாக வரும்போது அடுப்பை அணைத்துவிடவும். கீழே இறக்கி, முந்திரித் தூள் , நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, 2 நிமிடம் கிளறி (அடுப்பில் வைக்க வேண்டாம்), கெட்டியாக வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகளாக போடவும்.

 காரா சேவு

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், சமையல் சோடா - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் (ஒன்றிரண்டாக பொடித்தது) - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நெய்யையும், உப்பையும், சமையல் சோடாவுடன் சேர்த்துக் குழைக்கவும். அதில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகுத்தூள் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். எண்ணெயைக் காய வைத்து, பிசைந்த மாவை காராசேவு தட்டில் தேய்த்து காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். (கார சேவு தட்டு இல்லாதவர்கள் தேன்குழல் நாழியில் பிழிந்து சிறிய, சிறிய துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ளலாம்).

மைதா - ரவா ஸ்வீட் பால்ஸ்

தேவையானவை : மைதா - ஒரு கப், எண்ணெய் - கால் கப், சமையல் சோடா - அரை டீஸ்பூன், ரவை - 3 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பொரிப்பதற்கான எண்ணெயைத் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, தேவையான தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதை எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

இஞ்சி - பேரீச்சை லேகியம்

 தேவையானவை : துருவிய இஞ்சி - ஒரு கப், பேரீச்சை (விதை நீக்கியது) - கால் கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், நெய் - 2 டீஸ்பூன், வறுத்த சீரகம் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை : பேரீச்சம்பழம், இஞ்சி, வறுத்த சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். சிறிது தண்ணீரில் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். வெல்லம் தளதளவென்று கொதிக் கும்போது அரைத்த விழுதைக் கொட்டி கிளறி, நெய் சேர்த்து மேலும் கிளறி கைகளில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.