Wednesday, October 12, 2011

தாம்பத்யமும் புனிதமாக வேண்டும்

"வாசலிலே... உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்... வந்தவுடன் உன் ஆசை முகத்தை பார்த்திருப்பேன்...' என்ற பழைய பாடல், எத்தனையோ ஆயிரம் தம்பதிகளுக்கு, மிக, மிக பொருந்தவே செய்கிறது.

ஜெயராமன், தன் செருப்பை கழற்றி ஓரமாக வைக்கவும், ஜானகி வாசல் கதவை திறக்கவும் சரியாகவே இருந்தது. கணவன் உள்ளே செல்ல, மீண்டும் கதவை சாத்தி தாளிட்டு, கணவனை பின் தொடர்ந்தாள் ஜானகி.

ஜெயராமன், "உஸ்' என்றவாறே, ஹாலில், ஒரு நாற்காலியில் அமர, மின் விசிறியை சுழல விட்டாள் ஜானகி.

""என்னங்க... போன காரியம் என்னாச்சு?'' ஆவலாக கேட்டாள்.

தன் மனைவியை புதுப் பார்வையோடு பார்த்தார் ஜெயராமன்.

முப்பது வருட தாம்பத்யமாயிற்றே... நொடியில் உணர்ந்தாள் ஜானகி.

""என்ன புதுசா பார்க்கறீங்க... யார்றா இவள்னா?'' கிண்டலாக கேட்டாள்.

"பச்' தலையாட்டினார் ஜெயராமன்.

""வா... இப்படி நேரா வந்து உட்கார்,'' மனைவியை, சற்று அதிகாரமாக அழைத்தார் ஜெயராமன்.

முகத்தில் கேள்வியோடு ஜானகியும், ஒரு நாற்காலியை இழுந்து போட்டு, அவர் முன் அமர்ந்தாள்.

பொதுவாக, மற்றவர் முன் இது போல், கணவன் எதிரில் அமர்பவள் அல்ல ஜானகி. அதற்கு காரணம், அவள் வளர்ந்த முறை.

""என்ன, எப்படி ஆரம்பிக்கிறதுன்னு புரியலையா?''

கணவன் மன ஓட்டத்தை புட்டு வைத்தாள் ஜானகி.

""பேரப் பசங்க ஸ்கூல் விட்டு வந்திடுவாங்க; சொல்லுங்க...'' சற்று அலுத்துக் கொண்டாள்.

உண்மையாகவே ஜெயராமனுக்கு, அவர் மனதை பாதித்த அந்த விஷயத்தை, மனைவியிடம் எப்படி சொல்வது, எப்படி பகிர்ந்து கொள்வது என்று புரியவில்லை.

வாழ்க்கையின் அடிநாதமே அடியோடு மாறி, புது வாழ்க்கையின் அஸ்திவாரமாக வேறொன்று வர, எது வாழ்க்கையின் அச்சாணி. எதுவுமே இல்லையா... உண்பதும், உறங்குவதும், இன்பங்களை துய்ப்பதும், வாழ்க்கை என்றால், நாம் எவ்விதத்தில் மிருகங்களிடமிருந்து வேறு படுகிறோம்?
இதில் எந்த மனிதனும் தப்ப முடியவில்லையே... தப்பியவனை கோழை, முட்டாள் என்று தானே அழைக்கின்றனர்... இந்த, மற்ற எண்ண மாறிகள்.
""ஜானகி... நான் பாக்கப் போன புரொமோட்டர் ஊர்ல இல்லை. அதை விடு, நம்ப தெருவுல கடைசி வீட்டு மாமிய, வழில ஐஸ்கிரீம் பார்லர்ல பாத்தேன். ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க; கூட, பேரனுக்கும் ஊட்டிக்கிட்டிருந்தாங்க.''

""அட... பெரிய அதிசயம்தாங்க... இதை சொல்லவா இந்த சீன் போட்டீங்க?'' அசுவாரசியமானாள் ஜானகி.

""அடி லூசு... முழுசா கேளு. அதை பார்த்ததும், எனக்கு போன வாரம் நாம ரெண்டு பேருமே பாத்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.''

""என்னது?''

ஜெயராமன் சொன்னார்...

""நாம அவதார் படத்துக்கு போனப்ப, அதே தியேட்டர்ல, உன்னோட ஒண்ணுவிட்ட அண்ணனை குடும்பத்தோட பாத்தோமே... ஞாபகம் இருக்கா?''

""இருக்கு!''

""நான் இப்ப சொன்ன மாமிக்கும், உன் அண்ணனுக்கும் என்ன ஒற்றுமை சொல்லு...''
ஜானகிக்கு புரியவில்லை.

"இப்போ யார் லூசு...' என்றும் புரியவில்லை.

அவள் தெருவி<லுள்ள ஒரு மாமி, அவளது அண்ணன், பெரிதாக என்ன ஒற்றுமை இருக்க முடியும். இருவரும் எதிர்பால் வேறு!

""புரியலீங்க...''

""உனக்கு புரியாது... நீ இந்த உலக வழக்கத்துலேயே இரு. ஆயிரம் வருஷம், இல்ல... இல்ல... உயிரோடவே இருக்கப் போறவ நீ. கொஞ்சம் மாத்தி யோசியேன். நான் சொல்றேன்... முன்னாடி இந்த மாமியோட புருஷன் ஹார்ட் அட்டாக்கில் போனப்ப, அன்னிக்கு அப்புறம் கொஞ்ச நாள் என்ன நடந்தது, அந்த மாமி எப்படி இருந்தாங்க... யோசிச்சு சொல்லேன்!''

இப்போது, இது தேவையில்லை என்றாலும், கணவனுக்காக யோசித்தாள் ஜானகி...

"ஆபீசில் அந்த மாமியின் கணவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லாமல் போக, உயிரற்ற
உடலாய் ஆம்புலன்சில் அவரை கொண்டு வர, தெருவே நொறுங்கிப் போனது... மாமி மூர்ச்சையானாள். வீட்டிலேயே பெட் ஏற்பாடு செய்து, ஆக்சிஜன் ஏற்றப்பட்டது. ஒரே நாளில் மாமி பாதியானாள்; பொலிவும், பேச்சும் அடங்கிப் போனது. இந்து மத வழக்கத்தில் கேட்கவே வேண்டாம். பந்தலில் எந்த மரியாதையும் கிட்டாமல் போக, வீட்டோடு சுருங்கினாள். மாமி, தலையை மழிக்க சம்மதித்தாலும், மற்றவர்கள் விடவில்லை. ஒரு வாரம் பித்து பிடித்தது போல் காணப்பட்டாள். ஆயிற்று... இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. இன்னும் அதைப் போலவேவா இருப்பாள் அல்லது இருக்க முடியும். மகன், மருமகன் வீடு பேரன், பேத்தி கடமை தொடர்கிறதே... அதிருக்கட்டும்... இவருக்கு ஏன் இந்த திடீர் யோசனை?'

""ஆமாங்க... நொந்துதான் போயிருந்தாங்க... எப்படி தேறுவாங்களோன்னு எனக்கும் சந்தேகமா இருந்திச்சு... இப்ப நார்மல் ஆயிட்டாங்க.''

""சரி... இப்ப உங்க அண்ணன் பத்தி, நான் ஏன் கேட்டேன்னு புரியுதா?''

இப்போது, ஓரளவுக்கு புரிந்து கொண்டாள் ஜானகி.

""புரியுதுங்க... அவரோட மனைவி, அதான் அண்ணி, போன வருஷம், ஒரு விபத்துல போயிட்டாங்க. சரி... இப்ப என்ன சொல்ல வர்றீங்க?''

""வர்றேன்... பொறு. உங்க அண்ணி போனப்ப, உங்க அண்ணன் தூக்க மாத்திர சாப்பிட்டு, அதுவும் அரைகுறையா வேலை செய்யாம டாக்டர்கிட்ட போய், "ஸ்டமக் வாஷ்' கொடுத்து, அப்புறம் சாப்பிடாமலேயே ஒரு மாசம் கிடந்து, நாம எல்லாரும் போய் தேத்தி, சமாதானம் செஞ்சது, ஞாபகம் இருக்கா ஜானகி?''

""நல்லாவே இருக்குங்க!''

""இப்ப நான் ஜானகி விஷயத்துக்கு வர்றேன்... நான் பாத்த இந்த ரெண்டு பேருமே, இப்ப எந்த வருத்தமும் இல்லாம, தங்களோட குடும்பத்தோட ஜாலியா இருக்காங்க. அதைப்பத்தி நான் சத்தியமா தப்பு சொல்லல. ஆனா, வாழ்க்கைல பாதி அங்கமா, உடலும், உயிரும் கலந்து வாழ்ந்த ஒரு உறவு, நம்பள விட்டு போனாலும், மீதி வாழ்க்கையை சந்தோஷமா தொடர்றது, அந்த பிரிஞ்சு போன உயிருக்கு, அது கணவனோ, மனைவியோ, அந்த ஆத்மாவுக்கு செய்யற நியாயமா ஜானகி?''

ஜானகி சற்று யோசித்தாள்... "என்ன சொல்ல வருகிறார்? கணவன், மனைவி யாராவது ஒருவர் இறந்தால், மற்றவரும் உயிரை விட வேண்டுமா; சதி போன்று?'

""எனக்கு சொல்லத் தெரியலீங்க. இந்த உலகத்துல கடமைகள் இருக்கே... மத்த நேரடி உறவுகளுக்கு, நம்ம தேவை இருக்குதே... அவங்களை அம்போன்னு விட முடியுமா?''
தனக்கு தோன்றியதை கேட்டாள் ஜானகி.

""பாத்தியா... நீ மறுபடியும் உலக வழக்கப்படி பேசற. நான் சொல்றது அந்த புனிதமான ஒரு உறவுப் பாலத்த பத்தி, அன்னியோன்யத்த பத்தி. அதுவரைக்கும் நடந்த, பேசின, அன்பு பரிமாற்றங்களை பத்தி. அந்த கனங்கள் எல்லாமே, உலக வழக்கப்படியா நடந்தது?

""புரியல... உலகத்துல எல்லா உறவுக்கும் காரணம் உண்டு; கணவன், மனைவி உறவுக்கு காரணம் கிடையாது. புதுசா ஜோடியாறாங்க, மனைவி இல்லை, கணவன்கிற உறவு திணிக்கப்படுது. அப்புறம் அவங்க... தாம்பத்யம் பண்ணி, அந்த உறவுக்கு புனிதத்த, அர்த்தத்த ஏற்படுத்தறாங்க.

""இதுல கல்யாணம் மட்டும் தான் உலக வழக்கப்படி நடக்குது... அதுக்கு மேல ரெண்டு பேருக்குமான... புரிதல், ஒட்டுதல்லாம் மன ரீதியா ஏற்படுது; இது, ஒரு அற்புதம்.

""இது மாதிரி எந்த உறவுலயும் கிடையாது. மகன் இல்ல, மகள் இல்ல, அம்மா, அப்பான்னு ஏற்கனவே காரணத்தோட உள்ள உறவுகள்கிட்ட, கடமையும், பாசமும் ஏற்படற மாதிரியில்ல இது. ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும் ரெண்டு பேரோட எண்ணங்களால...
""இந்த உறவு பின்னப்படுது, பலப்படுது. அப்படி அமைச்ச ஒரு உறவு இழக்கப்படும் போது, மத்த உறவு கொஞ்ச நாள் வருத்தப்பட்டு, அப்புறம் சகஜமா மாறுதுன்னா, அவ்வளவு தூரம் அந்த உறவுகளுக்குள்ள இருந்து வந்த பிணைப்பு சரியில்லேன்னு தானே அர்த்தம். என்ன புரியுதா ஜானகி? அந்த இழந்த உறவுக்கு உள்ள மரியாதை, முக்கியத்துவம் இதெல்லாம் வாழும் போது மட்டும்தான்ங்கிறது உண்மையா?''
ஜெயராமனின் கொஞ்சம் தத்துவரீதியான பேச்சில், ஜானகிக்கு ஒன்று மட்டும் புரிந்தது.

இருக்கும் போது, மிக அன்னியோன்யமாக இருப்பவர்கள், மற்றொருவர் இல்லாத போது, பெரிதாக பாதிக்கப்படுவதில்லை. மாறுகின்றனர் அல்லது காலத்தால் மாற்றப்படுகின்றனர். இதனால், அவர்களது தாம்பத்யம் பொய் என்றா சொல்ல முடியும்... சில விடலைகள், காதல் மோகத்தில் சேர்ந்து சாவது போல், ஒன்றாகவா உயிர் துறக்க முடியும்?

ஆனால், இன்று தன் கணவன் இந்த விஷயத்தில், இவ்வளவு ஆழமாக ஏன் விவாதிக்கிறார் என்று ஜானகிக்கு புரியவில்லை.

""சரிங்க... ஒத்துக்கறேன். இதுக்கு என்ன முடிவு... உடன்கட்டை ஏறணுமா... மத்தவங்க விடுவரா... சட்டம் அனுமதிக்குமா... இல்ல அந்த மாமியும், எங்க அண்ணனும் மூலையிலேயே முடங்கி கிடக்கணுமா?''
பிராக்டிக்கலாக கேட்டாள் ஜானகி.

விரக்தியாக சிரித்தார் ஜெயராமன்.

""சரி... சரி. பேரப் பசங்க வந்துடுவாங்க, நீ டிபன் ரெடி பண்ணு. மீதியை ராத்திரி பேசலாம். இப்ப நான் கேக்கற கேள்விக்கு, யோசிச்சு ராத்திரி பதில் சொல்லு. வந்து... நானே சட்ன்னு போனால் கூட, நீயும் மத்தவங்க மாதிரி, கொஞ்ச நாள் வருத்தப்பட்டு, அப்புறம் என்னை மறந்து, எல்லா விஷயத்தோடயும் ஐக்கியமாயிடுவியா?

""அதுதான் விதி, உலக வழக்கமான்னா, இப்ப நீ என்மேல் காட்டற ஒரு அபரிதமான அன்பு, எனக்காக உருகுகிற உன் ஜீவன், எனக்காக துடிக்கிற உன் ஆத்மா, இப்படி எல்லாமே, நான் உயிரோட இருக்கற வரைக்கும் தானா?

""அப்ப நமக்குள்ள உள்ள புனிதமான உறவு கூட, இந்த உயிருள்ள, நடமாடற ஒரு உருவத்துக்காகத்தானா... இதே கேள்வியை நான் என்கிட்டயும் கேட்கத்தான் செய்யறேன்; ராத்திரி பதிலும் சொல்கிறேன்; நீயும் யோசி.''
சொல்லிவிட்டு, தன் அறைக்குள் சென்றார் ஜெயராமன்.

பெரிய பாரத்தோடு கல்லாய் அமர்ந்திருந்தாள் ஜானகி.

"இன்று இவருக்கு என்ன வந்தது... ஏன் ஏடாகூடமாக கேட்டார்... அது ஏடாகூடம் என்று சொல்ல முடியாது. எல்லாரும் வெளிப்படையாக பேச பயப்படும் ஒரு விஷயம், இப்படி நேரடியாக கேட்டு விட்டாரே... சரி... நாமும் தான் அதற்கான விடையை யோசிப்போமே?'
இயந்திரமாய் எழுந்து, டிபன் தயாரிக்க ஆரம்பித்தாள் ஜானகி. கையும், உடலும் ஒரு வேலையில் ஈடுபட்டிருந்தாலும், மனது கணவன் கேட்ட அந்த, "நான் போன பிறகு...' என்பதிலேயே சுழன்றது.

பேரன், பேத்தி வந்து, டிபன் சாப்பிட்டனர்.

தொடர்ந்து யோசித்தாள் ஜானகி.

"அவர் போனால் என்னவாகும்... அழுவோம், உயிர் போக வேண்டும் என்று கூட தோன்றும். உயிர் போகுமா அல்லது பல நாட்கள் கழித்து ஐஸ்கிரீம் சாப்பிடும் நிலை வருமோ... டூர் போவோமா... அடிக்கடி, "அவர் இருந்திருந்தா... அவர மாதிரி வருமா?' அப்படி, இப்படின்னு பேசும் போது, கொட்டேஷன் பயன்படுத்தற மாதிரி ஆகுமோ?'

அவள் கண்கள் முன் கணவனை இழந்த பெண்கள் ஊர்வலமாய் வந்தனர். "இன்று இவர்கள் திரட்டுபால் சாப்பிட்டாலும், சீரியல் பார்த்தாலும், "டிவி'யில், காமெடி ÷ஷாவை பார்த்து ரசித்தாலும், வாரிசுகளின் புதுவீட்டு மாடி ரூமில், "ஏசி'யில் உறங்கினாலும், அன்று தத்தம் புருஷன்களிடம் அன்பாகத்தானே இருந்திருப்பர். அந்த அன்பு எங்கே போனது... அவர் மறைந்தவுடன் அன்பு போய் விடுமோ... அது என்ன அன்பு... எந்த வகையில் சேர்த்தது... நீ இன்றி நான் இல்லை என்பது வசனமாகவே போய் விடுகிறதே...'

கணவனின் கேள்வியில் உள்ள அர்த்தம், அவளுக்கு புரிந்தது என்றாலும், அவர் கேட்ட கேள்வியில், குழம்பியிருந்தாள் ஜானகி.

"இரவு என்ன பதில் சொல்வது... நானும் மற்றவர்களைப் போல் தான் என்றா... இல்லை, நீங்கள் போனவுடன், நானும் உயிரை விடுவேன் என்றா... அது உண்மையா; அதை நம்புவாரா... அதை நானே நம்ப முடியுமா?'

வேலை முடிந்து திரும்பிய மகன், மருமகனிடம் கூட, சரியாக பேசவில்லை ஜானகி.

""ஏம்மா... என்னவோ மாதிரி இருக்கீங்க...'' மகன் மட்டும் கேட்டான்.
ஏதோ சொல்லி சமாளித்தாள்.

மருமகள், ""குழந்தைகள் நன்றாக சாப்பிட்டனரா?'' என்று கேட்டாள்.

ஜானகி சந்திக்க தயங்கும் அந்த இரவு வந்தது.

ஜெயராமன் கண் மூடி கட்டிலில் கிடக்க, "கடவுளே... இவர் அந்த புது சந்தேக கேள்வியை மறந்தால் நன்றாக இருக்குமே...' என நினைத்து, மெதுவாக கட்டிலின் ஓரமாக அமர்ந்தாள் ஜானகி.

""என்ன ஜானகி... வேலை முடிஞ்சுதா?''
கணவன் குரலில் சற்று அதிர்ந்தாள்; அடுத்தும் எதிர்பார்த்தாள்.

""ம்... சொல்லு ஜானகி... நான் திடீர்ன்னு போய்ட்டா நீ என்ன செய்வ?''
ஜானகியின் கண்கள் லேசாக கலங்கின.

""உங்களுக்கு முன் நான் போகணும்ங்க!''
ஜெயராமன் முகமும் வாட்டமானது.

""சரி... உன்னை கேட்ட அதே கேள்வியை, என்னையே கேட்டுப் பார்த்தேன் ஜானகி. எனக்கு என்ன தோணிச்சுன்னா... இவ்வளவு யோசிக்கற நான் உயிரோட இருக்கக் கூடாது. என்னையும் கடவுள் அழைச்சுக்கணும். அதத்தான் நான் விரும்பறேன் ஜானகி. மத்தவங்க மாதிரி, ஏதோ கடமை, உறவு என்று காரணம் சொல்லி, நான் சிரிச்சு சந்தோஷமா வாழ்ந்தா, அது, உனக்கு செய்யற துரோகம் ஜானகி!''

ஜெயராமனின் குரலில் உறுதி தெரிந்தது.
ஜானகியின் பார்வை, கணவனை நேராக பார்க்க திராணியற்று, கீழே படர்ந்தது. ஆனாலும் கேட்டாள்...

"" உயிர் போகணும்ன்னு நானோ, நீங்களோ நெனைச்சா, உடனே போய்டுமாங்க... அது, நடக்கற காரியமாங்க?''
ஜெயராமன் சிறிது நேரம் யோசித்து, பிறகு சொன்னார்...

""ஜானகி... தாம்பத்யம் எப்ப புனிதமாகும் தெரியுமா... ஈருடல் ஓர் உயிராகும் போதுதான். அந்த ஒரு உயிர் பூமியவிட்டு போனா, இன்னொரு ஆத்மாவும், அந்த ஒரு உயிர்லேயே கலந்திருக்கிற பட்சத்துல, எப்படி பூமியில வாழ முடியும்?

""தெளிவா சொல்லணும்ன்னா... கணவன் இறந்த மறு நொடியே மனைவியும்... இல்ல, மனைவி போன மறு நொடியே கணவனும், தங்களையும் அறியாம, தங்கள் ஜீவனை விடணும். இது, கட்டியமில்ல ஜானகி. இது நடந்தா, அவங்க தான் புனிதமான தாம்பத்யத்தில் வாழ்ந்தவங்கன்னு அர்த்தம்!

""அதனால... ஒருத்தரை விட்டு ஒருத்தர் வாழ்ந்தாங்கன்னா தப்பு இல்ல; அது, சாதாரண மனித வாழ்க்கை. நான், புனித வாழ்க்கை வாழணும்ன்னு ஆசைப்படறேன் ஜானகி!''

முடிக்கும் போது, அவரது குரல் தழுதழுத்தது.

அவர் மடியில் சாய்ந்தாள் ஜானகி. அவர் அவளது தலையை மெதுவாக கோதினார்.

அந்த ஆதரவான ஸ்பரிசத்தில் திளைத்த ஜானகி, "கடவுளே... எங்கள் தாம்பத்யமும் புனிதமாக வேண்டும்...' என, கடவுளிடம் வேண்டினாள்.