Tuesday, December 6, 2011

கோடீஸ்வரர் ஆக '10' மந்திரங்கள்!

கோடீஸ்வரர் ஆக '10' மந்திரங்கள்!

 

               கோடீஸ்வரனாக வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது. கொஞ்சம் பக்காவான திட்டமிடல் இருந்தால் நீங்களும் நிச்சயம் கோடீஸ்வரர் ஆகலாம். இதற்கு 'பத்து' மந்திரங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். அது என்ன 'பத்து' மந்திரங்கள்?

 

 

*      முதல் 'பத்து!'

 

பத்து சதவிகிதத்துக்கு மேல் வட்டி உள்ள கடன்களை முதலில் அடையுங்கள்..!

இன்றைக்கு கடன் வாங்காத மனிதர்களே இல்லை; அதிலும் ஒரே ஒரு கடன் மட்டுமே வாங்கியவர் களும் குறைவு. வீட்டுக் கடன், தனிநபர் கடன், நகை அடமானக் கடன், கிரெடிட் கார்டு கடன் என பலரும் பலவகையான கடன்களை வாங்கி இருக்கிறார்கள். இதில் சுமார் 10 சதவிகிதத்துக்கு மேல் வட்டியுள்ள கடனை முதலில் தீர்ப்பதுதான் புத்திசாலித்தனம். இப்படி வீணாகச் செல்லும் வட்டியைக் குறைத்து சேமித்தாலே நிறைய பணம் சம்பாதிக்கலாம்.

 

உதாரணமாக, நீங்கள் 16 சதவிகித வட்டியில் ஒரு லட்ச ரூபாய்க்கு தனிநபர் கடன் வாங்கி இருக்கிறீர்கள். அதே நேரத்தில், 9 சதவிகிதம் வட்டி தரும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறீர்கள் எனில், ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருக்கும் பணத்தை எடுத்து தனிநபர் கடனை அடைப்பதுதான் புத்திசாலிதனம்.

 

அதே நேரத்தில், கடனுக்கான வட்டியைவிட உங்களின் முதலீடு மீதான வட்டி அதிகமாக கிடைக் கிறது என்றால், அந்த முதலீட்டை அப்படியே தொடர்வது நல்லது.

 

 

*      இரண்டாவது 'பத்து!'

 

பத்து மாதங்களுக்குத் தேவையான அவசர செலவுக்கான பணத்தை எப்போதும் சேமிப்பில் வைத்திருங்கள்..!

 

உங்களின் குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு சராசரியாக அத்தியாவசிய செலவுகளுக்காக (உணவு, போக்குவரத்து, ஆடை, வீட்டு வாடகை...) எவ்வளவு தொகை செலவாகிறது என்பதைக் கணக்கிடுங்கள். அதேபோல் பத்து மடங்கு தொகையை எப்போதும் அவசர செலவுக்காக சேமிப்பில் வைத்திருங்கள்.

 

இப்படி செய்யாதபட்சத்தில் கடன்  வாங்குவதற்குப் பேயாய் அலைய வேண்டி யிருக்கும். அவசரத்திற்கு கடன் வாங்குகிறோம் என்று தெரிந்தால், நம்மிடமிருந்து அதிக வட்டி கேட்க யாரும் தயங்க மாட்டார்கள்.  

 

பத்து மாதத்திற்குச் சேமித்து வைத்திருக்கும் பணத்தை வங்கி சேமிப்பு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட், லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்து வைத்தால், அதன் மூலமும் கணிசமான வருமானம் கிடைக்கும்.

 

 

*      மூன்றாவது 'பத்து!'

 

 

பத்து சதவிகிதத்தை, மொத்த வருமானத்தில் ஓய்வுகாலத்துக்காக ஒதுக்குங்கள்..!

நம்மவர்கள் சேமிப்பில் கில்லாடிகள்.  கடந்த 2008-ம் ஆண்டில் உலகமே நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது, நம்மவர்களை அதிக பாதிப்புக்கு உள்ளாக்காமல் காப்பாற்றியது இந்த சேமிப்புதான். இந்தியர் ஒருவர் சராசரியாக அவரின் வருமானத்தில் சுமார் 35 சதவிகிதத்தைச் சேமிக்கிறார்.

 

உங்களின் மாத மொத்த வருமானத்தில் பத்து சதவிகிதத்தை ஓய்வு காலத்துக்காக சேமிப்பது அவசியம். இந்தத் தொகையை நீண்ட கால முதலீட்டில் (சுமார் 20-25 ஆண்டுகள்), உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப (பி.பி.எஃப், ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட்/இ.எல்.எஸ்.எஸ்., நியூ பென்ஷன் ஸ்கீம், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பென்ஷன் பிளான்) முதலீடு செய்தால், பவர் ஆஃப் காம்பவுண்டிங் முறையில் நீங்கள் கோடீஸ்வரர்தான்.