Monday, December 26, 2011

உணவுகள் அனைத்துமே உடலுக்கு நன்மை தரக்கூடியவையா?


ணவகங்களில் இட்லி, தோசை ஆர்டர் செய்கிறவர்களைக் கேலியாகப் பார்க்கிற மனோபாவம் வந்து, பல வருடங்களாகிவிட்டன.'எப்பப் பார்த்தாலும்தான், வீட்ல இட்லியும் தோசையும்தான் சாப்பிடுறோம். இங்கே வந்து, வேற ஏதாவது சாப்பிடக் கூடாதா?' என்று நண்பர்களோ உறவுகளோ அலுத்துக்கொண்டு பேசுவது இயல்பாகிவிட்டது.

கடந்த 15 வருடங்களில், உணவகங்களில் உள்ள பெயர்ப் பலகைப் பட்டியல், மிகப் பெரிதாக நீண்டு விட்டன. வித்தியாசமான பெயர்களைக் கொண்ட உணவுகளும், பெயரே வாயில் நுழையமுடியாதபடி இருக்கிற உணவுகளும் இன்றைக்கு வந்துவிட்டன.

இந்த உணவுகள் அனைத்துமே உடலுக்கு நன்மை தரக்கூடியவையா என்று பார்த்தால், இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கும். உணவு என்பது உடலுக்கு பலம் சேர்ப்பதாகத்தானே இருக்கவேண்டும். மாறாக, உடலின் அன்றாட இயக்கத்தையும்... இன்னும் சொல்லப் போனால், உடலின் அமைப்பையேகூட மாற்றுகிற வல்லமையுடன் இந்த உணவு வகைகள் இன்றைக்குப் பல்கிப் பெருகியிருக்கின்றன என்பதே உண்மை!

உணவு வகைகள் என்றில்லாமல், குழந்தைகளை ஈர்க்கிற கொறிக்கிற பண்டங்களும் மெள்ள மெள்ள முளைத்துவிட்டன. பிஸ்கட், சாக்லேட், பழங்கள் என்று குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்த நிலையில் இருந்து, மேல்தட்டு மக்களில் துவங்கி நடுத்தரவர்க்க மக்களும்கூட தங்கள் குழந்தைகளுக்கு, காற்றடைத்த பேப்பர் கவர்களில் இருக்கிற பண்டங்களைக் கொறிப்பதற்கு வாங்கிக் கொடுக்கிறார்கள்.

இந்த உணவு மாற்றங்களால் ஏற்பட்டிருக்கிற விளைவு... குழந்தைகளும் இளைஞர்களுமாக நம்மில் பலரும் ஊளைச்சதையுடன் திகழ்கின்றனர். வயதுக்குத் தக்க உடற்கட்டு இல்லாமல், அதீத வளர்ச்சியில் பருமனாகிப் போகின்றனர்.

ஒருமுறை, அன்பர் ஒருவர் என்னிடம் வந்தார். மூச்சிரைப்புக்கு நடுவே... இட்லி, தோசையைத் தொடுவதே இல்லை என்றும், வெளிமாநில மற்றும் மேற்கத்திய உணவுகளைச் சாப்பிட்டு வந்ததால், கடந்த மூன்று வருடங்களில் இப்படிப் பருத்துவிட்டதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

'நீங்கள்தான் சுவாமி ஏதேனும் செய்து என்னை ஒல்லியாக்க வேண்டும்' எனக் கண்ணீர் விடாத குறையாகப் புலம்பினார்.

''எனக்கு எந்த மாய- மந்திரங்களும் தெரியாது. ஆனால், உங்களின் பெருத்த உடலை சில நாட்களுக்குள் பழையபடி ஒல்லியான தேகமாக மாற்றிவிட முடியும். அதற்கு நான் உறுதியளிக்கிறேன். ஆனால் அந்த மாற்றத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நீங்கள்தான் அந்த மாற்றத்தைச் செய்ய வேண்டும்'' என்றேன்.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை. மலங்க மலங்க விழித்தார்.

''இங்கே, அறிவுத் திருக்கோயிலில் கற்றுத் தருகிற மனவளக் கலைப் பயிற்சியை, சிரமேற் கொண்டு தினமும் செய்கிறீர்களா?'' என்று கேட்டேன்.

''நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதைச் செய்கிறேன் சுவாமி. இந்தப் பருத்த உடம்பைத் தூக்கிக்கொண்டு என்னால் நடக்கவே முடியவில்லை. பத்தடி நடந்தாலே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி, பிராணனே போய் விடும்போல பயமாக இருக்கிறது. உட்கார்ந்து எழுந்திருப்பதும் சிரமமாக இருக்கிறது. ஏன் சுவாமி, இந்தப் பயிற்சியை மட்டும் செய்தால் போதும்தானே?! நான் ஒல்லியாகிவிடுவேனா?'' என்று அப்பாவியாகக் கேட்டார்.

உடனே நான், ''இன்னொன்றும் செய்ய வேண்டும். குறிப்பாக உணவு அருந்துவதற்கு முன்னதாக, மந்திரம் போலும் அந்த வார்த்தையை மூன்று முறை சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்'' என்றேன்.

''அடடா... அப்படியரு மந்திரத்தைத்தான் கேட்டேன், சுவாமி! சொல்லுங்கள்... என்ன மந்திரம் சுவாமி அது?'' என்று கேட்டார்.

நான் அவரிடம், ''சாப்பாட்டுத் தட்டுக்கு எதிரில் அமர்ந்ததும், கண்களை மூடி, மெல்லிய குரலில், 'போதும் போதும் போதும்' என்று ஆத்மார்த்தமாகச் சொல்லிவிட்டுச் சாப்பிடுங்கள்'' என்றேன்.

பிறகு அந்த அன்பருக்கு, மன வளக் கலைப் பயிற்சிகள் சொல்லித் தரப்பட்டன. பயிற்சியின் ஒவ்வொரு நிலையையும் ஆத்மார்த்தமாகக் கற்றுக்கொண்டே வந்தார் அவர். மெள்ள மெள்ள... உணவுப் பழக்க வழக்கங்களில், தான் ஓர் ஒழுங்கைக் கொண்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

அடுத்தடுத்த பயிற்சியில், அவருக்கு மகராசனம் சொல்லிக் கொடுக்கப்பட்டது. மனவளக் கலையில், மிக முக்கியமான பயிற்சிகளில் இதுவும் ஒன்று! நம் ஒட்டுமொத்த உடலின் நாடி நரம்புகள் அனைத்தையும் உசுப்பி, பலம் சேர்க்கக்கூடிய அற்புதமான பயிற்சி இது.

இந்தப் பயிற்சிகளைக் கற்றுக்கொண்ட அன்பர், பிறகு வீட்டில் தினமும் மகராசனம் செய்து வர... அடுத்த இரண்டே மாதங்களில், அவரின் உடலில் இருந்த ஊளைச்சதை மொத்தமும் கரைந்து காணாமல் போயிருந்தது.

ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில், அந்த பிரமாண்ட ஹாலில், அவர் வேகவேகமாக நடந்து வந்து, நமஸ்கரித்து, என் எதிரில் அமர்ந்தபோது, அவரிடம் முன்பு இருந்த மூச்சிரைப்பைக் காணவே காணோம். சுமார் 8 கிலோ வரை எடை குறைந்துவிட்டதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

உணவில் ருசி எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உணவுக் கட்டுப்பாடும் மிக மிக அவசியம். 'போதும்' என்கிற சொல்லை, மந்திரமென அந்த அன்பர் மேற்கொண்டதில் தவறேதும் இல்லை. 'போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து' என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள், அல்லவா?! அது, எத்தனை சத்தியமான வார்த்தை!

உணவு, உடல், உயிர் ஆகிய மூன்று விஷயங்களில் மிகுந்த கவனமாக இருந்தால்தான், இந்த இப்பிறவியை எளிமையாகவும் இனிமையாகவும் கடக்கமுடியும். இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் கவனச் சிதைவு ஏற்பட்டால்கூட, அது மொத்த வாழ்க்கையையுமே கலைத்துப் போட்டுவிடும்!

கடலிலும் ஆறுகளிலும் இருக்கிற மீன்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஆற்றங்கரையில், படித்துறையில் அமர்ந்துகொண்டு, ஒரு கை அளவுக்குப் பொரியை எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக அதைத் தண்ணீரில் இடுங்கள். எங்கிருந்தோ மீன்களின் கூட்டம் அந்தப் பொரி விழுந்த இடத்துக்குச் சட்டென்று வந்துவிடும். கிடைக்கிற உணவைச் சாப்பிட்டுவிட்டு, சட்டென்று சிறிய வாலை ஆட்டிச் சிலுப்பிக்கொண்டு அவை மெள்ள மெள்ள நீந்திச் செல்கிற அழகு, மிக உன்னதமான கவிதை!

கிட்டத்தட்ட மீனைப் போல் நாமும் நம் கைகளையும் கால்களையும் நீட்டிச் செய்கிற பயிற்சிதான், மகராசனம். அந்தப் பயிற்சியை மேற்கொண்டால், வாழ்க்கைப் போராட்டத்தில், எதிர்நீச்சல் போடுவது மிக எளிது!