Tuesday, January 3, 2012

காதல் சிகிச்சை !

நவீன ஆங்கிலப் படங்கள் பெரும்பாலானவற்றில் நீங்கள் ஒரு விஷயத்தைப் பார்க்க முடியும். பணக்கார நாடுகள் என்று போற்றப்படும் அமெரிக்க, ஐரோப்பிய கண்டத்து நாடுகளில், சுக்குநூறாக உடைந்து கிடக்கும் குடும்பங்களின் பரிதாபமான நிலை அந்தப் படங்களில் பதிவாகியிருக்கும்!

அப்பா, அம்மாக்கள் பிரிந்த பின், ஃபாஸ்டர் காப்பகங்களில் வளரும் பிள்ளைகளைப் பல படங்களில் காண முடியும்.

உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்த 'கிங் ஆஃப் பாப்' மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகள்... தாய், தந்தை இருவரின் அன்பும் கிடைக்காமல், கடைசி வரை அல்லாடியதை நாம் அறிவோம்.

ஆனால், நம்முடைய கலாசாரம் வேறு. பல பிற்போக்குத்தனமான கூறுகள் இருப்பதாக விமர்சிக்கப்பட்டாலும், இந்தியக் குடும்ப அமைப்பு என்பது மிகவும் வலுவானது. இங்கே... காதல் என்பது பாசமாகவும், அர்ப்பணிப்பு உணர்வாகவும், தியாகமாகவும் மாறும் அற்புதங்களை உள்ளடக்கியது.

பிரபல சித்த மருத்துவர் சிவராமன், இந்தியப் பாரம்பரிய உணவுகளின் மகத்துவத்தைப் பற்றியும், அவற்றின் நோய் தீர்க்கும் மகிமைகளைப் பற்றியும் 'ஏழாம் சுவை' என்கிற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அதில் முத்தாய்ப்பாக சொல்லியிருக்கும் விஷயம்... 'உணவு, வாழ்க்கை முறை, அழுத்தமற்ற மனநிலை இவை எல்லாமே மிகவும் முக்கியம்தான். ஆனால், இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது... மனிதர்களுக்கு இடையே இருக்கக் கூடிய காதல். அன்பும், பரிவும், காமமும், காதலும் ஒன்று சேர்ந்துதான் ஆரோக்கியமான மனநிலையை உருவாக்குகிறது. ஆதலினால் காதல் செய்வீர்!' என்கிறார் அழுத்தமாக.

ஷாலினியும், சிவாவும் உயிருக்குயிராக காதலித்துத் திருமணம் செய்தவர்கள். இரண்டு குழந்தைகளுடன் அழகான, அளவான குடும்பம். இருவருமே ரசனை மிகுந்தவர்கள். எட்டு வருட குடும்ப வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் சென்றிருக்கையில் ஒரு நாள்... அலுவலகத்தில் திடீரென்று மயக்கமடைந்து விழுந்தான் சிவா. ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். எல்லா டெஸ்ட்டுகளும் முடித்த ஒரு வாரத்துக்குப் பிறகு, மூளையில் கட்டி என்று கண்டுபிடிக்கப்பட்டது.

'அறுவை சிகிச்சை அவசியம். என்றாலும், அதற்கான நேரம் இதுவல்ல, அவர் உடல் நலம் அதற்கு இடம் அளிக்க வேண்டும்' என்றார்கள் நியூராலஜி நிபுணர்கள். தினசரி மாத்திரைகள், ஊசிகள் என்று சிகிச்சை ஆரம்பித்தது. ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு... ஸ்கேன் செய்து பார்த்து அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கலாம்; அதுகூட 40 சதவிகித ரிஸ்க்குக்கு உட்பட்டதுதான் என்று எச்சரித்தார்கள் மருத்துவர்கள்.

உள்ளுக்குள் கலங்கினாலும், திடமான மனதால் அந்தக் கடும் பிரச்னையை நேர்கொண்டு எதிர்க்க ஷாலினி முடிவு செய்தாள். கோடைக்காலம் என்பதால், ஒரு மாதத்துக்கு கொடைக்கானலில் ஒரு ரிஸார்ட்டை புக் செய்தாள். குழந்தைகள், கணவனைக் கூட்டிக் கொண்டு அங்கே இடம் பெயர்ந்தாள். நோயைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. குழந்தைகளின் அறிவுக் கூர்மையைப் பற்றி, உலக நடப்புகளைப் பற்றிப் பேசியவள், நல்ல இசையை அடிக்கடி இழையவிட்டாள். இரவு நேரங்களில் குழந்தைகளைத் தூங்க வைத்த பிறகு... சிவாவை அணைத்துக் கொண்டு... காதலித்தபோது நடந்த இனிய சம்பவ நினைவுகள், அது குடும்பமாக மலர்ந்தபோது ஏற்பட்ட மாறுதல்கள், அன்பும், காதலும், பொறுப்புணர்வும் மிக்க பொக்கிஷமான கணவன் தனக்குக் கிடைத்திருப்பதில் வேர் வரை மலர்ந்து மகிழும் அவள் மனது... என அவனிடம் பேசிக்கொண்டே இருந்தாள். அந்தப் பேச்சுகள் அவனை மெஸ்மரிஸம் போல் தாலாட்டின.

ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் சென்னை வந்து ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது... மிரண்டே போனார்கள் மருத்துவர்கள். கட்டி, மிகச் சிறியதாக குறைந்து போயிருந்தது. 'இனி, மருந்துகள் மூலமே நீக்கி விடலாம்' என்று சந்தோஷமாகச் சொன்னார்கள்.

''கொடைக்கானலில் ஏதாவது சிகிச்சை கொடுத்தீர்களா?' என்று கேட்டார் ஒருவர்.

'ஒரே ஒரு சிகிச்சைதான்... அதன் பெயர் காதல்!' என்று சொல்லாமல் மவுனமாகப் புன்னகைத்தாள் ஷாலினி. மருத்துவர்களின் சிகிச்சை, மருந்துகளின் பங்கு... சிவாவின் ரெக்கவரிக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால், அதில் பெரும் பங்கு ஷாலினியின் மனோரீதியான காதல் சிகிச்சை!

ஆமாம்... காதல் மிராக்கிள்களை உருவாக்கும்; வாழ்க்கையை மேலும் அழகாக்கும்!


- Aval Vikatan