Sunday, January 8, 2012

கிரெடிட் கார்டு மோசடி யார் பொறுப்பு?

கையில் காசு வைத்திருந்தால்தான் கொள்ளை அடிக்கிறார்கள் என்று டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால், இப்போது அதையும் திருடி அதிலிருந்து பணத்தைக் கொள்ளை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த வேதனை போதாது என இடியாக வந்து இறங்கியிருக்கிறது டெல்லி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு ஒன்று.

''கிரெடிட் கார்டு தனி மனிதனின் தேவைக்காக பயன்படுத்தப்படுவது. அதை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்த வேண்டியது கிரெடிட் கார்டு வைத்திருப்பவரின் கடமை. கிரெடிட் கார்டு மூலம் பணம் சூறையாடப்பட்டாலோ அல்லது தவறான பரிவர்த்தனைகள் நடந்தாலோ அதற்கு கிரெடிட் கார்டு உரிமையாளருக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. எனவே, இதற்கு வங்கி பொறுப்பாகாது. அந்த இழப்பு கிரெடிட் கார்டு உரிமை யாளரையே சேரும்'' என்பது டெல்லி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு.

டெல்லி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பு எதிர்காலத்தில் இந்தியா முழுக்க பின்பற்றப்படுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றாலும், தமிழகத்தில் கிரெடிட் கார்டு திருடப்பட்டு முறைகேடாக பயன்படுத்தப்பட்டால் அதற்கு என்ன தீர்வு? என்கிற கேள்விக்குப் பதில் சொன்னார் வங்கி மோசடி தடுப்பு பிரிவின் உதவி கமிஷனர் ஜான் ரோஸ்.


பிரச்னை வராமலிருக்க..!

''கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்தி பாதுகாப்பாக வைத்துக் கொண்டாலே நமக்கு எந்த பிரச்னையும் வர வாய்ப்பில்லை. பெட்ரோல் போடும் போது, ஓட்டலுக்குச் செல்லும் போது, கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-லிருந்து பணம் எடுக்கும் போது ஏற்படும் கவனச் சிதறல்கள்தான் பெரும்பாலான பிரச்னைகளுக்கு மூலகாரணம். இது போன்ற இடங்களில் கவனத்துடன் நடந்துகொள்வது அவசியம். ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும்போது, ரயில் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கிரெடிட் கார்டு பற்றிய முழு விவரங்களையும் தெரிவிப்ப தினாலும் பிரச்னை வருகிறது.

இன்றைய இளைஞர்கள் தேவையில்லாத இடத்திலெல்லாம் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பிரச்னை யில் மாட்டி முழிக்கிறார்கள். உதாரணமாக, பார்களுக்குச் சென்று மது அருந்தும் போது கூட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். இது போன்ற இடங்களில் நம் கிரெடிட் கார்டுகள் பற்றிய தகவல்கள் எளிதாக திருடு போக வாய்ப்பிருக்கிறது.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது, அதை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சென்னை தீவுத்திடலில் நடக்கும் கண்காட்சியில் ஒரு சிறப்பு மையத்தை தொடங்கி, இந்த விழிப்புணர்வை உருவாக்கி வருகிறோம்'' என்றார் ஜான் ரோஸ்.

கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பதை வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தோம்.

''கிரெடிட் கார்டை கட்டுப்பாட்டுடன் பயன் படுத்தினால் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பலப்பல. ஆனால், தேவையற்ற பொருட்களை வாங்குவது, கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பது (இப்படி எடுக்கப்படும் பணத்திற்கு முதல் நாள் தொடங்கி வட்டி உண்டு!) போன்றவற்றுக்கு கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் பிரச்னைதான்'' என்றார்கள்.  


கிரெடிட் கார்டு தொலைந்தால்..?

கிரெடிட் கார்டு தொலைந்து போனால் உடனே வங்கி கிரெடிட் கார்டு கஸ்டமர் கேர் பிரிவுக்கு போன் செய்து கார்டு பற்றிய விவரங்களைச் சொல்லிவிட்டால் கார்டை முடக்கி விடுவார்கள். 30 நாட் களுக்குள் உங்களுக்கு புது கார்டு அனுப்பி வைப்பார்கள். இதற்கு சுமார் 100-150 ரூபாய் கட்டணம் ஆகலாம்'' என்றார்கள் வங்கி அதிகாரிகள்.

தேவை இல்லாமல் கிரெடிட் கார்டை பயன்படுத்துவானேன், பிரச்னையில் மாட்டி முழிப்பானேன்?


யார் பொறுப்பு?

கிரெடிட் கார்டு திருடப்பட்டு அது முறைகேடாக பயன்படுத்தப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என வழக்கறிஞர் என்.ரமேஷிடம் கேட்டோம். ''வாடிக்கையாளர்களின் கவனக்குறைவால் கிரெடிட் கார்டு திருடு போவது மற்றும் கார்டு சம்பந்தப்பட்ட தகவல் திருடு போவதினால் ஏற்படும் இழப்புகளுக்கு வங்கிகளை பொறுப்பாக்க முடியாது.

எந்த வங்கியுமே வாடிக்கையாளர்களின் கார்டு பற்றிய முழுதகவல்களை தெரிவிக்கும்படி இ-மெயில், எஸ்.எம்.எஸ். போன்றவற்றை  அனுப்பாது. அப்படி ஒரு போலியான இ-மெயில் வந்து, உங்கள் கார்டு பற்றிய தகவலை தந்தால், அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு வங்கி பொறுப்பாகாது. இதுபோன்ற மெயில்கள் வரும்பட்சத்தில் உடனடியாக வங்கியோடு தொடர்பு கொள்வது நல்லது.  

ஆனால், வங்கிகளின் தொழில்நுட்பக் குறைபாடுகளினால் இழப்பு ஏற்பட்டால் அதற்கு வங்கிதான் பொறுப்பேற்க வேண்டும். வங்கி நிர்வாகம் அப்படி பொறுப்பேற்க தவறினால், வாடிக்கையாளர்கள் தாராளமாக நீதிமன்றத்தை நாடலாம்'' என்றார்.