Tuesday, January 31, 2012

கட்டட்டும் கல்யாண களை!

'டீன் ஏஜ் வயதுக்கான பிரச்னைகள், தீர்வுகளை இதுவரை பார்த்தோம். இனி, 'திருமண வயது' என்று கொண்டாடப்படும் 21 வயதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி பார்க்கலாமா!

ஒரு பெண் திருமணத்துக்குத் தயாராகிறார் என்றாலே... அழகு, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் தானாகவே அக்கறை ஒட்டிக் கொண்டுவிடும். பெண்களுக்கு மிகுதியான மனப்பூரிப்பைத் தரும் மகிழ்ச்சியான தருணமல்லவா திருமணம்! நிச்சயதாம்பூலத்துக்கும், திருமணத்துக்கும் இடையில் இருக்கும் நாட்களில் இந்தப் பூரிப்பை பெண்கள் அதிகமாக உணர்வார்கள். அதைத்தான் 'பொண்ணுக்குக் கல்யாண களை வந்துடுச்சு!' என்று கேலியாகச் சொல்லி விளையாடுவார்கள் வீட்டுப் பெரியவர்கள்.

இத்தகைய பூரிப்புக்குக் காரணம், இந்த நேரம் உடலில் சுரக்கும் 'எண்டார்ஃபின்ஸ்'  (Endorphins) எனப்படும் 'ஹேப்பி ஹார்மோன்'தான். இது, மகிழ்ச்சியைத் தூண்டி முகத்தில் பொலிவை உண்டாக்கும்.

ஆனால், சிலருக்கு திருமண நாளை எதிர்நோக்கி முன்னேறும் மாதங்களில்... அளவுக்கு அதிகமாக தடதடவென எடை கூடிவிடும். இதைக் கட்டுப்படுத்த... 'ஸ்ட்ரிக்ட் டயட்', அதாவது உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். அதோடு, சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. டயட் என்றதுமே இஷ்டம் போல பட்டினி கிடந்தால், அது புதி தாக வேறு பிரச்னைகளுக்கு

வழி ஏற்படுத்திவிடும். எனவே, மருத்துவர் மற்றும் டயட்டீஷியன் ஆலோசனை பெறுவது நல்லது!

இன்னொரு பக்கம், திருமணத்துக்கு தேதி குறித்துவிட்ட நிலையிலும்கூட பூரிப்பே இல்லாமல் இருப்பார்கள் சில பெண்கள். இப்படிப்பட்டவர்களுக்கு வைட்டமின் 'டி' அதிகமாக தேவைப்படும். இதற்காக சூரியஒளி அடிக்கடி உடல்மீது படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள், சமைக்கப்படாத பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்வது, வெஜிடபிள் ஜூஸ் பருகுவது மற்றும் உடற்பயிற்சிகள் செய்வது என வழக்கப்படுத்திக் கொண்டால்... இவர்களையும் பொலிவடைய வைத்துவிடும் அந்த 'ஹேப்பி ஹார்மோன்'!

முகூர்த்த நாள் குறித்துவிட்டால், மண்டபம் புக் செய்கிறார்களோ இல்லையோ... பியூட்டி பார்லரில் ரெஜிஸ்டர் செய்து விடுகிறார்கள் நம் பெண்கள் பலரும். அதுவரை பார்லர் பக்கமே அடி எடுத்து வைத்திராத பெண்கள்கூட, திருமணம் என்றால் அங்கே தலைகாட்டத் தயங்குவதில்லை. இதில் தவறில்லை. ஆனால், இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங் களை மனதில் ஏற்றிக் கொண்டு, பிறகு பார்லருக்குள் செல்வது நல்லது.

தரமான பியூட்டி பார்லராகத் தேர்ந்தெடுக்க வேண்டியது, முதல் அறிவுறுத்தல். டவல், சீப்பு, க்ரீம் என்று வேறொருவருக்குப் பயன்படுத்தியதை நமக்கும் பயன்படுத்தினால், திருமண நாளில் பருக்கள், ஸ்கின் அலர்ஜி என்று அவஸ்தைப்பட நேரலாம். குறிப்பாக, வேக்ஸிங் செய்முறையில் சுகாதாரம் இல்லை என்றால்... டிரை ஸ்கின், இன்குரோயிங் ஹேர், ஹேர் ஃபாலிக்கிள்களில் இன்ஃபெக்ஷன் என பல பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. வேக்ஸிங் செய்தபின், ஆன்ட்டி செப்டிக் லோஷன் கொண்டு துடைத்தெடுக்க வேண்டியதும் அவசியம்.

ஃபேஷியல், ப்ளீச், த்ரெட்டிங், பெடிக்யூர், மேனிக்யூர், ஹேர் ஸ்பா, ட்ரிம்மிங், டீப் கண்டிஷனிங், பாடி வேக்ஸிங், அண்டர் ஆர்ம் வேக்ஸிங், ஃபுல் பாடி மசாஜ்... என உடல் முழுவதும் பார்லரில் புதுப்பொலிவு ஏற்றுவார்கள். இந்த ட்ரீட்மென்ட்களால் சருமத் துவாரங்கள் திறந்து, அழுக்குகள் வெளியேறியிருக்கும். சருமம் அப்படி சென்சிட்டிவ் நிலையில் இருக்கும்போது, அதிகம் வெயிலில் அலையக் கூடாது.

அடுத்ததாக, திருமண நாளை ஒட்டி பீரியட்ஸ் டேட் இருந்தால்... அதுவும் ஒரு பிரச்னையாக மணப்பெண்ணை வதைக்கும். பொதுவாக, மணப்பெண்ணின் சௌகரியம் கேட்டே திருமண நாள் குறிப்பார்கள். என்றாலும், தவிர்க்க முடியாத சூழலில் இப்பிரச்னையைச் சந்திக்க நேரும்போது, மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்காக சிலர் மாத்திரைகளைச் சாப்பிடுவார்கள். இது முழுக்கத் தவறான செயல். அந்த மாத்திரைகள்... முகம், கை, கால் வீக்கத்தை ஏற்படுத்தலாம். சோர்வையும் அதிகப்படுத்தி விடக்கூடும். இதுபோன்ற சங்கடங்களில் சிக்கி சிரமப்படுவதைவிட, 'மாதவிடாய்' தரும் சின்ன சிரமம்... பரவாயில்லை என்று திடப்படுத்திக் கொள்வதே நல்லது.