Saturday, March 24, 2012

பணியிடத்தில் கிடைக்கும் பாராட்டு அல்லது விமர்சனம்

புகழ்ச்சி - இகழ்ச்சி, இன்பம் - துன்பம், ஏற்றம் - இறக்கம் என வாழ்க்கையில் மாறி மாறி வருகின்ற விஷயங்களை நடுநிலையோடு கையாளக் கற்றுக் கொண்டோமெனில், வாழ்க்கை தெளிந்த நீரோடையைப் போல இருக்கும். இது ஒன்றும் தத்துவார்த்தமான விளக்கமல்ல, அனுபவப்பூர்வமான உண்மை.

தேபோல பணி இடத்தில் பிறர் நம்மை பாராட்டும்போதோ அல்லது குறை சொல்லும்போதோ அதை எப்படி ஏற்றுக் கொள்கிறோம், அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் தன்னம்பிக்கையும், பணியில் வளர்ச்சியும் அமையும்.

பணியிடத்தில் கிடைக்கும் பாராட்டு அல்லது விமர்சனம் இவை இரண்டையுமே பிறர் நமக்கு தரும் ஃபீட்பேக் ஆகத்தான் பார்க்க வேண்டும். இப்படி பார்த்தால் மட்டுமே அவற்றால் நாம் பாதிக்கப்படாமல் நல்ல பாடங்களை கற்றுக் கொள்ள முடியும்.

விமர்சனங்களை கையாள்வதுதான் கடினம், பாராட்டுகளை கையாள என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். நிறைய சூழ்நிலைகளில் பாராட்டுகள் நேரடியாகவோ அல்லது சரியான விதத்திலோ கிடைப்பதில்லை. உதாரணத்திற்கு, நீங்கள் குழு முயற்சியோடும் கவனத்தோடும் தயாரித்த அறிக்கையைப் படித்துவிட்டு உங்கள் மேலதிகாரி 'குட்' என்று ஒரே வார்த்தையில் அவர் பாராட்டை தெரிவிக்கக்கூடும். இந்த பாராட்டு மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். ஆனால், அந்த அறிக்கையில் அவரை கவர்ந்த விஷயங்கள் என்னென்ன? உங்கள் எழுத்துத்திறனா? தகவல்களை ஒருங்கிணைத்த விதமா? தெளிவான கருத்தாக்கமா? என்பதை அறிந்தால் மட்டுமே உங்கள் பலம் என்ன? அதை மேலும் வளர்த்துக் கொள்வது எப்படி? என்று புரிந்து கொள்ள முடியும்.

தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்வது எவ்வளவு அவசியமானதோ, அதே அளவு வெற்றிகளில் இருந்தும் பாடங்களை கற்றுக்கொள்வது அவசியம். பிறர் நம்மை பாராட்டும்போது அதை காது கொடுத்துக் கேட்டு, அவர்களை கவர்ந்த நம் குணங்கள், திறன்கள் என்ன? என்பதை அறிந்து கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.


ஆனால், சில சமயங்களில் தன்னடக்கம் என்ற போர்வையில் நமக்கு கிடைக்கும் பாராட்டுகளை ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம். பாராட்டுகள், நம் முயற்சிகளை, செயல்திறனை அதிகரிக்கும் ஊக்கிகள் போல. எனவே, உங்கள் மேலதிகாரியோ அல்லது சகபணியாளரோ உங்களை பாராட்டினால் அதை புன்னகையோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த பாராட்டு உங்கள் செயல்திறனுக்கு ஒரு ஊக்கி என்று கூறி நன்றி சொல்லுங்கள். அந்த செயலை மேலும் சிறப்பாகச் செய்து முடிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்கள் கருத்துக்களையும் கேட்டறியலாம்.

பாராட்டுகள் உற்சாகம் தரும் ஊக்க மருந்து என்றால், விமர்சனங்கள் நம்மை உறுதியாக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகள் போல. இப்படிச் சொல்வதன் மூலம் நம்மை நோக்கி வரும் எல்லா விமர்சனங்களும் நியாயமானவை என்றோ, அவற்றைக் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ அர்த்தமில்லை. எல்லா விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டும், அவ்வளவுதான்.

பெரும்பாலான சமயங்களில் விமர்சனங்களை நாம் கேட்க விரும்பாததன் காரணம், அவை நமக்கு கசப்புணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் தருவதினால்தான். ஆனால், உண்மை என்ன தெரியுமா? விமர்சனங்களைக் கேட்பதினால் அல்ல, அவற்றை நம் ஆழ்மனது ஏற்றுக் கொள்வதினால்தான் இத்தகைய உணர்வுகள் ஏற்படுகின்றன.

விமர்சனங்களை கண்டு ஓடுபவர்கள் ஒரு வகை என்றால், எல்லா விமர்சனங்களையும் உடனே ஏற்றுக்கொள்கிறவர்கள் இன்னொரு வகை. இவை இரண்டுமே தவறுதான். சரி, விமர்சனங்களை சரியானபடி கையாள நாம் என்ன செய்ய வேண்டும்?

முதலில் விமர்சனங்களை கண்டு ஒளியாமல் அவற்றைத் துணிவோடு எதிர்கொள்ளுங்கள். பிறர் உங்கள் திறன் பற்றியோ, செயல்கள் பற்றியோ  விமர்சிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வுகளை கவனியுங்கள். உங்களுக்குள் ஏற்படும் அந்த உணர்வு என்ன? அது கோபமா? கவலையா? எரிச்சலா? துக்கமா? என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த உணர்வைப் புரிந்து கொள்வதின் மூலம் விமர்சனங்களை இன்னும் துணிச்சலாக உங்களால் எதிர்கொள்ள முடியும். சலனமில்லாமல் புரிந்துகொள்ளவும் உதவும்.

பெரும்பாலான சமயங்களில் உங்கள் மேலதிகாரியின் விமர்சனத்திற்கான உங்கள் செயல் திருத்தத்தை (Corrective Action) விட உங்கள் ரியாக்ஷனே முக்கியமானதாகக் கருதப்படும். எனவே, அத்தருணத்தில் உங்கள் ரியாக்ஷனை கட்டுப்படுத்த உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துவது அவசியம்.

விமர்சனங்கள் சில சமயங்களில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லாமல் உங்கள் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடும். அந்த சமயங்களில்கூட உணர்ச்சி வசப்படாமல் அந்த விமர்சனங்களின் மையக் கருத்து என்ன? அதை கூறுபவரின் நோக்கம் என்ன? என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். விமர்சனங்களை பொறுமையாக கேட்ட பின், தனிமையில் அந்த விமர்சனங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அவற்றில் நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களையும், நிராகரிக்க வேண்டிய விஷயங்களையும் பட்டியலிடுங்கள். அவற்றை உங்கள் நம்பகமான நண்பரிடமோ, வழிகாட்டியிடமோ பகிர்ந்து கொண்டு அவர்களது கருத்தைக் கேட்டு அறியுங்கள்.

கடுமையான விமர்சனங்கள் நியாயமானதாக இருக்கும்போது, அவை நம்மிடம் தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தக்கூடும். இதை தவிர்க்க ஒரே வழி, 'இந்த உலகில் முழுமையானவர்கள் என்று யாருமே இல்லை' என்று புரிந்துகொள்வதுதான். அதேசமயம் 'மாற்ற முடியாத குறைபாடு என்று எதுவுமே இல்லை' என்பதை நினைவில் கொண்டால், எந்த சூழ்நிலையிலும் தாழ்வுமனப்பான்மை வராது.