Friday, June 29, 2012

அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது.......

ந்தியா அழகிகளின் தேசம்! 


- சுஷ்மிதா சென்னில் ஆரம்பித்து ஐஸ்வர்யா ராய், லாரா தத்தா, யுக்தா முகி என அடுத்தடுத்து அழகிப் பட்டங்களை அள்ளிக்கொண்டு வந்தபோது நம்மை எல்லாம் புகழ் மயக்கத்தில் தள்ளிய 'மந்திர வார்த்தை'கள் இவை. தொடர்ந்து அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் உலக வர்த்தக நிறுவனங்களின் பரிசோதனைக் கூடமாகவும் சந்தைக் காடாகவும் மாறிப்போனது இந்தியா. விளைவு... ''அழகு சாதனப் பொருட்களுக்குப் பின்னே ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய ஆபத்துகள் மறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பும் விற்பனையும் இந்தியாவில்தான் அதிகம்' என்ற அதிர்ச்சித் தகவலைச் சொல்லி இருக்கிறது உலகச் சுகாதார நிறுவனம். ''பாதரசம் சேர்க்கப்படும் சோப், பாடி லோஷன், க்ரீம் மற்றும் பிற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்குச் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்'' என்கிறது உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.  இதுபற்றி ஒரு விரிவான அலசல்.

''நீண்ட காலமாகவே இந்த அபாயம் இருக்கிறது. கிராமப்புறங்களில், 'சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது' என்று சொல்வார்களே, அப்படித்தான் இதுவும்'' என்று தொடங்கினார் சென்னையைச் சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணர் மாயா வேதமூர்த்தி.

''குழந்தையைக் குளிக்கவைத்ததும் 'பளிச்' என்று இருப்பதற்காக, உடல் முழுவதும் டால்கம் பவுடரைக் கொட்டுவார்கள். இதனால், குழந்தையின் கை, முகம் மற்றும் உடல் எங்கும் 'பிங்க்' கலராகிவிடும். தினமும் டால்கம் பவுடர் பயன்படுத்திவந்த பல குழந்தைகளுக்கு மூளை, நரம்பு, கிட்னி பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்த நோய்க்கு 'பிங்க் டிசீஸ்' என்று பெயர். குறிப்பிட்ட அந்த டால்கம் பவுடரைப் பரிசோதித்தபோது, அதில் அதிகமாகப் பாதரசம் சேர்க்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதன் பிறகு, பாதரசம் கலந்த அந்த டால்கம் பவுடர் தடை செய்யப்பட்டது. தற்போது சோப், பாடி லோஷன், க்ரீம் மற்றும் பல அழகு சாதனப் பொருட்களில் பாதரசம் சேர்க்கப்பட்டு இருந்தாலும், கண்ணுக்கு மேல் போடப்படும் அழகு சாதனப் பொருளான மஸ்காராவில் அதிகம் பாதரசம் சேர்க்கப்படுகிறது. மஸ்காராவில் 'தைமெரசால்'  (Thimerosal)  என்கிற பதப்படுத்தும் பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த தைமெரசாலில் சேர்க்கப்படும் முக்கியமான ஒரு துணைப் பொருள்தான் பாதரசம்.

அமெரிக்கா மட்டும்தான் அழகு சாதனப் பொருட்களில் பாதரசத்தை அடியோடு தடை செய்து இருக்கிறது. அழகு சாதனப் பொருள் தயாரிப்புகளுக்குப் பல்வேறு விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் வகுத்துக் கொடுத்து கண்காணிக்கிறது  எஃப்.டி.ஏ. என்ற கண்காணிப்பு அமைப்பு. இதில் ஒரு விதிவிலக்காக, 'கண்களுக்கான அழகு சாதனப் பொருட்களில் மட்டும் மிகக் குறைந்த அளவு பாதரசம் சேர்த்துக்கொள்ளலாம்' என்பது அந்த நாட்டின் சட்டம்.

இந்தியாவில் மருத்துவத்துக்கு 'மருந்துக் கட்டுப்பாடு' (Drug control) இருப்பதுபோல், அழகு சாதனப் பொருட்களுக்கு என்று எந்தவிதமான சட்ட விதிமுறைகளும் இல்லை. இதனால், பாதரசம் சேர்க்கப்பட்ட அழகு சாதனத் தயாரிப்புகள் தடையின்றி விற்பனையாகின்றன. அப்படித் தயாரிக்கப்பட்ட பொருட்கள் எதிலும் லேபிளும் இருப்பது இல்லை. அப்படியே இருந்தாலும் மக்களுக்கே தெரியாத - புரியாத மொழியில் இருக்கும். இந்தியாவில்தான் அழகு சாதனப் பொருட்களை தயாரிப்பதும் விற்பதும் சுலபம்'' என்றவர் அழகு சாதனப் பொருட்களில் பாதரசம் கலப்பதால், உண்டாகும் தீமைகள்பற்றிப் பேச ஆரம்பித்தார்.

''ஒருவரது தோலின் நிறம் என்பது அவரது இனம் மற்றும் பரம்பரை ஜீன்களைப் பொருத்தது. மனித சருமம் 2 மி.மீ. தடிப்புகொண்டது. இந்தத் தோலின் மேல் பகுதி மெல்லியதாகவும், அதற்குக் கீழே இருக்கும் பகுதி கண்ணாடி போன்று தெளிவாகவும் இருந்தால் அது சிவப்பு நிறத் தோல். மேல் பகுதி தடிப்பாகவும், கண்ணாடிப் போன்ற கீழ் பகுதி தெளிவு இல்லாமலும் இருந்தால் அது கறுப்பு நிறத் தோல். இப்படி இயற்கை தந்த தோலின் நிறத்தை மாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் அழகுப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். ரசாயனம் கலந்த இந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது தோலில் தடிப்பு, நிற மாற்றம், கண்களில் எரிச்சல், தலைவலி, மயக்கம், ஹார்மோன் கோளாறு, நுரையீரல் பிரச்னை என பல உபாதைகள்  ஏற்படும்.

அதிலும் பாதரசமானது, சருமத்தினுள் ஊடுருவிச் சென்று மெலனின் என்கிற நிறமியை அழிப்பதால் சருமம் வெளுத்துப்போகும். பாதரசம் சேர்க்கப்பட்ட சோப், க்ரீம், லோஷன் போன்ற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது சிறுநீரகம் பாதிக்கப்படுவதுடன், சருமத்தில் பாக்டீரியா தொற்று, பூஞ்சைத் தொற்று ஆகியவை ஏற்படும். அதோடு, மன அழுத்தம் உள்ளிட்ட மனரீதியானப் பிரச்னைகளும் ஏற்பட்டு நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும். நரம்பு மண்டலம், சுவாச மண்டலம், சிறுநீரக மண்டலம் ஆகியவை மெள்ள மெள்ளச் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டு, அடுத்தத் தலைமுறையையே சீரழிக்கும். நாம்தான் உஷாராக இருக்கவேண்டும்'' என்றும் எச்சரிக்கிறார் மாயா வேதமூர்த்தி.

அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை குறித்து டாக்டர் தரும் டிப்ஸ்...

 அழகு சாதனப் பொருள் வாங்கும்போது அதில் சேர்க்கப்பட்டிருக்கும் (Ingrediants) மூலப் பொருட்களைப் பற்றிய விவரங்கள் இருக்கிறதா என்பதை முதலில் கவனிக்க வேண்டும். அப்படி இல்லை எனில், வாங்காமல் இருப்பது நல்லது.

 கலோமில், மெர்குரிக் குளோரைடு, மெரிகுரியோ என்பது போன்ற பெயர்களில் பாதரசச் சேர்க்கையைக் குறிப்பிடுகின்றனர். எனவே, மேற்கண்ட வார்த்தைகள் இருந்தால் அதில் நிச்சயம் பாதரசம் சேர்க்கப்பட்டு உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

 புரியாத மொழியில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள்.  

 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அழகு சாதனப் பொருட்களை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.

 எந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்துவதற்கு முன்பு, தோல் சிகிச்சை நிபுணரை அணுகி, சருமத்தின் தன்மையைப் பரிசோதித்து அதன் பிறகு பயன்படுத்துவது நல்லது.  

ஹோமியோபதி மருந்துகளில் பாதரசத்தின் பயன்பாடு இருக்கிறதா? என்பது குறித்து ஹோமியோபதி மருத்துவ நிபுணர் ஜேசைய்யா பூவேந்தனிடம் பேசினோம்.

''உலகிலேயே மிக மோசமான ஆறு விஷங்களில் ஒன்று பாதரசம். பூச்சிக்கொல்லிகள், மின்குமிழ்கள் உற்பத்தியில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் பாதரசம் சேர்க்கப்படுவது இல்லை.

வியாபார நோக்கத்தோடு அழகுக்காக மருந்துகள் தயாரிக்கப்படுவதைக்கூட நாங்கள் எதிர்க்கிறோம். தோலின் நிறத்தை மாற்றுவதற்காக சோப், க்ரீம் என இயற்கைக்கு மாறாகப் போனால், நோய்தான் வரும். தற்காலிக அழகைத் தரும் அழகு சாதனங்களைப் பயன்படுத்துவதைவிட நிம்மதியான தூக்கம், ஆரோக்கியமான உணவு, நல்ல பழக்கவழக்கங்களைக் கடைபிடியுங்கள்; இதுவே அழகைக் கூட்டும்'' என்கிறார் புன்னகையோடு.