Sunday, June 24, 2012

வெங்காயம் - நல்ல வெங்காயம்

''துச்சாதனனாக

 துகில் உரிபவர்களுக்கு

துரிதத் தண்டனை

கண்களில் கண்ணீர்!''

வெங்காயத்தின் வீரியத்தைச் சொல்லும் புதுக் கவிதை இது. ''கண்ணீர் வரவைக்கும் குணம்கொண்ட வெங்காயம் உடலுக்கான நன்மைகளைக் கொடுப்பதில் கண்ணீரைத் துடைக்கும் உறவுகளுக்குச் சமமானது''

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும், மருத்துவரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுவதில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். இதனாலேயே, சின்ன வெங்காயத்தை 'மருத்துவ வெங்காயம்' என்று சொல்வார்கள்.

வெங்காயம் மூல நோய்க்கு நல்ல மருந்து. வெங்காயச் சருகுகளை ஒரு தலையணைபோல் செய்து அதன் மேல் உட்காரும் பழக்கம் முந்தையக் காலத்தில் இருந்திருக்கிறது. நெய்யில் வதக்கிச் சாப்பிடுவதாலும், 30 கிராம் அளவு உள்ள வெங்காயத்தை 100 மி.லி. பாலில் சேர்த்துக் கஷாயமாக்கி அருந்துவதாலும் மூல நோயைக் குணப்படுத்தலாம்.  

ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. எனவே, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். தயிர், மோர், நெய் போன்ற மற்ற உணவுப் பொருட்களோடு சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் குணம்கொண்டது வெங்காயம். வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நீர்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

விரைவீக்கம், இடுப்புப் பகுதியில் வரும் நோய்களுக்கு வெங்காயத்தைக் கஷாயமாகக் கொடுப்பது வழக்கம். வெங்காயத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இருப்பதால் புற்றுநோய்க்கு எதிராகச் செயலாற்றும் தன்மை அதற்கு உண்டு; காற்று மாசு, மன இறுக்கம் போன்ற பிரச்னைகளால் செல் சிதைவு ஏற்படுவதைத் தவிர்த்து சீர்படுத்தும். வெங்காயத்தில் உள்ள புரோட்டீன்கள் முதுமையைத் தாமதப்படுத்தும். எனவே, முகச் சுருக்கம், சருமம் தொடர்பான பிரச்னைகளுக்கு அழகுக் கலை நிபுணர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

பூச்சிக் கடிக்கும் வெங்காயத்தை உடனடி மருந்தாகப் பயன்படுத்தலாம். தேனீ, விஷ வண்டு, தேள் போன்றவை கடித்துவிட்டால், கடிபட்ட இடத்தில் வெங்காயத்தை வெட்டிவைப்பதாலோ அல்லது வெங்காயச் சாற்றினை விடுவதாலோ விஷம் முறிந்து விரைவில் காயம் குணமாகும்.

பால் உணர்வை அதிகம் தூண்டக்கூடிய வேதிப் பொருட்கள் வெங்காயத்தில் நிறைய உண்டு. இதனாலேயே ஆசிரமச் சமையலிலும் கோயில் பிரசாதங்களிலும் வெங்காயத்தைத் தவிர்க்கிறார்கள்.