Sunday, July 22, 2012

கே.டி.எம். நகைகள்: இதற்கும் தரத்திற்கும் என்ன சம்பந்தம்?

ங்க நகை வாங்கும்போது தரமான தங்கமா என்று பார்த்து நாம் வாங்குவோம். 916 ஹால் மார்க் முத்திரை என்றால் நாம் கண்ணை மூடிக்கொண்டு நகையை வாங்குவோம். அதே கே.டி.எம். முத்திரை இருந்தால் அது சுத்தத் தங்கம் என்று நினைத்து, வாங்கித்தள்ளுகிறார்கள் நம் மக்கள். ஆனால், கே.டி.எம். என்பது தங்க நகைகளின் தரத்தைக் குறிப்பதல்ல என்கிறார் பதிவுபெற்ற நகை மதிப்பீட்டாளர் கே.சுவாமிநாதன்.

'பொடி' பயன்பாடு!

தங்க ஆபரணங்கள் செய்கிறபோது இரு பாகங்களை இணைக்க இணைப்பான்கள் (Soldering) பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த இணைப்பான்கள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய மூன்றும் குறிப்பிட்ட சதவிகிதத்தில் கலந்து செய்யப்பட்ட கலப்பு உலோகமாகும். இதற்கு 'பொடி' என்று வழக்குச் சொல் உண்டு.

இந்த 'பொடி' பயன்படுத்திச் செய்யும் நகையின் தரத்திற்கேற்ப விகிதாசாரங்கள் மாறுபடும். இந்த 'பொடி'யை ஆபரணத்தில் இணைக்கும்போது இணைப்பை ஏற்படுத்திவிட்டு (வெல்டிங் போல) இதுவும் ஆபரணத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும். ஆனால், இந்த 'பொடி'யால் செய்த நகையை மறுபடியும் உருக்கும்போது அதன் தரம் குறையும். ஏனென்றால் நகையில் இருக்கக்கூடிய 'பொடி'-யும் (தங்கம், வெள்ளி, செம்பு) சேர்ந்து உருகுவதால் நகையின் தரம் குறையும். இந்த பொடியை பயன்படுத்திச் செய்யப்பட்ட தங்க நகை ஆபரணங்களில் 22 கேரட் / 20 கேரட் என்று குறிப்பிட்டிருப்பார்கள். அதாவது, 22 கேரட் நகையை உருக்கினால் 20 கேரட்டாக தரம் குறையும் என்பதுதான் இதன் அர்த்தம்.

கேட்மியம்!

இந்த பிரச்னையைப் போக்க சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு 'கேட்மியம்' என்ற வெள்ளை நிறத்திலான உலோகத்தைப் 'பொடி'யாக பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதன் விலை ஒரு கிராமிற்கு பத்து ரூபாய். கேட்மியம் என்பதன் சுருக்கம்தான் கே.டி.எம். பொடியில் எப்படி தங்கம், வெள்ளி, செம்பு கலந்த கலவையை இணைப்பானாக பயன்படுத்துகிறார்களோ, அதுபோல தங்கம், கேட்மியம் இரண்டையும் கலந்து உலோகமாக்கி இணைப்பானாக ஆபரணத்தின் இணைப்பு பகுதிகளில் பயன்படுத்துகிறார்கள்.

இந்த இணைப்பின்போது கேட்மியம் ஆபரணத்தை இணைத்துவிட்டு ஆவியாகிவிடும். ஆகவே, கே.டி.எம். இணைப்பானால் இணைக்கப்படும் ஆபரணங்களை உருக்கும்போது தரம் குறையாது. காரணம், தங்கத்தைத் தவிர வேறு எந்த உலோகமும் அந்த நகையில் இருக்காது. ஆகவேதான், கே.டி.எம். ஆபரணங்களுக்கு சேதாரம் அதிகமாக இருக்காது.

தரமல்ல!

தற்போது 'ஹால்மார்க்' முத்திரை நகைகள் வந்துள்ளது. மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் இந்த முத்திரையை அளிக்கிறது. கே.டி.எம். இணைப்பானால் இணைக்கப்படும் ஆபரணங்களுக்கு 'ஹால்மார்க்' முத்திரை தருவது கிடையாது. சில மிகப் பெரிய நிறுவனங்கள் '916 கே.டி.எம். ஹால்மார்க் முத்திரை கொண்ட நகைகள் கிடைக்கும்' என்று விளம்பரம் செய்கின்றன. இது மிகவும் தவறானது. கே.டி.எம். இணைப்பு இருந்தாலே 'ஹால்மார்க்' முத்திரை அளிக்கும் நிறுவனங்கள் முத்திரை தராமல் நிராகரித்துவிடும். ஹால்மார்க் நகை வாங்கும்போது எவ்வளவு சிறிய நகையாக இருந்தாலும் ஐந்து விதமான லேசர் முத்திரை குறித்திருப்பார்கள்.

தடா உலோகம்!

ஆபரணத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் இந்த கேட்மியம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஆபரணத்தைச் செய்யும்போது கேட்மியம் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தடை விதித்துள்ளது. காரணம், ஆபரண இணைப்பில் கேட்மியம் இணைப்பிற்கு 'ஊக்கியாக' செயல்பட்டு, ஆவியாகும்போது அது நகை செய்பவரின் சுவாசம் மூலம் உடலுக்குள் சென்று கேன்சர் நோய் வந்துவிடும். ஆனால், தடை செய்யப்பட்ட கேட்மியம் உலோகத்தை இன்று வரை இந்தியாவில் நகைத் தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.''

'அப்படியானால் கே.டி.எம். நகையை அணிந்தால் ஆபத்தா?' என்று அவரிடம் கேட்டோம். ''கிடையவே கிடையாது. ஏனெனில் நகை செய்யும்போது கேட்மியம் ஆவியாகி போய்விடுகிறது. இதனால் கே.டி.எம். நகை அணிபவருக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படாது. தற்போது துத்தநாகம் (Zinc) இணைப்பானால் இணைக்கப்பட்ட ஆபரணங்கள் விற்பனைக்கு வருகிறது. இதற்கான 'முத்திரை'க்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆகவே, நகையில் உள்ள எந்த முத்திரையையும் நம்பாமல் கடைக்காரரின் நம்பிக்கையைப் பொறுத்து நகையை வாங்கலாம்'' என்று முடித்தார் சுவாமிநாதன்.

தங்க நகை பற்றி எவ்வளவு விழிப்போடு இருக்கிறோமோ, அந்தளவுக்கு ஏமாறாமல் இருக்க வாய்ப்புண்டு என்பதை மட்டும் மறந்துவிடக் கூடாது.