Tuesday, October 9, 2012

ஃபர்ஸ்ட் நைட் னா என்னம்மா..? - குழந்தை கேட்டால்... பதறாதீர்கள் !

'வரவர என் பெண்ணும் பையனும் கேட்கற கேள்விகளுக்கு பதில் சொல்லவே முடியல. சமீபத்துல 'சரவணன் - மீனாட்சி' சீரியல் பார்த்துட்டு, 'ஃபர்ஸ்ட் நைட்'னா என்னம்மா..?'னு நச்சரிச்சுட்டாங்க. தர்மசங்கடமான நிலைமை. என்ன சொல்றதுனு புரியாம, சட்டுனு குரலை உயர்த்தி அவங்களைத் திட்டி சமாளிச்சேன்...'

- ஃபேஸ்புக்கில் இப்படி புலம்பியிருந்தார் ஒரு தாய் !

இவர் மட்டுமல்ல... பெரும்பாலான பெற்றோர் பல நேரங்களில் சந்திக்கும் சங்கட சூழ்நிலை இது. டி.வி, சினிமா, புக்ஸ், ஃப்ரெண்ட்ஸ் என பலவழிகளிலும் தான் அறியவரும் 'அடலஸன்ட்' விஷயங்கள் பற்றி சின்னக் குழந்தைகள் கேள்வி கேட்கும்போது, அந்த சிட்டுகளை அணுக வேண்டிய வழிமுறை தெரியாமல் தவிக்கத்தான் செய்கிறார்கள் பலரும்!

'இதை எதிர்கொள்வது எப்படி?' என்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் குழந்தைகள் மனநல நிபுணர் பி.பி.கண்ண னிடம் கேட்டபோது...

''முதலில், இது எதற்குமே பதற்றப் படவோ... அவர்களை மிரட்டவோ... அடிக்கவோ செய்யக்கூடாது என்பதை அனைவருமே புரிந்து கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் கேட்பதில் தவறு ஏதும் இல்லை என்பதையும் உணர வேண்டும்'' என்று அழுத்தம் கொடுத்து சொல்லிவிட்டு தொடர்ந்த டாக்டர்,

''பொதுவாக 14 வயது வரையுள்ள 'மிட் அடலஸன்ட்' குழந்தைகள்தான் அதிகமாக கேள்விகள் கேட்பார்கள். எல்லா குழந்தைகளும் தன் பெற்றோர் மூலமாகவே அதிக விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதால், குழந்தைகளிடமும், அவர்கள் முன் மற்றவர்களிடமும் எந்தெந்த விஷயங்கள் பேசலாம், டி.வி-யில் அவர்கள் முன்னிலையில் என்னென்ன விஷயங்கள் பார்க்கலாம் என்பதில் வீட்டினர் கவனமாக இருக்க வேண்டும்.

பெற்றோர் தவிரவும் உறவினர்கள், ஃப்ரெண்ட்ஸ், சினிமா என்று குழந்தைகள் தங்களைச் சுற்றி உள்ள உலகத்தில் நல்லது, கெட்டது என்று எல்லாவற்றையும்தான் கடக்க வேண்டியிருக்கிறது. பத்து வயது குழந்தை, தான் வெளியில் அறிந்து கொண்ட ஒரு சொல்லை, உதாரணமாக, 'நாப்கின்'னா என்னம்மா..?' என்று கேட்டால்... அதிர்ந்துவிடாதீர்கள். ஏதோ ஒரு சூழலில் குழந்தைக்கு அந்த வார்த்தை அறிமுகமாகியிருக்கிறது, அந்தப் புதிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியாததால் உங்களைக் கேட்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். பின், 'குழந்தைகளுக்கு டயப்பர் போடுற மாதிரி, இது ஆன்ட்டிஸுக்கான டயப்பர்!' என்று பதற்றமில்லாமல் பேசுங்கள்.

சிறுகுழந்தைகளுக்குத் தேவை, தான் அறியாத ஒரு சொல்லைப் பற்றிய விளக்கம்தான். அதற்கு மேல் அதைப்பற்றி அவர்கள் ஆராய மாட்டார்கள். இதுவே, 'அடி பின்னிடுவேன்... ஒழுங்கா ஹோம்வொர்க் பண்ணு...' என்று அந்தக் கேள்வியைத் தவிர்த்தோ, 'இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்..? யார்கூட சேர்ந்து இதைப் பத்தி எல்லாம் பேசுற..?' என்று குழந்தையை சந்தேகப்பட்டோ ரியாக்ட் செய்தால், 'இது ஏதோ சம்திங் சம்திங் வார்த்தை!' என்று குழந்தைக்கு அந்த வார்த்தை பற்றிய குறுகுறுப்பு அதிகரிக்கும்'' என்று புரிய வைத்த டாக்டர், குழந்தைகளிடத்தில் வார்த்தைப் புழக்கம் தவிரவும் பெற்றோரின் செயல்பாடுகளிலும் காட்ட வேண்டிய கவனம் பற்றிப் பேசினார்.

''என்னதான் அந்யோன்ய தம்பதியாக இருந்தாலும், குழந்தைகள் முன்னிலையில் அதை வெளிப்படுத்தும்விதமாக நடந்துகொள்ளாதீர்கள். அப்பாவும் அம்மாவும் எப்போதும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்ற பிம்பம் குழந்தைகளை சந்தோஷமான மனநிலையில் வளரவிடும் என்பது உண்மைதான். ஆனாலும், தன் அப்பாவுக்கு அம்மா முத்தம் கொடுப்பதையும், தன் அம்மாவுக்கு அப்பா 'ஐ லவ் யூ' சொல்வதையும் பார்க்கும் குழந்தைகள், 'இப்படித்தான் அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த வேண்டும்போல...' என்று நினைத்துக் கொண்டு, ஒருவேளை தனக்குப் பிடித்தவர்களிடமும் அதே செயலையோ வார்த்தைகளையோ உபயோகிக்கக் கூடும்.

அதேபோல, பள்ளி செல்லும் பருவமான மூன்று வயதுக்கு மேலான குழந்தையை படுக்கையறையில் உடன் உறங்க வைத்துக்கொண்டு... தாம்பத்ய உறவில் ஈடுபட வேண்டாம். குழந்தை தூங்குகிறது என்று பெற்றோர் நினைக்கலாம். ஆனால், தூக்கம் கலைந்து எதிர்பாராதவிதமாக குழந்தை அதைப் பார்க்க நேரிட்டால், ஒன்றும் புரியாவிட்டாலும்கூட அந்த காட்சி அதன் மனதில் பதிந்துவிடும். ஃப்ரெண்ட்ஸ்களிடம் அதை செய்து பார்க்கவோ, பகிர்ந்துகொள்ளவோ வாய்ப்புகள் உண்டு.

குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்கள் பார்ப்பது, கேட்பது, அதை செயல்படுத்துவது... இதுதான் மிட் அடலஸன்ட் ஸ்டேஜில் அவர்களின் மனது. பகுத்தறிவு வளராத அந்தப் பருவத்தில் பெற்றோர்கள்தான் அவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும்!'' என்று பாடம் சொன்ன டாக்டர்,

''குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களின் வயதைப் பொறுத்து விவரம் சொல்ல வேண்டியதும் முக்கியம். பொதுவாக, 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பாடப் புத்தகங்கள், இணையம், ஃப்ரெண்ட்ஸ் என்று விரிந்திருக்கும் அவர்களின் வட்டத்திலேயே தங்களுக்குத் தெரியாத அடலஸன்ட் விஷயங்கள் பற்றி விளக்கங்கள் பெற முயல்வார்கள், பெற்றோர்களிடம் அதிகம் பெர்சனலான கேள்விகள் கேட்பதில்லை. ஒருவேளை கேட்டால், அதற்கான உண்மையான விளக்கத்தை நாகரிகமான வார்த்தைகளில் சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் பதில் அவர்களை தெளிவுபடுத்துவதுடன், உங்கள் மேல் மரியாதை வரும்படியும் இருக்க வேண்டும்.

12 வயது பெண் குழந்தை நாப்கின் பற்றிக் கேட்கும்போது, 'இதை எல்லாம் எப்படி பொண்ணுகிட்ட சொல்றது..?' என்ற சங்கோஜத்தில், 'எனக்குத் தெரியாது' என்று சொன்னால், 'நம்ம அம்மாவுக்கு எதுவும் தெரியல...' என்று அறிவார்ந்த விஷயங்களைப் பற்றி அவள் உங்களிடம் கேள்வி கேட்பதோ, பகிர்வதோ நின்றுவிடும். பதிலாக, நாப்கின் மட்டுமல்லாது பூப்படைவது, மாதவிடாய் சுழற்சி என்று அனைத்தையும் அவளுக்கு விளக்க வேண்டியது அவள் வயதின் அவசியம் என்பதைப் புரிந்துகொண்டு பதில் சொன்னால், இருவருக்கும் இடையிலான ஃப்ரெண்ட்லி பிணைப்பும் இறுகும்!'' என்ற டாக்டர் கண்ணன், நிறைவாக சொன்னது...

''குழந்தைகளின் கேள்விகளை இனி கவனமாக அணுகுங்கள்!''