Thursday, November 1, 2012

நிமோனியா யாரை தாக்கும், அறிகுறிகள், சிகிச்சை


ச்சிளம் குழந்தைகளையே பெரும்பாலும் தாக்கும் ஒரு கொடிய நோய் நிமோனியா. இது சாதாரண காய்ச்சல் போலத் தெரிந்தாலும், இதன் தாக்கம் அதிகம். 

நிமோனியா சில சமயம் பெரியவர்களையும் ஆட்டிப்படைக்கும். நிமோனியா காய்ச்சலின் பாதிப்புகளையும் அதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிகளையும் நமக்கு நினைவூட்டும் விதமாக 'நிமோனியா தினம்' நவம்பர் 12-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

நிமோனியா குறித்த தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவம¬னையின் நுரையீரல் மற்றும் சுவாச நோய் நிபுணர் டாக்டர்  எஸ்.கல்பனா.

நிமோனியா எப்படி ஏற்படுகிறது?

காற்றின் மூலமாக நுரையீரலில் சில கிருமிகள் பரவுவதால் ஏற்படும் ஒருவகைத் தொற்று இது. இந்தக் கிருமிகள் நுரையீரலைத் தாண்டி, ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் பரவிவிடும் ஆபத்து இருக்கிறது. இதனால், அதிகக் காய்ச்சல் ஏற்படும். ஆரம்பத்தில் சாதாரண சளித் தொந்தரவு போலத் தோன்றினாலும், தொடர்ந்து காய்ச்சல், இருமல், நெஞ்சு வலி, மூச்சுவிடுதலில் சிரமம் ஆகியவை ஏற்பட்டு, கிருமிகளின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் போய், பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கவலைக்கிடமாக்கிவிடும்.

நிமோனியா யார் யாரையெல்லாம் தாக்கும்?

போதுமான காலம் தாய்ப் பால் குடிக்காத குழந்தைகள், சத்துக் குறைபாடு, குறிப்பாக 'வைட்டமின்' ஏ குறைபாடு உள்ள குழந்தைகள், பிறக்கும்போதே எடைக் குறைவுடன் பிறக்கும் குழந்தைகள், அதிக நெருக்கடியான பகுதிகளிலும் மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், சிகரெட், விறகு அடுப்பு போன்றவற்றில் இருந்து வரும் புகையை அதிகமாக சுவாசிக்கும் குழந்தைகள் ஆகியோரை நிமோனியா தாக்கும்.

பெரியவர்களையும் நிமோனியா தாக்கும். புகை மற்றும் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்கள், சர்க்கரை நோய் மற்றும் எய்ட்ஸ் உள்ளவர்கள் ஆகியோர் நிமோனியா தாக்குதலுக்கு ஆளாகக்கூடும்.

மாசுபாடான காற்றை சுவாசித்தாலும் நிமோனியா நோய் தாக்கும்.

அறிகுறிகள்!

இருமல், காய்ச்சல், வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத் திணறல், உதடுகள் வெளிறிப்போதல் அல்லது நீலம் பூத்தல், நடுக்கத்துடன் குளிர், நெஞ்சு வலி, பசியின்மை, சோர்வு, சாப்பிட இயலாமை, இவை எல்லாம் நிமோனியாவின் அறிகுறிகள்.

சிகிச்சை!

நிமோனியாவை அதன் தாக்கத்தின் அடிப்படையில் இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று நிமோனியா, மற்றொன்று தீவிர நிமோனியா. முதல் வகை நிமோனியா பாதிப்புக்கு உள்ளானவர்கள் மருத்துவரைச் சந்தித்து ஐந்து நாட்கள் வீட்டில் இருந்தபடியே முறைப்படி சரியான நேரத்தில் மருந்துகளைச் சாப்பிட்டால், உடனடியாகக் குணம் கிடைக்கும். அப்படி குணமாகவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை மீண்டும் அணுகி அடுத்த கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

தீவிர நிமோனியா தாக்குதலுக்கு உள்ளானவர்களை, அவர்களின் ரத்த நாளங்களில் 'ஆன்டிபயாடிக்' மருந்துகளைச் செலுத்தியும் பிராண வாயு சிகிச்சை முறை மூலமாகவும் குணப்படுத்திவிடலாம்.

பொதுவாக நிமோனியா பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிகமான நீர் வறட்சி ஏற்படும். அதை ஈடு செய்யும் விதமாக, அவர்களுக்கு அதிகமான திரவ உணவுகளை வழங்க வேண்டும்.

நிமோனியா வராமல் காப்பது எப்படி?

பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் கட்டாயமாகத் தாய்ப் பால் கொடுக்கப்பட வேண்டும்.

அதன் பிறகு இரண்டு வயது வரை தாய்ப் பாலோடு சத்து நிறைந்த திட உணவுகளையும் சீராகக் கொடுக்க வேண்டும்.

பிறந்த குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பு ஊசி உள்ளது. குழந்தை பிறந்து, ஒன்றரை மாத, இரண்டரை மாத மற்றும் மூன்றரை மாத இடைவேளையில் அந்த தடுப்பு ஊசிகளைத் தவறாமல் போட வேண்டும்

வைட்டமின் ஏ மற்றும் ஸிங்க் ஆகிய சத்து மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் இருக்கும் வீட்டில் யாரும் சிகரெட் பிடிக்கக் கூடாது.

சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் குழந்தைகளைக் கொஞ்சக் கூடாது.அவ்வப்போது குழந்தை வயதுக்கு ஏற்ற சரியான எடையுடன் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.இது எல்லோருக்குமே பொருந்தும். குறிப்பாகக் கைக்குழந்தைகள் இருக்கும் வீட்டில் உணவு சமைக்கும் முன்பும், சாப்பிடப்போகும் முன்பும் தவறாமல் கைகளை சோப் போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். கண்ட இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.

தும்மும்போதும் இருமும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும்.

நிமோனியாவைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டாலே போதும். நிமோனியாவுக்கு எதிரான போரில் நாம் பாதி ஜெயித்த மாதிரி!


(Source: Doctor Vikatan)