Tuesday, November 27, 2012

ஐயப்பன் புகழ்பாடும் பாமாலை

யப்பன் புகழ்பாடும் பாமாலைகள் எத்தனையோ உண்டு. அவை அத்தனைக்கும் மணிமகுடம் சூட்டியதாய் திகழ்வது, ஹரிஹராத்மஜ தேவாஷ்டகம்! 'ஹரிஹர புத்திரனான ஐயப்பனை நமஸ்கரிக்கிறேன்' என்பதே இதன் பொருள்.

 ஹரிஹராத்மஜ தேவாஷ்டகத்தின் அதிர்வலை நம் இல்லத்தில் எழுந்தால்... சாட்சாத் அந்த ஐயப்பனே நம் இல்லத்திலே எழுந்தருளியிருப்பதாய் மனம் பூரித்து, பக்திப் பரவசத்தில் நெக்குருகி சிலிர்த்துப் போய்விடுகிறோம். அவ்வளவு சக்திவாய்ந்த இந்த துதி, இல்லம்தோறும் மலர்ந்து பக்தி மணம் வீசும் கார்த்திகை மாதம் இது. இந்த நாட்களில், காற்றில் மிதந்து வரும் ஐயப்பன் கானங்களோடு, ஹரிஹராத்மஜ தேவாஷ்டகத்தையும் மனதார துதியுங்கள். நமது பக்தியில் மெய்சிலிர்த்து, நம் இல்லம் தேடி வருவான் ஸ்ரீமணிகண்டன்.

இதோ, ஹரிஹராத்மஜ தேவாஷ்டகமும், அதற்கான விளக்கமும்...

ஹரிவராஸனம் விச்வமோஹனம்
ஹரிததீச்வரமாராத்ய பாதுகம்
அரிவிமர்த்தனம் நித்ய நர்தனம்
ஹரி ஹராத்மஜம் தேவமாச்ரயே

பொருள்: உன்னதமான ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருப்பவரும், உலகத்தை (தன் மாயா சக்தியால்) மோஹிக்கச் செய்பவரும், சூரியனால் ஆராதிக்கப்படும் திருவடிகளை உடையவரும், (ஸத்கர்மங்களின்) சத்ருக்களை அழிப்பவரும், நித்யம் ஆனந்த நர்த்தனம் செய்பவரும் ஆகிய ஹரிஹரபுத்ரதேவனைச் சரணடைகிறேன்.

சரண கீர்த்தனம் சக்தமானஸம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருண பாஸுரம் பூதநாயகம்
ஹரி ஹராத்மஜம் தேவமாச்ரயே

பொருள்: சரணகோஷத்தைக் கேட்கும் மனது உடையவரும், பிரபஞ்சத்தைப் போஷிப்பவரும், நர்த்தனமிடுபவரும், காலைக் கதிரவனின் சிவந்த ஒளிமயமான காந்தி உடையவரும், பூதநாயகனுமான ஹரிஹரபுத்ரதேவனைச் சரணடைகிறேன்.

ப்ரணய ஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணத கல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தன ப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவமாச்ரயே

பொருள்: பிரியமான ஸத்யகாவின் ப்ராண நாயகரும், சக்தியும் திறமையும் உள்ளவரும், பக்தர்களுக்கு தன்னருளை பேதமில்லாமல் அளிப்பவரும், ஓம்காரத்தின் வாஸஸ்தலமும், கீர்த்தனத்தில் பிரியம் உள்ளவருமான ஹரிஹரபுத்ரதேவனைச் சரணடைகிறேன்.

துரக வாஹனம் ஸுந்தரானனம்
வர கதாயுதம் தேவவர்ணிதம்
குரு க்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவமாச்ரயே

பொருள்: குதிரை வாகனரும், அழகிய முகமுடையவரும், சிறந்த கதாயுதம் ஏந்தியவரும், தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல அருள்புரிபவரும், கீர்த்தனத்தில் பிரியம் உள்ளவருமான ஹரிஹரபுத்ரதேவனைச் சரணடைகிறேன்.

த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரிநயனம் ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் தேவமாச்ரயே

பொருள்: மூன்று புவனங்களில் உள்ளவர்களால் அர்ச்சிக்கப்படுபவரும், சகல தேவதா ஸ்வரூபமாக உள்ளவரும், முக்கண்கள் உடையவரும், ப்ரபுவானவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், முப்பத்துமுக்கோடி தேவதைகளால் பூஜிக்கப்படுபவரும், நினைத்ததை உடனே அளிப்பவருமான ஹரிஹரபுத்ரதேவனைச் சரணடைகிறேன்.

பவ பயாபஹம் பாவகாவுகம்
புவனமோஹனம் பூதிபூஷணம்
தவள வாஹனம் திவ்ய வாரணம்
ஹரி ஹராத்மஜம் தேவமாச்ரயே

பொருள்: பிறவிப் பெருங்கடல் பற்றிய பயத்தை நாசம் செய்பவரும், பக்தர்களுக்கு மங்கலம் அளிப்பதில் பிதாவைப் போன்றவரும், புவனத்தைத் தன்பால் மோஹிக்கச் செய்பவரும், விபூதி அணிந்தவரும், திவ்யமான வெள்ளை யானையை வாகனமாக உடையவருமான ஹரிஹரபுத்ரதேவனைச் சரணடைகிறேன்.

களம் ருதுஸ்மிதம் ஸுந்தரானனம்
களபகோமளம் காத்ர மோஹனம்
களப கேஸரி வாஜி வாஹனம்
ஹரி ஹராத்மஜம் தேவமாச்ரயே

பொருள்: மதுரமான, மிருதுவான மந்தஹாஸம் உடையவரும், ஸுந்தர முகமுடையவரும், இளமையும் மென்மையும் பெற்றவரும், மயங்கவைக்கும் தேகம் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை ஆகிய வாகனங்கள் பெற்றவருமான ஹரிஹரபுத்ரதேவனைச் சரணடைகிறேன்.

ச்ரிதஜன ப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதி மனோஹரம் கீதலாலஸம்
ஹரி ஹராத்மஜம் தேவமாச்ரயே

பொருள்: தஞ்சமடைந்த ஜனங்கள் மீது பிரியம் கொண்டவரும், நினைத்ததை உடனே தந்தருள்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், பரமாத்மாவும், வேதங்களால் மனோஹரமானவராக வர்ணிக்கப்படுபவரும், கீதத்தில் பிரியம் கொண்டவருமான ஹரிஹரபுத்ரதேவனைச் சரணடைகிறேன்.

சபரிமலையில் நித்தமும் ஒலிக்கும் ஹரிஹராத்மஜ தேவாஷ்டகம் துதியை நாமும் தவறாது துதித்து வந்தால் சர்வ மங்கலமும் உண்டாகும்.