Monday, December 3, 2012

மனித உறவுகள் - சில 'டிரான்ஸாக்ஷன்ஸ்' (Transactions)

னித உறவுகள் எல்லாவற்றிலுமே சில 'டிரான்ஸாக்ஷன்ஸ்'(Transactions), அதாவது... கொடுக்கல், வாங்கல் இருக்கவே செய்கிறது. கொடுப்பது, பெறுவது என்ற உடனே அது ஏதோ பணப்பட்டுவாடா என்று நினைத்துவிடாதீர்கள். பணத்தைவிட அதிக மதிப்புள்ள, ஆனால்... கண்ணுக்குத் தெரியாத பல வளங்களை, உறவுகளில் நாம் முதலீடு செய்கிறோம். நேரம், அன்பு, உழைப்பு, கவனிப்பு, முக்கியத்துவம், உணர்ச்சிகள் என்று எத்தனையோ விஷயங்களை சர்வசாதாரணமாக செலவிட்டுக் கொண்டே இருக்கிறோம். இப்படி பல வளங்களை பகிர்ந்து கொள்ள நேர்வதால்தான் இதை 'டிரான்ஸாக்ஷன்ஸ்' என்கிறோம்.

 

நம்மையும் அறியாமல் நாம் இப்படி 'டிரான்ஸாக்ட்' செய்தாலும்... அவற்றில் சில நாணயங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மனிதர்களாகிய நாம் மட்டும் அல்ல... குரங்கு, யானை, டால்ஃபின் என்று சமூக கூட்டங்களாக வாழும் எல்லா உயிரினங்களிலும் இப்படி ஒரு 'தர்ம நியாய கணக்கு' இருப்பதை நாம் பார்க்கிறோம்.

உதாரணத்துக்கு... குரங்குகள் தமக்கு ஏற்கெனவே உதவி செய்த குரங்குகளுக்கு முன்னுரிமை தந்து உதவி செய்கின்றன. தன்னை கண்டுகொள்ளாத, அல்லது தன்னிடம் வம்பு பண்ணிய குரங்கென்றால்... உதவுவதில்லை. ஆக, 'யார் நம்மிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள், அதற்கு சரிசமமாக நாமும் நடந்துகொள்ள வேண்டும்' என்பது குரங்காக இருந்த காலம்தொட்டே நமக்கு கைவந்த மனக்கணக்குதான்.

ஆனால்... நெருக்கமான உறவுகளிலும் இந்தக் கணக்கு வழக்கில் பிரச்னை வருவதையும் நாம் பார்க்கத்தானே செய்கிறோம்! உதாரணத்துக்கு காமுவை எடுத்துக் கொள்வோம். இவளும் மகியும் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார்கள். காதலிக்கும்போது, ஒரு சமயம் காமுவுக்கு முதுகில் சுளுக்குப் பிடித்திருந்தது. இவள் குனியக் கூடாது என்று, கோயில் வாசலில் அவளுக்கு செருப்பைக்கூட எடுத்துப் போட்டுவிட்டவன் மகி. அப்படியெல்லாம் அவள் மனம் குளிர நடந்துகொண்டவன், திருமணம் ஆனதும் மாறிவிட்டான். 'அவன் வீட்டுத் தாய்க்குலங்கள் சொல்லிக் கொடுத்துதான் மாறிவிட்டான்' என்பது காமுவின் குற்றச்சாட்டு.


காமுவுக்கு எந்தவிதமான உதவிகளும் செய்வதே இல்லை மகி. அவன் பாட்டுக்கு லேட்டாக எழுவான், இவள் காபியை ரெடியாக நீட்ட வேண்டும். அதை வாங்கிக் கொண்டு, செய்தித்தாளுடன் பால்கனிக்கு போய், சாவகாசமாக தம்மடித்து, ஒட்டுமொத்த பேப்பரையும் அக்கு வேறு... ஆணி வேறாக மேய்ந்து முடிக்க மொத்தமாக ஒரு மணி நேரமாகும். அதற்குள் காலை டிபன், மதிய உணவு என்று எல்லாவற்றையும் சமைத்து மேஜை மேல் வைக்க வேண்டும், வேலையாளை ஏவி வீட்டை சுத்தம் செய்திருக்க வேண்டும், இவளும் குளித்து, உடை மாற்றி அலுவலகத்துக்கு ரெடியாக வேண்டும். அதன் பிறகுதான் பேப்பரை மேஜை மேல் போட்டுவிட்டு குளிக்கப் போவான் மகி. இவனுக்காக காத்திருந்தால்... அலுவலகத்துக்கு லேட்டாகத்தான் போக முடியும் என்று ஷேர் ஆட்டோ பிடித்து போய்விடுவாள் காமு.

மாலையில் இருவரும் ஒன்றாகவே வீடு திரும்புவார்கள். வந்த உடனே டி.வி-யை போட்டுக்கொண்டு உட்கார்ந்தான் என்றால், அதற்கு பிறகு சுனாமியே வந்தாலும்... மகிக்கு தெரியாது. இவள் கத்தி, அழுது, சண்டை போட்டு, அம்மா வீட்டுக்கு போய்... என்று என்ன செய்தாலும், எதற்குமே அசையாமல், ''நான் இப்படித்தான் இருப்பேன். என்னை நீ கஷ்டப்படுத்தாதே. அதுதான் உனக்கு சம்பாதித்து தர்றேனே, ஹோம் லோனுக்கு இ.எம்.ஐ கட்டுறேனே...'' என்பான் மகி.

காமுவுக்கு பற்றிக் கொண்டு வரும். ''நீ சம்பாதிக்கற அதே தொகையைத்தான் நானும் சம்பாதிக்கிறேன். நானும்தான் இ.எம்.ஐ கட்டுறேன். ஆனா, வீட்டு வேலை எல்லாம் என் தலையிலே, நீ பெரிய ராஜா மாதிரி சும்மா உட்கார்ந்துக்கிட்டே இருந்தீனா, நல்லாஇல்ல.''

''இதுக்குதான் சொல்லுறது வேலைக்கு போற பொண்ணை கல்யாணம் பண்ணக் கூடாதுனு. சம்பாதிக் கிற திமிர். எங்கம்மா அப்பவே சொன்னாங்க...'' என்று மகி உளறி வைக்க, உடனே மாமியாருக்கு போன் போட்டு சண்டை போடுவாள் காமு.

இப்படியே இவர்கள் உறவு சேதமாகிக் கொண்டே இருக்க, 'பொறுப்பில்லாம எப்படி வளர்த்து வெச்சுருக்காங்க பாரு கோயில் மாடு மாதிரி...' என்று மகியை பற்றி காமு மட்டமாக நினைக்க ஆரம்பித்தாள். மகியும், 'இவ சரியான நச்சு கேஸு' என்று அவளைப் பற்றி எரிச்சலுற ஆரம்பித்தான். இதன் விளைவாக இருவருடைய தாம்பத்ய வாழ்க்கையும் தொலைந்தே போனது. அவனுக்காவது எப்போதாவது அவளோடு இருக்க வேண்டும் என்று 'மூட்' வரும். காமுவுக்கு அவன் அருகில் வந்தாலே, ''இந்த மூஞ்சுக்கு இது வேற கேக்குதா?'' என்கிற அருவருப்புதான் எப்போதுமே பொங்கும்.

ஏன் அவளுக்கு இவ்வளவு வெறுப்பு?

சிம்பிள். இந்த உறவில் அவளுடைய முதலீடு மிக அதிகம். ஆனால், மகியின் முதலீடோ, மிக சொற்பம். அதனால், அது அவள் உள்மனதுக்கு நியாயமாகப்படவில்லை. தன்னை இவன் பயன்படுத்திக் கொண்டு எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறானே தவிர, அவன் பங்குக்கு எதையுமே கொடுப்பதில்லை என்று அவள் மனதுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. அது அநியாயமான 'டிரான்ஸாக்ஷன்' என்பதனால், அவள் மனம் தன் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்தது.

காதலனோ, கணவனோ... தனக்கு முக்கியத்துவம் தந்து, தன்னிடம் மென்மையாக நடந்து கொள்ளும்போதுதான் பெண்களுக்கு அவனுடன் கூடும் இச்சை ஏற்படுகிறது. அவன் தன் மனதை உதாசீனப்படுத்தும்போது, காமம் கடினமான ஒரு காரியமாக மாறிவிடுகிறது.

அந்தக் காலத்தில் ஆண், பெண் இருவரின் 'டிரான்ஸாக்ஷன்ஸ்' வேறு மாதிரி இருந்தது. பெண் அந்தக் காலத்தில் எந்தவித அடையாளமும் இல்லாதவள், அவளுக்கு படிப்பு இருக்காது, சொத்தில் உரிமை இருக்காது, சுயமாக சம்பாதிக்க வழி இருக்காது, அவளால் தனித்து வாழவும் முடியாது. ஆக, ஆணின் முதலீடு மிக அதிகமாகவும், பெண்ணின் பங்குக்கு முதலீடு ரொம்பவே குறைவாகவும் இருப்பதாக கற்பிக்கப்பட்டதால்... உழைப்பு, விசுவாசம், கணவனின் ஒழுங்கீனத்தை கண்டுகொள்ளாமல், 'சாப்பாடு கிடைச்சா சரி' என்று கிடப்பது என்று அக்காலப் பெண்ணின் ஆட்டவிதிகள் எல்லாமே, அடுத்த வேளை சாப்பாட்டையும்... பிறந்தவீட்டு கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாக இருந்தது.

இன்றோ... பெண்களின் நிலை மாறிவிட்டது. படிப்பு, ஊதியம், சொத்து என்று எல்லாவற்றிலுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இந்நிலையில்... வீட்டு வேலைகள் அனைத்தையுமே பெண்தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால்... ''ஆஹா, இந்த 'டிரான்ஸாக்ஷன்' ரொம்ப அநியாயமா இருக்கே'' என்று புத்தியுள்ள எவளும் யோசிக்கத்தானே செய்வாள்?

ஆக, மனித உறவுகளில் ஒளிந்திருக்கும் இந்த 'டிரான்ஸாக்ஷன்' கணக்குகளில், ''என் பங்கை நான் சரியா செய்யுறேன்'' என்று பங்குதாரர்கள் இருவரும் நாணயத்தோடு நடந்துகொண்டால், உறவு பலமாகும். ''உந்தன் பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா?'' என்று கேட்காமலேயே உரிமையாக உதவுவது, பங்கெடுத்து செய்வது, ஈடுபாடு காட்டுவது, ''அட, என்னமா என்னை கவனிச்சுக்கறான்!'' என்கிற நினைப்பைத் தூண்டும்.

சில வீடுகளில் இதற்கு நேர் எதிராகவும் நடப்பதுண்டு. கணவன் வேலை, பிஸினஸ் என்று மிகவும் களைத்துப் போய் வீட்டுக்கு வரும்போது, ''டேபிள் மேல் சாப்பாட்டை எடுத்து வெச்சுருக்கேன், போட்டு சாப்பிட்டுக்கோங்க'' என்று விட்டேத்தியாக இருப்பதுண்டு. அப்போது அந்தக் கணவனுக்கு எப்படி இருக்கும்? ''என்னைவிட இந்த டி.வி அவ்வளவு முக்கியமா போச்சா?'' என்று கோபிக்கத்தானே தோன்றும்?

ஆதலினால் தோழியரே, உங்கள் அக உறவை அளந்து பாருங்கள். சமன்பாடு சரியாக இருந்தால், ரொமான்ஸ் சூடுபிடிக்கும். சரியாக இல்லையா, தவறு யார் பக்கம் என்று யோசியுங்கள். நீங்கள் குறைவாக முதலீடு செய்பவராக இருந்தால், கொஞ்சம் சுறுசுறுப்பாக உங்களை மாற்றிக்கொண்டு, முதலீட்டை அதிகப்படுத்துங்கள். 'அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' என்று வள்ளுவரே சொல்லி இருக்கிறாரே!

சரி, சமன்பாட்டில் பிரச்னை வரக் காரணம் உங்கள் காதலன்/கணவன் என்று வையுங்கள்... உடனே ஓவராக எமோஷனல் ஆகாமல், உட்கார்ந்து பக்குவமாகப் பேசி, உங்கள் பக்க நியாயத்தை அழகாக எடுத்துச் சொல்லுங்கள். உங்களால் பேசி சாதிக்க முடியவில்லையா? யார் சொன்னால் வேலையாகுமோ, அவர் உதவியை நாடுங்கள்.

மொத்தத்தில், சமன்பாட்டை சரிகட்டிப் பாருங்கள்; உங்கள் வாழ்வில் ரொமான்ஸ் களை கட்டிவிடும்!