Monday, April 1, 2013

புத்திமதிச் சாமியார் கதை

''ஒரு மைதானத்தில் சில பசங்க விளையாடிக்கிட்டு இருந்தாங்க. அப்ப, பக்கத்துல இருந்த ஏரியில் இருந்த ஒரு ஆமை தெரியாத்தனமா அந்த மைதானத்துக்குள்ளே நுழைஞ்சிருச்சு. அதை அந்தப் பசங்க பார்த்துட்டாங்க. அவ்வளவுதான்..! அத்தனை பேரும் ஓடி வந்து அந்த ஆமையைச் சூழ்ந்துக்கிட்டாங்க. ஒரு பையன் பக்கத்துல இருந்த மரத்தில் இருந்து ஒரு கிளையை ஒடிச்சான். தேமேன்னு போயிட்டிருந்த அந்த ஆமையோட முதுகில் அடிச்சான். மத்த பசங் களும் அதேபோல ஆளுக்கொரு குச்சியை ஒடிச்சு, அந்த ஆமையை அடிக்க ஆரம்பிச்சாங்க. அது பாவம், தலையை வெளியே காட்டமுடியாம பயந்து உள்ளுக்கு இழுத்துக்கிச்சு. இது மத்த பசங்களுக்கு இன்னும் குஷியாயிருச்சு. இன்னும் வேகமா ஆமையை அடிக்க ஆரம்பிச்சாங்க.


அப்ப அந்த வழியா வந்த சாமியார் ஒருத்தர், பசங்க ஆமையை அடிக்கிறதைப் பார்த்து பதறிப்போய் ஓடி வந்தார். 'பசங்களா! ஆமைக்கும் உங்களைப்போல உயிர் இருக்கு இல்லையா? அதை இப்படி அடிக்க லாமா? இது தப்பில்லையா? ஜீவ ஹிம்சை பண்ண லாமா? இறைவனின் படைப்பில் ஒரு ஜீவராசியை இன்னொன்று துன்புறுத்த உரிமை கிடையாது குழந் தைகளா!' அப்படின்னு எடுத்துச் சொன்னார்.

பசங்களும் ஆமையை அடிக்கிறதை நிறுத்திட்டு, கலைஞ்சு போகலாமானு யோசிச்சாங்க. அப்ப அந்தச் சாமியார் இன்னும் கிட்டே வந்து ஆமையைப் பார்த் துட்டு, 'நல்லவேளை! ஓட்டு மேலதான் அடிச்சீங்க. ஆமையைத் திருப்பிப் போட்டு அடிச்சிருந்தீங்கன்னா இந்நேரம் அது செத்தே போயிருக்கும்!'ன்னு சொல்லிட்டு நடையைக் கட்டினாரு.

அப்புறம் என்ன ஆச்சுங்கிறீங்களா? ஆமையைத் திருப்பிப் போட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க அந்தப் பசங்க. அதனால, புத்திமதி சொல்றப்போ நேர்மறையான விஷயங்களைத்தான் சொல்லணுமே தவிர, எதிர்மறை யான விளைவை உண்டாக்குற மாதிரி சொல்லிடக் கூடாது'' என்று சொல்லி முடித்தேன்.

''உண்மைதான்!'' என ஒப்புக்கொண்ட மாதப்பன் தன் பங்குக்கு அவரும் ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

அப்பா ஒருத்தர் மகன்கிட்ட, ''உன் வயசுல அப்துல் கலாம் எவ்ளோ கஷ்டப்பட்டுப் படிச்சு பெரிய ஆளா ஆனார், தெரியுமா? நீ என்னடான்னா இப்படி சொகுசா திரியறியே!'ன்னாராம்.

அதுக்குப் பையன் உடனே சொன்னானாம்... ''அப்பா! அதே அப்துல்கலாம் உங்க வயசுல நம்ம நாட்டுக்கே ஜனாதிபதியா ஆயிட்டாரு. ஆனா, நீங்க இப்பவும் பெட்டிக்கடைதானே வெச்சிருக்கீங்க!'

பசங்ககிட்ட புத்திமதி சொல்றப்போ எச்சரிக்கையா இருக்கணும், பார்த்துக்குங்க!