Tuesday, April 23, 2013

காய்கறி, பழங்களுக்குப் பின்னால் சில ஆபத்துக்கள்

'தளதள, பளபள' என்று கண்களைப் பறிக்கும் விதத்தில் காய்கறி, பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகைப் பார்க்கும்போதே, நம்மில் பெரும்பாலானோருக்கு உடனே வாங்கி சாப்பிட வேண்டும் என்று கையும், மனமும் துறுதுறுக்கும். அவற்றுக்குப் பின்னால் சில ஆபத்துக்களும் இருக்கின்றன என்பது நிறைய பேருக்கு தெரியாது... அல்லது, அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க ஆர்வமோ, நேரமோ இருக்காது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அத்தகைய ஆபத்துகளை 'அவாய்ட்' பண்ண உதவும் வகையில், சில ஆலோசனைகள், 

 பச்சைத் தக்காளி... ஜாக்கிரதை!

 தக்காளிச் செடியின் இலைகளிலும் இலை நரம்புகளிலும் அட்ரோபைன் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது மயக்கம், தலைவலி, வயிற்றுக் கோளாறுகள் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடியது. பச்சை நிறத் தக்காளிக் காய்களிலும் ஓரளவுக்கு இது இருப்பதால், முடிந்த வரை பழுத்த தக்காளிகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

அழுகலை நீக்கினால்... ஆபத்து குறையாது!

சில பழங்களில் ஒரு பகுதி பூஞ்சையால் தாக்கப்பட்டு அழுகிப்போயிருக்கும். பழத்தின் இதர பகுதிகள் நன்றாக இருப்பது போலத் தோன்றும். ஆனாலும் கண்ணுக்குத் தெரியாத மைசீலியம் என்னும் பூஞ்சை இழைகள் அந்தப் பகுதியிலும் ஊடுருவி இருக்கும். எனவே, பழம் அழுகத் துவங்கிவிட்டது என்றால், அந்த பகுதியை மட்டும் நீக்கிப் பயன்படுத்தாமல், முழுவதுமாகவே தூக்கி எறிவதுதான் உத்தமம். 

வைட்டமின் 'கே'... எச்சரிக்கை தேவை!

கீரைகள், காலிஃப்ளவர், முட்டைகோஸ் போன்ற பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் 'கே' அதிகம் உள்ளது. இது உடலுக்கும் நல்லது. ஆனால், ரத்தம் உறைவதில் பிரச்னை இருப்பவர்களுக்கு வைட்டமின் 'கே' ஆகாது. எனவே, இந்த வகையை சேர்ந்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

அருகம்புல் சாறு...  அவாய்ட் ப்ளீஸ்!

இப்போதெல்லாம் காலை நேரத்தில் நடை பயிற்சி செய்பவர்கள் அருந்தும் 'ஆரோக்கிய பானம்' என்று அருகம்புல் சாறு நினைக்கப்படுகிறது. அருகம்புல் விளைந்த இடம், சேகரிக்கப்பட்ட விதம், அது நன்கு கழுவப்பட்டதா என்ற விவரம் எதுவும் தெரியாமல் அதைப் பலரும் அருந்துகிறார்கள். சாக்கடை ஓரங்களிலும், குப்பைக் கூளங்கள் அருகிலும் பிடுங்கப்பட்டு, சரிவரக் கழுவாமல்தான் பல இடங்களிலும் ஜூஸ் விற்கிறார்கள். வாக்கிங் போய், ஆரோக்கியம் அடைவதற்குப் பதிலாக, வியாதிகளை வாங்கி வந்துவிடாதீர்கள். வெளியிடங்களில் அருகம்புல் சாறு வாங்கி அருந்துவதில் ஜாக்கிரதையாக இருங்கள்.

திராட்சைப் பழங்கள்...  தடாலடி வியாபாரம்!

பூச்சிகளின் தாக்குதலில் இருந்து திராட்சைகளைக் காப்பதற்காகப் பூச்சி மருந்துகளை சர்வ சாதாரணமாக அடிக்கிறார்கள். மருந்து தெளித்து குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகுதான் சந்தைக்குக் கொண்டுவர வேண்டும். ஆனால், பறித்த பழங்களுக்குக் கூட மருந்து அடிக்கும் கொடுமை நடக்கத்தான் செய்கிறது. உப்பு கலந்த தண்ணீரில் நன்கு கழுவினால், பூச்சி மருந்துகளின் மிச்சம் மீதி பழங்களில் ஒட்டிக் கொண்டுஇருந்தாலும் நீங்கிவிடும்.

உருளைக்கிழங்கு... உஷார்!

முளைவிடாத உருளைக்கிழங்காகப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துங்கள். சில உருளைக்கிழங்குகளில் உள்ளே பச்சையாக இருக்கும். அதில் சொலானைன் என்ற வேதிப்பொருள் உள்ளது. அது ஜீரணக் கோளாறுகளை உண்டாக்கும்.

மாம்பழமாம் மாம்பழம்... கார்பைடு மாம்பழம்!

பழுக்க நாளாகும் என்பதற்காக மாம்பழ மண்டிகள் பலவற்றில் கார்பைடு கற்களை மாம்பழக் குவியல்களுக்கிடையே வைத்து செயற்கையாகப் பழுக்க வைக்கிறார்கள். இது உடலுக்கு மிகவும் தீங்கை  விளைவிக்கும். கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிய சில உபாயங்கள் உண்டு. அந்த மாம்பழங்களை ஈ நெருங்காது. ஒரேசீரான வண்ணத்தில் பழங்கள் இருக்காது. மாம்பழம் வாங்கும்போது கவனம் செலுத்துங்கள்.

ஆப்பிள் விதைகள்... அவஸ்தை !

ஆப்பிளைச் சாப்பிடும்போதோ அல்லது ஜூஸ் போடும்போதோ கட்டாயமாக விதைகளை நீக்கிவிடுங்கள். அவற்றில் சையனோஜெனிக் கிளைகோஸைட் என்ற வேதிப் பொருள் இருக்கிறது. அது உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடியது. 

கேரட், முள்ளங்கி... கேர்ஃபுல்!

இது சுற்றுலா சீஸன் அல்லவா? மலைப்பாதையில் பயணம் போகும்போது சாலை ஓரத்தில் புத்தம் புதிய கேரட்டுகளும், முள்ளங்கிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். வயலில் பறித்துவரும் கேரட், முள்ளங்கிகளை அருகிலுள்ள ஓடைத் தண்ணீரில் சுத்தம் செய்து விற்பார்கள். அந்த தண்ணீர் மனிதர்கள் மற்றும் விலங்குகளால் அசுத்தப்படுத்தப்பட்டிருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இதனால், குடற்புழுத் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அத்தகைய காய்கறிகளை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும்.

வெள்ளரிக்கு 'நோ' சொல்லுங்கள்!

அநேகமாக வெள்ளரிக்காய்களைத் தோல் நீக்கிக் கூடைகளில் வைத்து விற்பார்கள். அவற்றை ஈக்கள் மொய்த்திருக்கும். சுத்தமாக இல்லாத கைகளால் எடுத்து விற்பார்கள். தாகம் தணிவது என்னவோ உண்மைதான். ஆனால், நோய்த்தொற்றுக்கு வாய்ப்பு அதிகம். அது போன்ற வெள்ளரியை கண்டிப்பாக தவிருங்கள்