Tuesday, April 9, 2013

வாழைக்காய் சட்னி, உருளைக்கிழங்கு மசாலா

வாழைக்காய் சட்னி

தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 8, பெரிய வெங்காயம் - ஒன்று, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - ஒரு பல், தக்காளி - 2, புளி - சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

 

செய்முறை: வாழைக்காயை வேக வைத்து, தோலுரித்து, கட்டியில்லாமல் பிசைந்து வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, சோம்பு ஆகியவற்றை ஒன்றுசேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த மசாலா விழுது, மசித்த வாழைக்காய் போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கி, எண்ணெய் தெளிந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்

இதை... இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.


உருளைக்கிழங்கு மசாலா

தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, தேங்காய் துருவல்  - ஒரு கப் (பால் எடுக்கவும்), காய்ந்த மிளகாய் - 5, தனியா - 2 டீஸ்பூன், முந்திரி - 10, வெங்காயம் - ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு -  தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை கழுவி, குக்கரில் வேக வைத்து, தோலுரித்து நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய், தனியா, முந்திரியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து... கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு போட்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்