Thursday, April 11, 2013

அவியல், மஷ்ரூம் ரெட் கறி

அவியல்


தேவையானவை: முருங்கைக்காய், கேரட், வாழைக்காய் - தலா ஒன்று, பீன்ஸ் - 5, சேனைக்கிழங்கு - 100 கிராம், பச்சை மிளகாய் - 5, சீரகம் - இரண்டு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்), தயிர் - ஒரு கப்,  பூண்டு - 3 பல், கடுகு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முதலில் காய்கறிகளைக் கழுவி, ஒன்று போல் நறுக்கி, பாத்திரத்தில் போட்டு, அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவலுடன், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெந்த காய்கறிகளையும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, தயிர் சேர்த்துக் கிளறவும்.

இதனை ஆப்பம், தோசை, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.


மஷ்ரூம் ரெட் கறி

தேவையானவை: மஷ்ரூம் - 100 கிராம், பேபிகார்ன் அல்லது பனீர் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 10, வெங்காயம் - 2, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல், தேங்காய்ப் பால் - 2 கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, ஒரு கொதி வந்தவுடன் வெங்காயத்தை எடுத்து, இஞ்சி - பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மிளகாயை ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர் அதனுடன் அரைத்த மிளகாயை சேர்த்து நன்கு வதக்கி, மஷ்ரூம் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, தேங்காய்ப் பால், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் நறுக்கிய பேபிகார்ன் அல்லது வறுத்த பனீரை சேர்த்து எல்லாம் வெந்தவுடன் இறக்கவும்.

இதை... சாதம், புலாவ் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.