Sunday, May 26, 2013

'த லாஸ் ஆஃப் சப்ட்ராக்ஷன்’ (கழித்தல்களின் 6 விதிகள்)








எதிலும் எவற்றிலும் மிகைப்படுத்தலையே நடைமுறையாகக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் சிறப்பாக வாழ மிக முக்கியமான ஒன்று, நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் இருக்கும் தேவையில்லாத மிகையானவற்றை கழித்துவிடுவதுதான். பிய்ந்துபோன பாயைத் தூக்கிப் போடுகிற மாதிரி, சாதாரண விஷயமில்லை இந்தக் கழித்துக் கட்டுவது. இதை எப்படி சரியாகச் செய்யலாம் என்பதை எடுத்துச் சொல்லத்தான் இந்தப் புத்தகம்.  
உணவா? இதை சாப்பிடு, அதை சாப்பிடாதே என லட்சக்கணக்கில் தகவல்கள்; படிப்பா? இதைப் படி, அதைப் படிக்காதே என்று ஆயிரம் போதனைகள்; வியாதியா? இது இப்படி யிருக்கலாம், அது அப்படியிருக்கலாம் என பல நூறு அறிவுரைகள்! இப்படி நம்முடைய ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு நடவடிக்கையும் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட விஷயங்களையும் தகவல்களையும் கொண்டதாகத்தான் இருக்கின்றது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படி தேவையில்லாத விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதைத் தவிர்க்கவேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்வதால்தான் புத்தகத்தின் தலைப்பே 'த லாஸ் ஆஃப் சப்ட்ராக்ஷன்’ (கழித்தல்களின் விதி) என கனகச்சிதமாக வைத்திருக்கிறார் ஆசிரியர்.  
ஒவ்வொரு விஷயத்திலும் எதைக் கழித்துக் கட்டுவது, அதை எப்படி செய்து முடிப்பது என்பதை பல்வேறு உதாரணங்களுடன் கொடுத் திருக்கும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியரான மேத்யூ இ. மே, இப்படி முக்கியமல்லாத பல விஷயங்களைப் போட்டுக் குழப்பிக்கொள்ளும் இந்த உலகத்தில் கழித்தல்களின் விதி எவ்வளவு தூரம் தனிமனிதனுக்கு அவசியமானது என்றும், உதவுகின்றது என்றும் தெளிவாக விளக்கியுள்ளார்.
எதை, எப்படி, எங்கே கழிப்பது என்கிற விஷயத்தில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு கஷ்டமான முடிவெடுக்கும் பிரச்னைகளிலும் மூன்று முக்கியமான விஷயங்களை எதிர்கொள் கின்றோம். எதை தொடர்வது - எதை தொடராமல் இருப்பது?, எதை உள்வைத்துக் கொள்வது - எதை வெளியில் விரட்டுவது?, எதைச் செய்வது - எதைச் செய்யாமல் இருப்பது? என்ற மூன்று முக்கியமான விஷயங்கள்தான் அவை. இதில், எதைத் தொடராமல் இருப்பது? எதை வெளியில் விரட்டுவது? மற்றும் எதைச் செய்யாமல் இருப்பது? என்ற மூன்றும்தான் அதிமுக்கியமான கழித்துவிடப்படவேண்டிய விஷயங்கள்.
இந்த விஷயங்களைக் கண்டுபிடித்து அவற்றை கழித்துக் கட்டினால் நீங்கள் எடுக்கவேண்டிய முடிவுகள் அனைத்திலும் முடிவெடுப்பது மிகவும் சுலபமான ஒன்றாக மாறிவிடும் என்று உறுதியாகச் சொல்கின்றார் ஆசிரியர்.
கழிக்கும் விதிகளில் முதலாவது விதியாக ஆசிரியர் சொல்வது, எந்த ஒரு முடிவெடுக்க வேண்டிய விஷயத்திலும் இல்லாத பல ரிஸ்க்கு கள் இருப்பதைப்போல் தோன்றும் மாயை. இந்த மாயத்தோற்றம்தான் பெரும்பாலான சமயங்களில் எக்காளமிட்டு நாம் நினைப்பதைச் செய்ய முடியாமல் செய்துவிடும் என்கின்றார். இதற்கான பல உதாரணங்களையும் ஆசிரியர் தந்துள்ளார்.
கீழேயுள்ள படத்தில் வெள்ளையில் கறுப்பு ஒரு புள்ளியாகவும், கறுப்பில் வெள்ளை ஒரு ஓட்டையாகவும் எப்படித் தெரிகின் றதோ, அதேபோல்தான் பெரும்பாலான சமயம் நம்முடைய மூளைக்கு நாம் முடிவெடுக்கவேண்டிய விஷயங்களில் மாயத் தோற்றங்கள் தென்படுகின்றது என்கிறார் ஆசிரியர்.
கழித்தல் விதியில் இரண்டாவதாக ஆசிரியர் சொல்வது, ஒரு நேரடியான அனுபவத்தை உண்டாக்கிக்கொள்வது. நேரடி அனுபவத்தை உண்டாக்கிக்கொள்வது தேவையில்லாத பயங்கள் பலவற்றை கழிக்க உதவும் என்கின்றார். இதற்கு உதாரணமாக, பாரிஸில் இருக்கும் 12 தெருக்களின் சந்திப்பை (பார்க்க, அடுத்த பக்கத்தில் உள்ள படம்) அவர் காரை ஓட்டி கடக்க நினைத்தபோது பயந்த பயத்தையும், ஒருமுறை துணிச்சலாக காரை ஓட்டிய பின்னர் அவரிடம் இருந்து மறைந்துபோன பயத்தின் அளவையும் சொல்கின்றார்.
''ரோடு என்பது வாகனங்களுக்கானது. ஆனால், தெரு என்பது வாகனங்கள் மற்றும் மனிதர்களுக்கானது. இதில் இருக்கும் இடத்தைப் பங்கு போட மனிதர்களும் வாகனங்களும் போட்டி போடுகின்றன. இந்த 12 சாலை சந்திப்பு ஒரு தெரு. இதில் எப்படி காரை ஓட்டுவது என்று நான் ஆச்சரியப்பட்டேன். ஒருமுறை ஓட்டிப் பார்த்தபின் சுலபமாக ஓட்டினேன்'' என்று சொல்லும் ஆசிரியர், முதலில் நடக்கப் போகும் விஷயங்களை மனதில்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் திட்டத்தைப் போடுங்கள். பல்வேறு விஷயங்களை இந்த முறையில் சுலபமாகக் கழிக்க முடியும் என்கின்றார் ஆசிரியர்.
மூன்றாவது விதி, குறைந்த அளவு தகவல்களை வைத்துக்கொண்டு முடிவெடுத்தல். 'கையில் இருக்கும் தகவல்கள் குறைவாக இருக்கும்போது மூளையின் கற்பனா சக்தி அதிகமாக வேலை செய்து வெற்றிக்கு வழிவகுக்கும். உலகத்தையே ஒரு மாறுகண் உடையவரைப்போல் பாருங்கள். குறைந்த விஷயங்களைப் பார்ப்பதால் அதிக விஷயங்களை உணர்வீர்கள்’ என்று நச்சென சொல்கின்றார் ஆசிரியர்.
நான்காவது விதி, புத்திசாலித்தனமான தடைகளை உண்டு பண்ணுதல். 'புத்திசாலித் தனமான தடைகள் மட்டுமே புதிய படைப்பாற் றலுக்கு வழிவகுக்கும். முடியவே முடியாது!, இதுமாதிரி நான் கேள்விப்பட்டதே இல்லை! கிறுக்குத்தனமான டார்கெட்! போன்றவற்றை எதிர்கொள்ளுங்கள். இவைதான் புதுமைக்கும், இருக்கும் வளத்தை எப்படி செம்மையாக உபயோகிப்பது என்பதற்கும் வழிவகுக்கும்’ என்கின்றார் ஆசிரியர்.
ஐந்தாவது விதி, தடை என்பதன் முக்கியத்துவம். 'தடை என்று ஒன்று இருந்தால்தான் தடையைத் தகர்த்தல் என்பதே தேவைப்படும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்’ என்று சொல்லும் ஆசிரியர், தடையைத் தகர்த்தலில் கழித்தலின் விதியை எப்படி பின்பற்றவேண்டும் என்றும் விளக்கமாகச் சொல்லி இருக்கிறார்.
ஆறாவது விதி, ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கு பதிலாக, ஏதாவது செய்வோம் என்று இருக்காதீர்கள் என்பதே. 'தற்சமயம் உங்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லையென்றால் சும்மா இருங்கள். சிந்தியுங்கள். செயலில்லாமல் சீரிய சிந்தனையில் இருக்கும்போதுதான் திடீர் புதுமைகள் உங்கள் மூளையில் தோன்றும்’ என்கின்றார். சும்மாயிருக்கின்றோமே என்று எதையும் செய்யாமல் இருப்பது என்பதுதான் இதில் இருக்கும் கழித்தல் விதி.
உலகம் ரொம்பவுமே சிக்கலாகி வருகிறதே! புதிதாக சாதிப்பதற்கு எதுவுமில்லைபோல் இருக்கின்றதே! என்று நம்மில் பலர் அடிக்கடி நினைக்கின்றோம். இந்த நினைப்பு வந்தவர்களெல்லாம் / வரும்போதெல்லாம் படிக்கவேண்டிய புத்தகம் இது.