Wednesday, May 29, 2013

ஐ லவ் யூ மை டியர் சன்

திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் என் மனைவி கூறினாள்.

" எனக்கு தெரிந்த ஒரு பெண் உங்களோடு ஒரு நாள் பொழுதைக் கழிக்க வேண்டுமென்று விரும்புகிறாள். அந்தப் பெண் என்னை விட உங்களை அதிகமாக நேசிக்கிறாள்"

இவ்வாறு என் மனைவி குறிப்பிட்ட அந்த பெண் 19 வருடமாக விதவையாக இருக்கும் என்னுடைய தாயார்தான். நான் என் 3 குழந்தைகளுக்காக அதிகம் வேலை பார்க்க வேண்டி இருந்ததால் சில நாட்களாக அவளை சரியாக கவனிக்க முடியவில்லை.

அன்று மாலை நான் அவளை வெளியில் எங்காவது கூட்டிப் போகலாம் என்று நினைத்து போனில் கூப்பிட்டேன்.

"என்னாச்சு? உனக்கு ஒன்றுமில்லையே?" என்று வழக்கமாக போனை எடுத்தவுடன் கேட்கும் கேள்விகளையே அன்றும் கேட்டாள்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. நாம் இன்று மாலை எங்காவது வெளியில் போகலாமா?"

"நான் இதைத்தான் எதிர்பார்த்தேன்" ஒரு நிமிட யோசனைக்கு பின் அவள் கூறினாள்.

அன்று மாலை அலுவலகம் முடிந்ததும் நான் நேராக அவள் வீட்டுக்கு போனேன். எனக்கு கொஞ்சம் படபடப்பு. என்னுடைய கார் அவளது வீட்டுக்கு போகுமுன்பே அவள் ரெடியாக இருந்தாள். சுற்றுலா செல்லும் ஒரு குழந்தையை போல அவளுக்குள் ஒரு இனம் காணாத சந்தோஷம். குளிருக்கு கம்பளியை எடுத்து போர்த்தி இருந்தாள். தலைமுடியை சுருள் சுருளாக செய்து கடந்த என்னுடைய திருமணத்தின் போது வாங்கிய உடையை அணிந்து இருந்தாள்.

"என்னுடைய மகன் இன்று என்னை வெளியில் கூட்டிச் செல்வதாக கூறி இருக்கிறான்" என்று தன்னுடைய நண்பர்களிடம் எல்லாம் கூறி விட்டதாக என்னுடைய காரில் ஏறிக்கொண்டே கூறினாள்.

அந்த உணவகம் ஒன்றும் ஆடம்பரமானதாக இல்லை. ஆனால் நன்றாக இருந்தது. அன்னை மட்டுமே முதலும் கடைசியுமாக காதலிக்கும் ஒரு பெண்ணைப்போல் எனது கைகளை அவள் பிடித்துக் கொண்டாள். நாங்கள் மேஜையில் உட்கார்ந்த பின் அவளே வரவழைக்கட்டும் என்று எண்ணி உணவுப்பட்டியலை எடுத்து அவளிடம் படிக்க கொடுத்தேன்.

நீ குழந்தையாக இருக்கும் போது நான் உனக்காக முழுப்பட்டியலையும் வாசித்துக் காட்டினேன்" அவள் கூறினாள்.

இப்போது அவளுடைய எதிர்பார்ப்பு எனக்கு நன்றாக புரிந்தது.

சாப்பிடும் போது அவள் எங்களுடைய அப்போதைய குடும்ப விசயங்களைப் பற்றி மிகவும் சிலாகித்து பேசினாள். அதனால் அடுத்து சினிமாவுக்கு செல்ல கொஞ்சம் நேரமாகிவிட்டது. ஆனாலும் போய்விட்டோம்.

நான் அவளை வீட்டில் கொண்டுபோய் விடும்போது அவள் கூறினாள்.

" இன்னும் ஒரு நாள் இப்படி பொழுதை கழிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், ஆனால் அந்த முறை நானே உன்னை அழைப்பேன்"

நான் சரியென்று தலையாட்டினேன்.

வீட்டுக்குப் போனதும் மனைவி கேட்டாள்.

"இன்றைய பொழுது எப்படி கழிந்தது?

"நினைத்ததை விட நன்றாகவே கழிந்தது." நான் கூறினேன்.

சில நாட்களில் மிகப்பெரிய மாரடைப்பு வந்து அவள் இறந்து விட்டாள். என்னால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து நான் அவளுடன் சாப்பிட்ட உணவகத்திலிருந்து எனக்கு ஒரு ரசீது கடிதத்துடன் கவரில் வந்தது. அந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது.

"நம்முடைய இரண்டாவது நாள் சாப்பாட்டுக்கும், சினிமாவுக்கும் நானே பணம் செலுத்தி விட்டேன். ஒருவேளை அந்த நாள் நான் இந்த உலகில் இல்லாது போய் விடலாம். அதனால் நான் உனக்கும் உன் மனைவிக்குமாக சேர்த்து இரண்டு பேருக்கு பணம் செலுத்தி இருக்கிறேன். நீ என்னை வெளியே கூட்டிச் சென்ற அந்த நாளில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் அன்பு மகனே நான் உன்னை ஆழமாக நேசிக்கிறேன்."
 
(  இணையத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது )