Friday, May 24, 2013

அளவாக, அவசியமானதை மட்டும் சாப்பிட வேண்டிய முதுமைக் காலம்

மூட்டுக்கள் அதிகம் நோவெடுக்கிறது. பசியே இல்லை. தூக்கம் வருவேனா என்கிறது. இந்தக் காது வேற சரியாக் கேட்க மாட்டேங்குது. இதுக்கு நடுவுல மலச்சிக்கல் வேற! அதுக்காக ரொம்ப மாத்திரை எழுதிடாதீங்க டாக்டர். எல்லாத்துக்கும் சரியா வர்ற மாதிரி ரெண்டு இல்லை மூணு மாத்திரை முந்நூறு ரூபாய்க்குள்ள வர்ற மாதிரி எழுதித் தாங்க!'' - இப்படி தள்ளாமை மற்றும் இல்லாமையோடு வரும் முதுமைத் தம்பதியர் கூட்டம் இன்று மருத்துவமனைகளில் அதிகம். வயோதிகம் வியாதியுகமாகத்தான் இருக்க வேண்டுமா?


வயோதிக உணவுத் தேவை கொஞ்சம் மாறுபாடானது. அளவாக, அவசியமானதை மட்டும் சாப்பிட வேண்டிய காலம், முதுமைக் காலம். முதலில்... தண்ணீர். வயோதிக உடலின் எடையில் 60 விழுக்காடு தண்ணீர்தான் இருக்கும். இது இளமையில் இருப்பதைக் காட்டிலும், 10 சதவிகிதம் குறைவு. இந்தப் பருவத்தில் பல பிரச்னைகள் தண்ணீர் சாப்பிட மறுப்பதிலும் மறப்பதிலும்தான் துவங்குகிறது. பெரும் பாலான பெரியவர்கள் ரத்தக் கொதிப்புக்கு, சர்க்கரைக்கு, இதய நோய்க்கு, மலச்சிக்கலுக்கு மருந்து சாப்பிடும் பழக்கத்தில் இருப்பார்கள். இந்த மருந்துகளினால் பல நேரம் நீரிழப்புக்கும், தேவையான உப்பு விகிதம் ரத்தத்தில் குறைவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.  'என்ன நடக்குது? ஏன் தலை மட்டும் வேர்க்குது? வெலவெலனு வருது? குறை சர்க்கரையா? அதிக சர்க்கரையா? மெடிக்கல் ஃபைல்ல போட்டிருக்கிற நம்பருக்கு போன் பண்ணா, தேவையில்லாம அட்மிட் பண்ணிருவாங்களோ?' என்ற பயம் வேறு அவ்வப்போது வந்துபோகும். இத்தனை பிரச்னைகளையும் சரியான அளவில் சீரான இடைவெளியில் தண்ணீர் அருந்துவதன் மூலமே தவிர்க்க முடியும். வயதாகும்போது, உடலின் நீரிழப்பை அறிவுறுத்தும் தாக உணர்வு இளம் வயதைக் காட்டிலும் கொஞ்சம் குறைவு. அதைப் புரிந்து, வீட்டுப் பிள்ளைகள் தம் தாத்தா பாட்டியைப் பார்த்து அவ்வப்போது கரிசனத்துடன், 'தண்ணி குடிச்சீங்களா பாட்டி?' எனக் கேட்கும் கேள்வி எல்லா தாகத்தையுமே சேர்த்துப் போக்கும்.

செல்லுக்கு இடையில் தங்கி, வயோதிக மாற்றத்தை வேகமாகத் தூண்டுவதைத் தடுக்கும் பொருளான Free radicals-யை, விலை உயர்ந்த ANTI  OXIDANTS மாத்திரைகளைக்கொண்டு தடுப்ப தைக் காட்டிலும், அவற்றைத் தன்னகத்தே இயற்கையாகக்கொண்ட க்ரீன் டீ, பப்பாளி, மாதுளை மூலம் எதிர்கொள்ளலாம். வயோதிகத்தில் பழங்கள் மிகவும் அத்தியாவசியமானவை. மலச்சிக்கலைப் போக்க, கரையா நார்களையும், இதய நாடிகளின் கொழுப்பை அகற்றக் கரையும் நார்களையும், செல் அழிவைப் போக்க பாலி பீனால்களையும், ஆற்றலை நீடித்துத்தர 'காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்'டையும் தரும் பழங்கள், தினசரி உணவில் ஒரு பகுதியாக இருப்பது மிக மிக முக்கியம். ஆனால், மாம்பழம், சப்போட்டா பழங்கள் மரத்தில் தொங்கும் குளுக்கோஸ் பாக்கெட்டுகள். இந்த இரண்டு பழங்களையும் தாத்தாக்கள், பேரன் - பேத்திகளுக்கு வெட்டிக் கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.


பழங்களைத் தாண்டி, இன்னும் அதிக வைட்டமின் சத்துக்கு, வைட்டமின் பி6-ம், புரதச் செறிவு அதிகம் உள்ள பாசிப்பயறு போட்டுச் செய்த கீரைக் கூட்டு, பீன்ஸ் பொரியல், மற்றும் வைட்டமின் பி12 அதிகம் உள்ள கோழி ஈரல் கறி அவ்வப்போது சாப்பிட்டால் போதுமானது.

வயோதிகத்தில் கொழுப்பு உணவைக் குறைக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால், முழுமையாகத் தவிர்ப்பது நல்லதல்ல. நல்லெண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் போன்ற எண்ணெய்களின் கலவையைக் கொஞ்ச மாகப் பயன்படுத்துவது நல்லது. முதுமையில் எலும்புத் தசைகளின் குறைவால், புரதச் சேமிப்பு குறைந்துபோவதாலேயே தேகம் மெலிந்துபோகும். அதை ஈடுகட்ட முளை கட்டிய பாசிப்பயறு, முட்டை வெண்கரு, சத்து மாவு அடிக்கடி எடுப்பது முக்கியம்.

'புளி துவர் விஞ்சிக்கின் வாதம்' என்கிறது சித்த மருத்துவம். வயோதிகத்தின் அடையாளமான முழங்கால் மூட்டுவலியும், தசைவலிகளும் வராது இருக்க, வற்றல் குழம்பு, புளியோதரை போன்ற அமில உணவுகளுக்கு தாத்தா, பாட்டிகள் ஆசைப் படவே கூடாது. கடுக்காய், நெல்லிக்காய், கரிசலாங்கண்ணிக் கீரை போன்ற எளிய காயகற்ப மூலிகைகள் வயோதிகத்தின் வரப்பிரசாதம்.


காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் சாப்பிடுவது வயோதிகத்தில் நோய் வராது காக்கும் மந்திரம் என்கிறது சித்த மருத்துவம். இன்றைய நவீன யுகத்தில் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய வியாதி, புற்று, மன வியாதி இல்லாத வயோதிகர்கள், உண்மையான பாக்கியசாலிகள். நிகழும் 1,000 மரணங்களில் 756 மரணங்கள் மேலே சொன்ன ஐந்து வியாதிகளால்தான் இந்தியாவில் நிகழ்கின்றனவாம். இந்த தொற்றா வாழ்வியல் நோய்க் கூட்டத்தின் பிடியில்தான் பெரும்பாலான முதியோர் உள்ளனர். இவை போக, 'வீட்லதானே இருக்கீங்க... எதுக்கு இப்போ உடனே கேட்ராக்ட் ஆபரேஷன்?', 'அதெல்லாம் கொஞ்சம் கத்திப் பேசுனாக் கேட்கும். எதுக்கு இப்போ இவ்ளோ விலையில ஹியரிங் எய்டு?', 'பல் இல்லேன்னாலும் மிக்சில அடிச்சு முறுக்குத் திங்கணுமா? வயசானா வாயைக் கட்டணும்னு ஒங்க அப்பாவுக்குத் தெரியாதா?' என்ற அலட்சியங்களும், 'உங்க வயித்துக்கு செட் ஆகாது. நீங்க ஹோட்டலுக்கு வர வேண்டாம்', 'மூட்டுவலியோட எதுக்கு இப்போ ஊருக்கு வரணும்னு அடம்பிடிக்கிறீங்க? பேசாம வீட்ல இருங்க' போன்ற நிராகரிப்புகளும் சாலிகிராமத்திலிருந்து சான்ஃபிரான்சிஸ்கோ வரை குதித்து வரும். இப்படியான அறிவுரைகள் சர்க்கரை, ரத்தக் கொதிப்புகளைவிட, வலியும் வேதனையும் தருவன. வீட்டில் இருக்கும் முதிய வர்கள் மருந்தோடு உன்னத உணவு, உற்சாக மனம் இவற்றோடு உரசல் இல்லாத உறவும் இருந்தால் மட்டுமே வயோதிக வியாதிகளை ஜெயிக்க முடியும் என்பதை வீட்டின் 'வருங்கால வயோதிகர்'கள் உணர வேண்டியது அவசியம்!

மருத்துவர் கு.சிவராமன்