Saturday, May 25, 2013

இந்த வயதில், உனக்கு படிப்பு தேவையா?

கல்வி கற்க வயது தடையில்லை!


வெகு நாட்களுக்குப் பின், என் தோழியை சந்தித்தேன். தற்போது, எம்.பி.ஏ., படித்துக் கொண்டிருப்பதாக சொன்னாள். "பிள்ளைகள், காலேஜில் படிக்கிற இந்த வயதில், உனக்கு படிப்பு தேவையா...' என்றேன்.

அதற்கு அவள், "நானும் நாள் முழுவதும், "டிவி' பார்த்து பொழுதை கழித்தவள் தான். என் மகன் பத்தாவது வகுப்பு துவங்கியவுடன் கேபிள் இணைப்பை துண்டிக்க வேண்டிய கட்டாயம். எப்படி பொழுதை கழிப்பது என்று யோசித்தபோது, என் மகன், "ஏனம்மா... நீயும் ஏதாவது ஒரு கோர்ஸ் சேர்ந்துவிடு. இருவரும் சேர்ந்து படிக்கலாம்...' என்றான். எனக்கும் அது சரியாகப்பட்டது.

"தொலைதூர கல்வியில், எம்.ஏ., சேர்ந்தேன். அதற்காக நூலகம் செல்ல வேண்டி வந்தபோது, பல நல்ல நூல்களின் அறிமுகம் கிடைக்க, பல விஷயங்களை கற்க முடிந்தது. "பஸ்சில், போய் வர சிரமமானபோது, இருசக்கர வாகனம் ஓட்டவும் கற்றுக்கொண்டேன். படிப்பில், என் மகனுக்கு தேவையான உதவிகளைச் செய்ததால், அவன் பள்ளியில் முதல் மாணவனாக வந்து, இப்போது கல்லூரியிலும் சேர்ந்து விட்டான். நானும் மேலே படிக்கிறேன்...' என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

பிள்ளைகள் பெரியவர்களானவுடன், வயதாகிவிட்டது போல் உணர்ந்து கொண்டிருக்காமல், எந்த வயதானாலும் ஏதேனும் ஒன்றை கற்றுக் கொண்டிருந்தால்... மனமும், உடலும் எந்த வயதிலும் இளமையாக இருக்குமல்லவா!

இந்த வயதில் வகுப்புக்குப் போவதா என்று தயங்காமல், உங்களுக்கு பிடித்த பாட்டு, கைவேலை என்று, ஏதேனும் புதிதாக கற்றுக் கொள்ளுங்கள். நம் வாழ்க்கையை முழுமையாக வாழுவோம்!


(தினமலரில் ஒரு வாசகி பகிர்ந்து கொண்டது. 26/05/2013)