Tuesday, May 21, 2013

அடம்பிடிக்கும் குழந்தைகளை நேர்படுத்துவது எப்படி?

1. பாசத்தைக் காட்டுகிறேன் என்கிற பெயரில், ஆரம்பம் முதலே மிகையாகக் கொஞ்சுவது, தாங்குவது என செய்வது தவறு. அவர்கள் கேட்பதற்கு முன்னரே ஒரு பொருளைக் கைகளில் தருவதும் தேவையில்லாதது. அழுவதற்கு முன்னரே பால் கொடுப்பதிலேயே துவங்குகிறது இந்தப் பிரச்னை. கேட்பதற்கு முன்னரே எல்லாம் கிடைக்கும் என்ற சூழலில் வளரும் குழந்தைகள், வளர வளர அடம் பழகவே செய்யும்.

2. உங்கள் குழந்தைகள் கேட்கும் விஷயம் நியாயமானதாகவும், உங்களால் நிறைவேற்ற முடிவதாகவும் இருந்தால்... அது அடம் அல்ல, தேவை. அவற்றைத் தாராளமாக நிறைவேற்றலாம்.

3. குழந்தை ஒரு பொருள் வேண்டும் என்று கேட்டு, அது தேவையில்லாதது அல்லது அதற்கான சூழ்நிலை இது இல்லை என்பதை எடுத்துச் சொல்லியும் தொடர்ந்து அடம் செய்தால், கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். உதாரணமாக, கடையில் ஒரு பொம்மையைக் கேட்டு அழுது அடம் செய்தால், அன்பாகச் சொல்லிப் பாருங்கள். அடம் தொடர்ந்தால், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு நடையைக் கட்டுங்கள். நீங்கள் வாசலுக்குச் செல்லும்போது உங்களிடம் ஓடிவந்துவிடும்.

4. தரையில் உருள்வது, தலையை முட்டிக்கொள்வது என எதற்கும் மசியாதீர்கள். வலி வந்தால், அழுகையும் அடமும் தானாக நிற்கும். அவர்களின் அழுகைக்கு கரைந்தோ, அடத்துக்கு வளைந்தோ... கேட்டதை நிறைவேற்றினால், 'ஓஹோ... அப்போ அடம் பிடிச்சா காரியம் நடக்கும்!' என்றுதான் குழந்தை புரிந்துகொள்ளும்.

5. வீட்டுப்பாடம் செய்வதில் தொடர்ந்து அடம் செய்யும் குழந்தைகள் ஏராளம். இதில் அவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. படிப்பின் மீது கசப்பு, பிடிக்காத ஆசிரியை, அடிக்கும் அம்மா என்று காரணத்தை ஆராயுங்கள். அவர்களுடன் அமர்ந்து, கதைகளாகவோ, சித்திரங்களாகவோ பாடங்களை எளிமையாக்கிக் கற்றுக்கொடுங்கள்.

6. அடம்பிடிக்கிறார்களே என்று பாக்கெட்டில் அடைத்த உணவுகள், துரித உணவுகளை வாங்கித் தருவது... கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை நோயாளியாக்குவதற்குச் சமம். பழக்கமாகிவிட்டால்... உடனே நிறுத்தவும் முடியாது. பழங்கள், பழச்சாறு, பால் பாயசம் போன்ற சத்துமிக்க உணவுகளைச் சேர்த்துக் கொடுங்கள். இவற்றின் ருசியை உணர வைத்து, துரித உணவுகளிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிரியுங்கள்.

7. 'எப்பப் பார்த்தாலும் டி.வி பார்க்குறான்' என்பது முக்கியமான குற்றச்சாட்டு. புத்தகங்கள் வாசிக்க, கலைப்பொருட்கள் செய்ய, உங்களுடன் விளையாட என்று நேரத்தை சந்தோஷமாக செலவழிக்கக் கற்றுக்கொடுங்கள். அதன்பிறகு, 'குறிப்பிட்ட நேரம் மட்டுமே டி.வி' என்கிற பழக்கத்துக்கு அவர்கள் கட்டுப்படுவார்கள்.

8. தினமும் காலை தாமதமாக எழுந்து, பள்ளிக்குக் கிளம்ப படுத்தும் குழந்தைகளை, சில நாட்களுக்கோ வாரங்களுக்கோ தாமதமாகவே பள்ளிக்கு அனுப்பி, அதற்காக ஆசிரியையிடம் தண்டனை பெற வையுங்கள். பின் தானாக, 'என்னை சீக்கிரம் கிளப்பிவிடுங்கள்' என்று வழிக்கு வருவார்கள். சில வீடுகளில் பெற்றோர் தாமதமாக எழுவதாலேயே பிள்ளைகளும் தாமதமாகக் கிளம்ப நேரிடுகிறது. இதையும் சரிபடுத்தவும்.

9. 'நீ இதை செய்தா, அதன் விளைவு இப்படி பாதகமா இருக்கும்' என்பதை முதலில் வார்த்தைகளில் சொல்லுங்கள். கேட்கவில்லை எனில், அதை அவர்கள் செயல்வடிவில் உணர்ந்து திருந்தும் வகையில், குறிப்பிட்ட சிலவற்றை (அவர்களுக்கு உடல்ரீதியிலோ... மனரீதியிலோ பெரிதாக பாதகம் ஏதும் தராத விஷயங்கள்), ஓரிரு முறை அப்படியே விட்டுவிடுங்கள். ஒரு முறை பட்டால், மனதில் பதிந்து, பின் தானே வழிக்கு வருவார்கள்தானே!

10. வீட்டில் ஏதோ ஒரு விஷயத்துக்கு அடம்பிடிக்கும் குழந்தை உங்கள் சேலையைப் பிடித்து இழுப்பது, பொருட்களைக் குலைத்துப்போடுவது என்றிருந்தால், பி.பி எகிற கத்தாதீர்கள்... அடிக்காதீர்கள். அவர்களின் கோபமும் வெறுப்பும் அதிகமாகவே செய்யும். மாறாக, அவர்களுடன் பேசாமல் இருந்துவிடுங்கள். தாயின் மௌனத் தைவிட குழந்தைக்கு பெரிய தண்டனை இல்லை. 'அம்மா!' என்று சரண்டர் ஆகும்!

11. இது வெயில் நேரம் என்பதால், தண்ணீரிலோ அல்லது நீச்சல் குளத்திலோ விளையாட அதிகம் விரும்புகிற குழந்தையிடம், 'மாட்டேன்' என்று சொல்லாமல், உங்கள் முன்னிலையில் அவர்களை விளையாட விடுங்கள். இதுபோன்ற விஷயங்களில் உங்கள் கண் பார்வையிலேயே அவர்களை அனுமதிக்கும்போது... அவர்களுக்கும் உங்களுடைய அக்கறை புரியவரும்!

12. குழந்தைகளைப் பொறுத்தவரை, கடினமான பேச்சுகளையோ அல்லது திட்டுக்களையோவிட, உங்களின் சைகை, மௌன, உடல் மொழிகளைத்தான் அதிகம் உணர்ந்து உள்வாங்கி கொள்வார்கள். அவர்கள் செய்கிற செயல் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை சொல்லில் புரிய வையுங்கள். புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களா, பேசாமல் இருங்கள்... அதுவே போதும், அவர்களைத் திருத்த!