Saturday, June 15, 2013

அதெல்லாம் சரி வராது அங்கிள்..

விக்கியும் சைக்கிளும்!

'என்ன அங்கிள்... காலேஜுக்குப் போய், யாராவது சைக்கிள்ல போவாங்களா..?' காலேஜுக்கு சைக்கிளில் போவாயா என்று கேட்டதற்கு விக்கி சொன்ன பதில்தான் இது.

'ஏன் போனா என்ன..?' என்று கேட்டேன்.

'அதெல்லாம் சரி வராது அங்கிள்..'

'அதுதான் ஏன்னு கேட்கறேன்..?'

'வேணாம் அங்கிள்.. நான் 'பைக்'லதான் போகப் போறேன்...'

விக்கி தன் முடிவுல தீர்மானமா இருக்கான்னு புரிஞ்சுகிட்டேன். இது வெறுமனே சைக்கிள்ல போறதா, இல்லை பைக்குல போறதாங்கற கேள்வி மட்டும் இல்லை. நேத்தைக்கு, ஏன் இன்னைக்குகூட செஞ்சிக்கிட்டு இருந்த ஒரு விஷயத்தை, காலேஜுக்குப் போயிட்டோம் என்கிற ஒரே காரணத்துக்காக விட்டுடணுமா..? பள்ளியில் இருந்து கல்லூரி என்பது மிகப் பெரிய 'தாவல்' என்று ஏன் இளைஞர்களும் பெற்றோரும் கருத வேண்டும்..?

விக்கியின் 'பைக்' ஆசையும் அத்தகையதுதான்.

'ஓகே, நீ பைக்கிலேயே போ. ஆனா, உன்கிட்ட சைக்கிள் இருக்கா?'

'யெஸ், இருக்கு.'

'உன்னால, பத்து, இருபது கிலோ மீட்டர் தினமும் சைக்கிள் ஓட்ட முடியுமா?'

'ஓ 'டெஃபனைட்'டா முடியும்.'

'உனக்கு சைக்கிள் ஓட்டப் பிடிக்குமா?'

'பிடிக்கும். இன்ஃபேக்ட் ஐ என்ஜாய் ரைடிங்'.

'உனக்குப் பிடிச்ச, உன்னால முடியுற ஒரு 'நல்ல' விஷயத்தை நீ ஏன் செய்யக்கூடாதுன்னு நினைக்கிறே..?'

கொஞ்சம் யோசித்துவிட்டு, 'கம்ஃபர்ட்தான் அங்கிள். உங்க பாஷையில சொல்லணும்னா, சொகுசா இருக்கணும்!'

'கரெக்ட். ஆனா, வாழ்க்கையை அதனுடைய கடினமான பாதையில போய் வாழறதுதான் எதிர்காலத்துக்கு நல்லது. அதிலேயும் குறிப்பா, உன்னுடைய வயசுல நீ கம்ஃபர்ட்டுக்கு, அதாவது சொகுசுக்கு முக்கியத்துவம் தரவே கூடாது!'  

'சரிதான் அங்கிள், மத்தவங்க எல்லாம் 'வண்டி'யில வரும்போது, நான் மட்டும் சைக்கிள்ல போனா, எல்லாரும் என்னை கிண்டல் பண்ணுவாங்களே!'

'ஓகே. அதுதான் உன் ப்ராப்ளம் இல்லியா..?. சுவாமி விவேகானந்தர் என்ன சொல்லி இருக்கார்னு சொல்லவா? எந்தவொரு பெரிய காரியத்தை நீ செய்ய முயற்சித்தாலும், மூன்று நிலைகளை, நீ கடந்துதான் ஆகவேண்டும். ஒன்று, ஏளனம்; இரண்டாவது, எதிர்ப்பு; மூன்றாவது,  ஏற்றுக்கொள்ளுதல். இந்த மூணு நிலையையும் தாண்டி வர்றவங்கதான் சாதனையாளரா உருவாகுறாங்க! உன்னைக் கிண்டல் பண்ணுவாங்கன்னு சொன்னே இல்லை..? அதையே நீ இப்படி  பாரேன்.. நீ மட்டும்தான் சைக்கிள்ல போறேன்னு வச்சிக்கோ. அப்ப என்ன ஆகும்..? உன் ஃப்ரெண்ட்ஸுங்க உன்னை 'சைக்கிள் விக்னேஷ்'னு கூப்பிட ஆரம்பிப்பாங்க. உனக்கு தனியா ஒரு 'ஐடெண்டிட்டி' கிடைக்கும். தனக்குன்னு ஓர் அங்கீகாரம் கிடைக்கத்தான் பல பேர் இன்னைக்குப் போராடுறாங்கத் தெரியுமா..?'

'யெஸ் அங்கிள், ஐ நோ'

'பிறகு ஏன் அதை ஒப்புக்கமாட்டேங்கிறே! முதல்ல நீ மட்டும் சைக்கிள்ல போகலாம். உன்னைப் பார்த்து உன் ஃப்ரண்ட்ஸும் சைக்கிள்ல வர ஆரம்பிப்பாங்க. கடைசியில பலரும் சைக்கிள்ல வர்றப்ப, இதுக்கு மூலகாரணமான நீ தனியாத் தெரிவே! உன்னைப் பத்திரிகையில, ஏன், டி.வி.யிலகூட இன்டர்வியூ பண்ணுவாங்க''.

'அங்கிள், இது கொஞ்சம் டூமச்சான கற்பனை!'

'இல்லை விக்கி, 'சாதனை'ங்கறது சில பேராலதான் முடியும், அது ரொம்ப ரொம்ப அரிதான விஷயம்னு நாம் நினைக்கறோம். சாதிச்சுக் காட்டறது கஷ்டமான காரியம்தான்.  அதேசமயம், நடைமுறையிலே அது எப்படி நிறைவேறுதுன்னு சிந்திச்சு பார்த்தா, அது 'நீண்டகாலக் கனவு'ங்கிறது புரியும்!''

''அங்கிள், நீங்க சொல்றது எனக்குப் புரியலை!''

'ஓகே, படிச்சு முடித்தபிறகு நீ என்னவா வரணும்னு நினைக்கிறே... ஐ.ஏ.எஸ்..?, ஐ.பி.எஸ்..?''

''ஐ.ஏ.எஸ்.தான் என் சாய்ஸ்''

''குட், அதை உன்னோட நீண்டகால கனவுன்னு சொல்லணும். இந்தக்  கனவு ஒரேநாள்ல நிறைவேறிடாது. அதுக்கு என்ன செய்யணும்..? கல்லூரியில் படிக்கிற காலத்தில் இருந்தே, நிறைய படிக்கணும்; தினமும் நாலு, அஞ்சு மணி நேரம் ஒதுக்கிப் படிக்கணும். தினமும் ஓர் 'இலக்கு' வச்சி படிக்கணும்.

அஞ்சாறு வருஷம் கழிச்சு, நீ ஐ.ஏ.எஸ். ஆயிட் டேன்னு வச்சுக்க, அதுக்கு என்ன அர்த்தம்? சிறுக சிறுக முடிச்ச வேலைகளின் மொத்தம்தான் ஒரு பெரிய காரியம் அல்லது சாதனை. புரிஞ்சுதா?''

'யெஸ், சட்டன்லி.'

'ஆக தினமும் நாம தொடர்ந்து செய்ற சின்னச் சின்ன மாற்றத்துனாலதான் பெரிய மாற்றம் நடக்கும். எந்த ஒரு மாற்றமும் படிப்படியாதான் நடக்கும். தனியரு மனிதனால ஒட்டுமொத்த சமுதாயத்தை ஒரேநேரத்துல மாத்திட முடியாது. ஒவ்வொரு தனிமனிதனும் மாறினாதான் ஒட்டுமொத்த சமுதாயமும் மாறமுடியும்'.

'கிரேட், அங்கிள்... நான் கிளம்பவா?' என்றான் விக்கி.

'என்ன, நான் சொன்னது சரிதானே! உனக்கு ஒரு சின்ன எக்சைஸ் தர்றேன், செய்வியா? கஷ்டம்னு நீ நெனைச்சா, வேணாம்' என்றேன்.

'நோ அங்கிள், தாராளமாச் செய்றேன்!'

'காலேஜுக்கு சைக்கிள்ல போறதுல என்னென்ன சாதகம், என்னென்ன பாதகம்'னு ஒரு லிஸ்ட் போடு. ஒரேஒரு கண்டிஷன், நீ எழுதுறது உன் மூளையில இருந்து சொந்தமா உதிச்சதா இருக்கணும். எழுதி முடிச்ச பிறகு, எந்தப் பக்கம் 'ஸ்ட்ராங்க்'ன்னு பார்த்து, நீ என்ன செய்யலாம்னு முடிவெடுத்துக்கோ...'

'அப்படியே செய்றேன் அங்கிள்' என்று கிளம்பிப் போனான் விக்கி.

விக்கி சென்றபிறகு வெகுநேரம் வரையில் எனக்குள் வேறுவேறு எண்ணங்கள் சுழன்று சுழன்று வட்டம் அடித்தன. இன்றைய இளைஞர்கள் எதிலெல்லாம் பிடிவாதமாக இருக்கிறார்கள்? எங்கெல்லாம் விட்டுத்தரத் தயாராக இருக்கிறார்கள்..?

விக்கியை வைத்தே யோசித்துப் பார்த்தேன்.  

மாதுளம் பழம் நல்லது என்று தெரியும். ஆனால், பிடிக்கவில்லை என்பதால் வேண்டாம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறான். சைக்கிள்விடப் பிடிக்கும்; என்றாலும், அதை விட்டுவிடத் தயாராக இருக்கிறான். சில நேரங்களில் இளகியும், சில விஷயங்களில் இறுகியும் இருக்கும் இளைஞர்களைக் 'கையாள்வது' கடினம்தான்.

ஓரிரு நாட்கள் கழித்து விக்கியின் அப்பா வைகுந்திடமிருந்து போன் வந்தது.

'ஆமா.., அன்னைக்கு விக்கியை அனுப்பி வச்சனே... அவனுக்கு நீ என்ன சொல்லி அனுப்பினே..?'