Monday, August 26, 2013

இளைஞர்களை 'இன்டலிஜென்ட்’ ஆக்குகிற சூத்திரம்

'வணக்கம், திருவேங்கடம்...' குரலில் கனிவு குழைந்து ஓடியது.

பதிலுக்கு, 'வணக்கம்...' என்று மட்டும்தான் சொன்னேன்.

'நலமா இருக்கீங்களா..? வெளியூர் எங்கேயும் போயிட்டீங்களா..? தொடர்புலயே இல்லை..? பணிகள் எல்லாம் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு..?' அடுக்கிக்கொண்டே போனார்.

'நல்லா இருக்கேன்.., உங்களுடைய 'இன்டர்வியூ' வேணும்'.

'எனக்கு எடுத்துதான் பழக்கம், கொடுத்துப் பழக்கமில்லை..!' எப்போதும்போல குறும்பாகப் பதில் சொன்னார்.

விளக்கிச் சொல்லவேண்டிய அவசியம் இல்லாமலேயே எதையும் தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடியவர் என்பதால் இரண்டே நிமிடங்கள்தான் ஆயிற்று.

'இளைஞர் முன்னேற்றம்தான் 'தீம்'. அதைச் சுத்தியேதான் இன்டர்வியூ இருக்கும். இன்ஃபேக்ட், முதல் கேள்வி தயாரா இருக்கு. ஓர் இளைஞன் எங்கே இருந்து தொடங்கணும்..? முதல்ல செய்யவேண்டியது, அதாவது உடனடியாகச் செய்யவேண்டியது என்ன..?' என் கேள்வியைச் சொன்னேன்.

'நாளை காலையில ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்துடுங்க...'

காலம் எவ்வளவோ மாறிவிட்டாலும், டிவி, இன்டர்நெட் என எத்தனையோ சாதனங்கள் வந்துவிட்டாலும், சிறுவயதில் ரேடியோ நிகழ்ச்சிகளைக் கேட்டது இன்றும் பசுமையாக இருக்கிறதே! இன்றுவரைகூட அதை மறக்க முடியவில்லையே!

திடீரென எதற்கு இந்த 'ரேடியோ' புராணம் என்று கேட்கிறீர்களா? சம்பந்தம் இருக்கிறது.

இளைஞர்களை 'இன்டலிஜென்ட்' ஆக்குகிற சூத்திரம் என்ன..? உண்மையில் அப்படியன்று இருக்கிறதா..? இருந்தால் யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது..?

யோசித்துப் பார்த்ததில் ஒருவர் நினைவுக்கு வந்தார். 'அட... எப்படி மறந்தோம்..?' என்று தோன்றியது. ரேடியோவுக்கும் அவருக்குமான நெருங்கிய தொடர்பு பரவலாகப் பலரும் அறிந்ததே. பெரியவர் விஜய திருவேங்கடம்! ஆல் இந்தியா ரேடியோவின் நிலைய இயக்குநராகப் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி பன்மொழிப் புலமையும் பல்துறை அறிவும் ஒருங்கேபெற்ற அனுபவஸ்தர். தனது நீண்ட நெடிய 'ரேடியோ' பயணத்தில் ஏராளமான அறிஞர்களை, சாதனையாளர்களைப் பேட்டி கண்டவர் அவர். எண்ணற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு தந்து ஊக்குவித்தவர். அவரால் தெளிவான வழிகாட்ட முடியும் என்று உறுதியாக நம்பினேன்.

ஆறு மணிக்குச் சென்று சேர்ந்து விட்டேன். வீட்டு வாசலிலேயே நின்றுகொண்டு இருந்தார்.

'மொதல்ல சின்னதா ஒரு வாக்கிங் போய் வரலாம் வாங்க...' பேசியபடியே நடக்க ஆரம்பித்தோம்.

'சார், என் கேள்வி பத்தி யோசிச்சீங்களா..?'

'யோசிச்சேன். ஆனா, வாக்கிங் போறப்ப சில விதிகளைக் கடைப்பிடிக்கணும். அதுல முக்கியமானது, பேசக்கூடாது. அதிலேயும் முக்கியமா, செல்போன்ல பேசக்கூடாது. ஆனா, கண்ணையும் காதையும் கூர்மையா வச்சிக்கணும். நம்மை சுத்தி நடக்கறதையெல்லாம் கவனிக்கணும். மனசுல பதிய வச்சிக்கணும்...'

யோசிச்சுப் பார்த்தேன். இந்த 'கவனித்தல்'ங்கற பழக்கம் ஏன் இல்லாமலே போயிடுச்சு..?

குழந்தையா இருந்தப்ப, பார்த்தும் கேட்டும்தானே அறிவை வளர்த்துக்கிட்டோம்..? எழுதப் படிக்கக் கத்துக்கிட்டதும், 'கவனிக்கிறதை' விட்டுட்டோம். 'கவனித்தல்'தான் ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையான 'லேர்னிங் டூல்'. பூச்சி, பறவையில இருந்து சிங்கம், புலி, கரடி, யானை, குரங்கு வரைக்கும் கவனிச்சுதான் தெரிந்துகொள்கிறது. நமக்கும் அந்த அறிவு உண்டு. ஆனா, பயன்படுத்தறதுதான் இல்லை!

'வாக்கிங்' முடிஞ்சு வீட்டுக்கு வந்தோம். 'வாக்கிங் போன சமயத்துல என்ன கவனிச்சீங்க சொல்லுங்க...' என்றார் திருவேங்கடம்.

இதை நான் எதிர்பார்த்தேன். அதனால கேட்ட மாத்திரத்தில் சொன்னேன்.

'கொஞ்சம் கொஞ்சமா ஜனங்க நடமாட்டம் அதிகமாகுது, வண்டிங்க ஒவ்வொண்ணா வர ஆரம்பிச்சிடுச்சி.. டீ கடை வாசல்லேயும், பேப்பர் கடையிலேயும் கூட்டம் இருக்குது...' என்று பொதுவாகச் சொன்னேன்.

'ஓகே...' என்று சொல்லி ஒருகணம் இடைவெளிவிட்டு சொன்னார்... 'நீங்க சொன்னீங்களே ஒரு தீம்... அதுதான் 'யூத் டெவலப்மென்ட்'! அந்த ஆங்கிள்ல ஏதாவது கவனிச்சீங் களான்னு கேட்டேன்...' என்றார் காபியைக் குடித்தபடி.

'அடடா... சார், அந்த கோணத்துல பார்க்கலையே!' என்றேன்.  

'பரவாயில்லை... நிறைய பேரு வாக்கிங் போறதைப் பார்த்தீங்க இல்ல..? அதுல யூத் எத்தனை பேர் இருந்தாங்க..?'

'ஒண்ணு ரெண்டு பேர்கூட இல்லை...'

'கரெக்ட். ஏன் அப்படி..?'

'ஏன்னா.., அவங்களுக்கு 'இன்ட்ரஸ்ட்' இல்லை. அல்லது, அவசியம் இல்லைன்னு அவங்க நினைச்சிருக்கலாம். அல்லது ஜிம்முக்குகூடப் போயிருக்கலாம்'.

'இது எதுவும் சரியான காரணமில்லை' என்று சிறிது நேரம் மௌனமாக இருந்தார். முக்கியமாக எதையோச் சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன்.

'பெரும்பாலான இளைஞர்கள், காலையில எட்டு மணிக்கு முன்னால எழுந்திருக்கிறதே இல்லை, தெரியுமா..? காலேஜுக்குப் போகணும், ஆபீஸுக்குப் போகணுங்கற மாதிரி இருந்தால் ஒழிய, காலையில சீக்கிரம் எழற பழக்கம் அறவே போயிடுச்சி...'

நான் குறுக்கிட்டேன் 'நைட்டு லேட்டா தூங்கறான்.. காலையில லேட்டா எழுந்திருக் கிறான்.. இதுல என்ன தப்பு இருக்கு..?'

தீர்க்கமாக என்னை ஒருமுறை பார்த்தவர், தொடர்ந்து பேசினார். 'இதுல என்ன தப்பு இருக்குன்னு கேட்டுக் கேட்டுத்தான் பல தவறு களை நாம் வளர்த்து விட்டுட்டோம். முதல் நாள் எவ்வளவு வேலை இருந்தாலும், மறுநாள் காலையில எப்போதும்போல எழுந்துடணும்; அப்புறம் தேவைப்பட்டா இடையில கொஞ்சம் தூக்கமோ, ஓய்வோ எடுத்துக்கலாம். காலைப் பொழுதுங்கறது சுறுசுறுப்பா வேலை செய்ய வேண்டிய நேரம். அதைத் தூங்கிக் கழிக்கறது சோம்பேறித்தனத்தின் அறிகுறியே தவிர வேற இல்லை.'

'அதுதான் சொன்னேனே.. நைட்டுல கூடுதலா 'வொர்க்' பண்ணி அதை சரி பண்ணிடுறாங்களே!'  

'இது சரி பண்ற விஷயமில்லை. ஒருவேளை குறைவா சாப்பிட்டுட்டு அடுத்தவேளை அதை சரிபண்ண  முடியுமா..? அதுவும், தொடர்ச்சியா ஒவ்வொரு நாளும்..?  தூக்க விஷயத்துல நமக்கு இன்னும் சரியான விழிப்பு உணர்வு இல்லை.  விடியற்காலைன்னா என்னன்னே தெரியாத ஒரு தலைமுறையை நாம வளர்த்துட்டோம். இது மாறணும். வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிற ஒவ்வொரு இளைஞனும் செய்யவேண்டிய முதல் காரியம் காலையில சீக்கிரம் எழுந்திருக்கிறதுதான்.

எத்தனை சுயமுன்னேற்ற நூல்கள், சொற்பொழிவுகள்..! ஆனா பொதுவா எதுலயுமே, 'விடியற்காலை எழுதல்' பத்திப் பெருசா சொல்றதே இல்லைங்கறதே எனக்கு ஆச்சர்யமா இருக்கு. என்ன காரணம்..? இது ஏதோ பழைய சங்கதியைப் பேசறதா அவங்க நினைக்கறாங்க. சச்சின் டெண்டுல்கர் விளையாடறதை ராத்திரி முழுக்க முழிச்சிருந்து பார்க்கறாங்க; அவரு தினமும் காலையில சீக்கிரம் எழுந்து பயிற்சிக்குப் போறாருங்கறதை மட்டும் வசதியா மறந்துடறாங்க!

என் வாழ்க்கையில பல வெற்றியாளர்களை, சாதனையாளர்களைச் சந்திச்சிருக்கேன், அவங்க ஒவ்வொருத்தர் கிட்டேயும் தவறாம நான் கேட்கறது நீங்க காலையில எத்தனை மணிக்கு எழுந்திருப்பீங்கன்னுதான். சொன்னா நம்பமாட்டீங்க, ஒருத்தர் விடாம அத்தனை பேரும் சொன்ன பதில் விடியற்காலையில என்கிறதுதான். இவங்க யாரும், சாயந்திரம் ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்து ராத்திரி எட்டு மணிக்கே தூங்கப்போனவங்க இல்லை. ஒரு நாளைக்கு 14 மணி நேரம், 16 மணி நேரம் கடுமையா உழைக்கிறவங்க. என்ன ஒண்ணு.., காலத்தினுடைய அருமை தெரிஞ்சவங்க.

இன்றைய இளைஞர்கள் செயல்படுத்த வேண்டிய முதல் தாரக மந்திரம்  இதுதான்... 'விடியலில் விழி'.  

விடியற்காலையில எழுந்து, ஒரு வாக் போயிட்டு வந்து படிக்கிற வேலையைப் பார்த்தா, உடம்புக்கும் மனசுக்கும் எவ்வளவு தெம்பா இருக்கும் தெரியுமா..? ஆரோக்கியமான பழக்கங்கள்தாம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை. யாராவது ஓர் இளைஞன், உடம்பு சரியில்லைன்னு சொன்னா, கேட்கும்போதே மனசு பதறுது. பாறை மாதிரி உடம்பும் பளிங்கு மாதிரி மனசும் இருந்தாதான் 'திண்ணிய நெஞ்சும் தெளிந்த நல்லறிவும்' சாத்தியம் ஆகும். பார்ப்போம்.., மாறாமலா போயிடுவாங்க..? லெட் அஸ் ஹோப் ஃபார் தி பெஸ்ட்..'  

அவர் சொன்னதை அப்படியே அசைபோட்டுக்கொண்டே வந்தேன். இது எடுபடுமா..? சொன்னா ஏத்துப்பாங்களா..? 'இதைப் போய்ப் பெருசா சொல்ல வந்துட்டியா...' என்பார்களோ..? இந்த யோசனைக்கு எந்தளவுக்கு இளைஞர்களின் ஒப்புதல் கிடைக்கும்? எந்தவொரு அறிவுரையும் ஆலோசனையும் ஏற்றுச் செயல்படுத்துவதாக இருந்தால்தானே பலன் கிடைக்கும்..? 'சரிதான் போப்பா...' என்று உதாசீனப்படுத்திவிட்டால்..?