Friday, August 30, 2013

சிறுவர்களுக்கான வலைதளம்

உலகில் உள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கை  196. இவற்றில் ஐ.நா. சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள் 192. இந்த நாடுகளில் மிகவும் இளைய நாடு... அதாவது, சமீபத்தில் உதயமான நாடு, தெற்கு சூடான். 2001-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆப்பிரிக்க தேசமான சூடானில் இருந்து பிரிந்து, தெற்கு சூடான் தனி நாடானது. 1990-ம் ஆண்டுக்குப் பிறகு, உலகில் 29 புதிய நாடுகள் உதயமாகி இருக்கின்றன.

இதுபோன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்பினால், ஃபேக்ட்மான்ஸ்டர் (http://www.factmonster.com) வலைதளம் உங்களுக்கு வழிகாட்டும். இந்தத் தளத்தை 'தகவல் சுரங்கம்' என்றும், 'ஆன்லைன் கலைக் களஞ்சியம்' என்றும் அழைக்கலாம்.

ஆன்லைன் கலைக் களஞ்சியம் என்றதுமே விக்கிபீடியா உங்கள் நினைவுக்கு வரும். விக்கிபீடியா பொதுவான களஞ்சியம் என்றால், ஃபேக்ட்மான்ஸ்டர் சிறுவர்களுக்கானது. இந்தத் தளம், நமது பொது அறிவுக்கு மிகவும் பயன்படும். இந்தத் தளத்தின் முகப்புப் பக்கமே சிறுவர்களைக் கவரும் வகையில் அழகான சித்திரங்களோடு உள்ளன. இதில் உள்ள கட்டுரைகள் மற்றும் தகவல்களுக்கான இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

உலகம் என்ற பகுதியைக் க்ளிக் செய்து, உள்ளே சென்றால்... உலகில் உள்ள நாடுகள், அவற்றின் தேசியக் கொடிகள், உலக வரலாறு, இதுவரை நடைபெற்ற போர்கள் உள்ளிட்ட தகவல்களை, அவற்றுக்குரிய தலைப்புகளை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். அதேபோல அமெரிக்கா பற்றிய விவரங்களை, 'அமெரிக்கா' பகுதியில் உள்ள தலைப்புகளில் தெரிந்துகொள்ளலாம்.

மனிதர்கள் பற்றிய பகுதியில், புகழ்பெற்ற மனிதர்களை அறிந்துகொள்வதோடு, சுயசரிதை எழுதுவது எப்படி என்றும் கற்றுக்கொள்ளலாம். புகழ்பெற்ற தலைவர்களின் சுய‌சரிதையைத் தேடும் வசதியும் இருக்கிறது.

விளையாட்டு, விஞ்ஞானம் ஆகிய பகுதிகளும் இருக்கின்றன. இவ்வளவு ஏன்? வீட்டுப் பாடத்துக்கு உதவுவதற்கு என்றே தனிப்பகுதியும் உள்ளது. வரலாறு, பூகோளம், அறிவியல் ஆகியவற்றின் வீட்டுப் பாடம் அல்லது செயல்திட்டம் செய்வதற்கான தகவல்களைத் திரட்ட உதவும் வலைதளம் இது.

பாடம் படிக்கும்போது அட்லஸ் தேவைப்பட்டாலோ, புரியாத வார்த்தைக்கு அர்த்தம் தேவைப்பட்டாலோ, அட்லஸ் மற்றும் இணைய அகராதியும் உள்ளன. நம்மை உற்சாகத்தில் ஆழ்த்தும் புதிர்கள் மற்றும் விநாடி-வினா பகுதிகளும் உள்ளன.

என்சைக்ளோபீடியா டாட் கிட்ஸ் டாட் நெட் (http://encyclopedia.kids.net.au) தளமும் சிறுவர்களுக்கான களஞ்சியமாகும். இதன் முகப்புப் பக்கமும் வண்ணமயமாகக் கவர்கிறது. இதில் சிறுவர்களுக்கான வலைதளங்கள், இணைய அகராதி ஆகியவற்றுக்குச் செல்லலாம்.  களஞ்சியத்தில் ஒவ்வொரு பிரிவாக, தனித்தனி தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. தேவையானதை க்ளிக் செய்து பார்க்கலாம். தேடு எந்திர வசதியும் உள்ளது.

அட்லாபீடியா (http://www.atlapedia.com) என்ற தளமும் நமக்குத் தேவையான பொது அறிவுத் தகவல்களைத் தருகிறது. எளிமையாகக் காணப்படும் இந்தத் தளத்தில், உலக நாடுகள் மற்றும் அவற்றின் வரைபடங்களைக் காணலாம்.

உயிரியலுக்கு என்றே தனியே ஒரு களஞ்சியம் இருக்கிறது (http://www.botany.com/index.16.htm) இதில் தாவரங்கள் பற்றிய அகராதியும் இடம்பெற்றுள்ளன.

பிடிக்ஷனரி (http://www.pdictionary.com) தளத்தில் எல்லாவற்றையும் புகைப்படங்களாகக் காணலாம்.

புகழ்பெற்ற பிரிட்டானிகா கலைக் களஞ்சியத்தின் கிட்ஸ் பிரிட்டானிகா (http://kids.britannica.com) வலைதளமும் இருக்கிறது.

இந்தத் தளங்களை வலம்வந்தால் போதும்... நமது மூளைக்குள் நிறையத் தகவல்களைச் சேகரித்துக்கொண்டு, நண்பர்கள் மத்தியில் அவ்வப்போது அள்ளிவிட்டு அசத்தலாம்!