Wednesday, September 18, 2013

வெற்றியைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி அதிகமாகும்

ந்நேரம் முடிவை வெளியிட்டிருப்பார்கள். நண்பனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். ''என்ன... ரிசல்ட் வந்துடுச்சா?''என்றேன்.

''உம்'' என்ற ஒற்றைச் சொல்தான் பதிலாக வந்தது. ஒருவேளை, நண்பனைத் தேர்ந்தெடுக்க வில்லையோ? எனக்கு வருத்தமாக இருந்தது. நண்பன் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலைசெய்கிறான். வருடம்தோறும் மிகச் சிறந்த ஊழியர் ஒருவருக்கு 'சிறந்த ஊழியர்' பட்டமும் பரிசுத் தொகையும் வழங்குவர். அதற்கு 10 தகுதிகளை (parameters) வைத்திருந்தார்கள். குறிப்பிட்ட காலத்தில் டார்கெட்டை எட்டுவது, சக ஊழியரிடம் நட்புடன் பழகுவது, புராஜெக்ட் வடிவமைக்கும் திறமை, தகவல் பரிமாற்றத் திறமை ஆகியவையும் இந்தப் பத்தில் உண்டு.

தனக்கும் ராமகிருஷ்ணன் என்பவருக்கும் கடும் போட்டி என்று சொல்லியிருந்தான் நண்பன். ஆனாலும், விருது தனக்கே கிடைக்கும் என்பதில் மிக உறுதியாக இருந்தான். ''எந்தவொரு தகுதியை அலசினாலும், ராமகிருஷ்ணனைவிட நான் கொஞ்சமாவது பெட்டராகத்தான் இருக்கிறேன்'' என்று நம்பிக்கையோடு காத்திருந்தான். ஆனால், முடிவு அவனுக்குச் சாதகமாக இல்லை என்பது அவன் பேச்சில்இருந்தே புரிந்துகொள்ள முடிந்தது.

''அட, விடுடா! அத்தனைபேரிலும் உங்க ரெண்டு பேரில் ஒருத்தருக்குத்தான் விருது என்ற நிலைமை உண்டானதே பெரிய வெற்றிதான். போய் ராமகிருஷ்ணனுக்கு உன் பாராட்டுதலைச் சொல்லு. ஸ்போர்ட்டிவாக இரு!'' என்றேன்.  

''அதெல்லாம் சொல்லிட்டேன். பதிலுக்கு அவனும் என்னைப் பாராட்டினான்'' என்ற போதுகூட நண்பனின் குரலில் சுரத்து இல்லை.  

ராமகிருஷ்ணன் என் நண்பனைப் பாராட்டினானா? எனக்குக் குழப்பமாக இருந்தது. ''யாரைத் தேர்ந்தெடுத்திருக்காங்க? உன்னையா, ராமகிருஷ்ணனையா?'' என்று கேட்டேன்.  

''எங்க இரண்டு பேரையும்தான் தேர்ந்தெடுத்திருக்காங்க. ஆனால், நிறுவனத்தில் இருக்கும் எல்லாருக்குமே தெரியும், அவனைவிட நான் ரொம்பவே பெட்டர்னு. இதை ஏதோ தலைகனத்துல சொல்றதா நினைக்காத! இருவரின் தகுதியையும் சரியாக எடைபோடாமல் நிர்வாகம் சமரசம் செய்துகொண்டுவிட்டது'' என்றபோது, அவனது குரலில் ஆதங்கமும் ஆத்திரமும் எட்டிப் பார்த்தது.

கொஞ்சம் யோசித்தேன். பிறகு, ''கலைவாணி செய்ததைத்தான் உங்க நிர்வாகமும் செய்திருக்கு'' என்றேன்.  

''கலைவாணியா... யாரு? கொல்கத்தாவில் இருக்கிற உன் மாமா பெண்ணா?'' என்றான்.  

''இல்லை. கூத்தனூரிலே  கோயில் கொண்டிருப்பவள். நம் எல்லாருக்கும் சொந்தமானவள். அந்த சரஸ்வதிதேவியைத்தான் சொல்றேன்'' என்ற நான், மிகவும் ரசமான ஒரு சம்பவத்தை அவனிடம் பகிர்ந்துகொண்டேன்.  

'யாருடைய படைப்புகள் சிறந்தவை? கவி காளிதாசருடையதா? கவி பவபூதியுடையதா?' - இந்தக் கேள்வி, மன்னன் போஜராஜனின் மனத்தில் எழுந்தது.  இருவருமே அவனது அரசவையில் இருந்தவர்கள்தான். மிகச் சிறந்த படைப்பாளிகள். ஆனாலும், இருவரில் சிறந்தவர் யார் என்பதை அறியும் ஆவல் மன்னனுக்கு!

மறுநாள், அவையிலிருந்த பண்டிதர்களிடம் தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினான். அவர்களோ, 'மன்னா! கவிச்சக்கரவர்த்திகளான அவர்கள் இருவரையும் ஒப்பிட்டு முடிவு கூற எங்களால் இயலாது!'' என்று ஒதுங்கிக்கொண்டனர்.அதற்கும் அடுத்தநாள், அரண்மனைக்குள் நுழைந்த அறிஞர்கள் திகைத்தனர். அவையின் நடுநாயகமாக பெரிய தராசு ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அருகில் இருந்த ஆசனங்களில் காளிதாசன் மற்றும் பவபூதியின் படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன.  

மன்னன் பேச ஆரம்பித்தான்... 'தராசின் ஒரு தட்டில் கவிஞர் காளிதாசரின் படைப்புகளை வைக்கப்போகிறேன். மறுதட்டில் கவிஞர் பவபூதியின் படைப்புகளை வைக்கப்போகிறேன். இரண்டில் எந்தத் தட்டு அதிக எடை கொண்டதாக இருக்கிறதோ, அதில் உள்ள படைப்புகளை எழுதியவரே சிறந்த கவிஞர் என்று முடிவு செய்யலாம்...'  

கூடியிருந்த அறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் ஒருவர் வெளிப்படையாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்... 'மன்னிக்கவும் மன்னா! இந்த வழிமுறை சரியானது இல்லையே! இலக்கியங்களில் சிறப்பானவற்றை சிந்தனையில் எடைபோட்டுத்தானே இனம் காண இயலும்? தராசுத் தட்டுகளில் வைத்தா தரம் பார்ப்பது?'

'சிந்தனையில் மதிப்பிட்டுச் சொல்லுவீர்கள் என்றுதான் உங்களிடம் கேட்டேன். ஆனால், என் சந்தேகத்தை யாரும் தீர்க்கவில்லையே? எனவே, எனக்கு இதைத் தவிர வேறு வழியில்லை!'

'அதற்காக..? யாருடைய படைப்புகள் அதிக ஓலைகளில் எழுதப்பட்டுள்ளனவோ, அந்தப் படைப்புகளைச் சுமக்கும் தட்டுதானே கீழே இறங்கும்! ஆக... தரமான படைப்பைவிட, அதிக அளவில் எழுதப்பட்டுள்ள படைப்புகளே சிறப்பானவை என்றாகிவிடுமே?'' என்று வேறொருவர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

உடனே மன்னன், 'கவலைப்படாதீர்கள்! நியாயமான முறையில்தான் தேர்வு நடக்கும். இந்தத் தராசு சோதனையில், அன்னை சரஸ்வதிதேவி நமக்குச் சரியான முடிவைக் கூறுவாள்' என்றான்.  

கவிஞர்கள் இருவரின் எதிர்பார்ப்புகளும் கூடின. அன்னை சரஸ்வதி, யாரை சிறந்த படைப்பாளியாக தீர்மானிக்கப் போகிறார் என்று!

சட்டென ஒரு தெய்வீகத் தன்மையை அங்கே அனைவருமே உணர்ந்தார்கள். கண்களால் காணமுடியாவிட்டாலும், சரஸ்வதிதேவி நடுவராக அந்த அவையில் எழுந்தருளியிருப்பதை அவர்களால் யூகிக்க முடிந்தது. பரபரப்பு கூடியது. தராசின் ஒரு தட்டில் கவி காளிதாசரின் படைப்புகளை வைத்தான் மன்னன். மறு தட்டில் பவபூதியின் படைப்புகள். தராசு முள் இப்படியும் அப்படியுமாக ஆடியது. கொஞ்சம் கொஞ்சமாக தன் ஆட்டத்தை அது குறைத்துக்கொள்ளத் தொடங்கியது. அனைவரின் பார்வையும் தராசு முள்ளின் மீது ஆழமாகப் பதிந்திருந்தது.  

முள்ளின் போக்கை காளிதாசர், பவபூதி இருவராலும் யூகிக்க முடிந்தது. காளிதாசன் படைப்புகள் இருந்த தட்டு கனத்தால் கீழே இறங்க, பவபூதியின் படைப்புகள் இருந்த தட்டு சற்று உயரத் தொடங்கியது. பவபூதி மனத்துக்குள் குமைந்தார். 'தாயே, சபையில் எனக்கு அவமானமா?'

சரஸ்வதிதேவி மனம் கனிந்தாள். தாய்மை உணர்வு விஞ்ச, தான் அணிந்திருந்த மாலையின் ஒரு மலரில் இருந்த தேன் துளியை விரல் நுனியால் எடுத்து, பவபூதியின் படைப்புகள் இருந்த தட்டின் மீது வீசினாள். இப்போது தராசுத் தட்டுகள் இரண்டும் சமமாக நின்றன.

காளிதாசனுக்கு சரஸ்வதிதேவியின் உருவம் மட்டுமல்ல; அவள் செய்த காரியமும் புலப்பட்டது. ''நல்லது செய்தாய், அம்மா!'' என்றபடி அவளை வணங்கினார். பவபூதிக்கு சரஸ்வதிதேவியின் அருள் குறித்து ஆனந்தமும், காளிதாசனின் பெருந்தன்மை குறித்து நெகிழ்ச்சியும் ஏற்பட்டது. அவர் தேவியையும் காளிதாசனையும் வணங்கினார்.

தையை முடித்துவிட்டுத் தொடர்ந்தேன்...  ''ஏதோ ஒரு நியாயமான காரணத்துக்காகவே, ராமகிருஷ்ணனின் மனம் புண்பட வேண்டாம்னு உங்க நிர்வாகம் நினைச்சிருக்கு. அதுதான் இந்த முடிவு. மகிழ்ச்சியைப் பிறரிடம் பகிர்ந்துகொண்டால், அது மேலும் அதிகமாகும்னு சொல்வாங்க. நமது வெற்றியைப் பிறருடன் பகிர்ந்துகொண்டாலும் நம் மகிழ்ச்சி அதிகமாகணும்!'' என்றேன்.

'தாங்க்யூடா'' என்று அவன் சொன்னபோது, அவன் குரலில் இருந்த வருத்தம் காணாமல் போய் இருந்தது.