Tuesday, September 24, 2013

காலை எழுந்தவுடன் காபி... மாலை முழுவதும் டீ!

காலை எழுந்தவுடன் காபி... மாலை முழுவதும் டீ! 

 

காபியின் நல்ல குணங்களைப் பற்றி பார்த்தோம். http://vasukimahal.blogspot.in/2013/09/blog-post_10.html காபிக்கு பல நூற்றாண்டுகள் முந்தைய பரம்பரையைச் சேர்ந்த டீயைப் பற்றி இப்போது பார்ப்போம்.

 

உலகில் மிக அதிகம் பேர் அருந்தும் பானம், டீதான். இதில், பல வகைகள் இருந்தாலும்... மூன்றுதான் முக்கியம். கறுப்பு டீ (Black Tea), பச்சை டீ (Green Tea) மற்றும் வெள்ளை டீ (White Tea). இந்த மூன்றுமே ஒரே செடியில் விளையும் இலைகள்தான். அந்த இலைகளை நாம் என்ன செய்கிறோம் என்பதை வைத்தே டீயின் நிறம் மாறுகிறது. சற்று வெள்ளி நுனிகளையுடைய இளம் இலைகளைப் பறித்து, எவ்வித பதனிடு முறைகளும் இன்றி, வெறுமனே நிழலில் உலர்த்திப் பொடி செய்யும் டீ... வெள்ளை டீ. இதில் கேஃபின் குறைவாகவும், ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மிக அதிகமாகவும் இருக்கும். வெள்ளை டீ என்று பெயர் இருந்தாலும், கொதிக்க வைத்தால், சற்று மஞ்சள் நிற திரவமாகவே இருக்கும். விலை மிக அதிகமான இந்த டீ, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது.

 

பச்சை டீதான் மிகவும் பிரபலமான டீ. முக்கியமாக எங்களைப் போன்ற டாக்டர்கள்தான் இதை மிகவும் விளம்பரப்படுத்த உதவியவர்கள். டீ இலைகளை நீராவியில் கொதிக்க வைத்து, உலர வைத்து, பின்னர் பொடி செய்தால் கிடைப்பது பச்சை டீ.

 

பெரும்பாலானோர் குடிக்கும் டீ, கறுப்பு டீதான். உலர வைத்த இலைகளை நொதித்தல் முறையில் பதனிட்டு பொடி செய்வதே இந்த முறை. இதில்தான் அதிக கேஃபினும் குறைவான ஆன்டி - ஆக்ஸிடன்ட்ஸும் இருக்கும். ஆனாலும், மருத்துவ குணங்களில் இதுவும் சளைத்ததல்ல.

 

 

பொதுவாக டீயில் இருக்கும் கேஃபின் அளவு காபியில் உள்ளதைவிட பாதிதான். ஒரு கப் காபியில் 80 மி.கி கேஃபின் உண்டு. இதுவே ஒரு கப் கறுப்பு டீயில் 40 மி.கி; பச்சை டீயில் 25 மி.கி; வெள்ளை டீயில் 15 மி.கி-தான் (கேஃபினின் நல்ல/கெட்ட குணங்களை நாம் ஏற்கெனவே விவாதித்துவிட்டோம்).

 

டீயின் அற்புத குணங்களுக்கு அதில் உள்ள சில அரிய ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்தான் காரணம். அவற்றில் ஈஜிஸிஜி (EGCG) மிக முக்கியமானது. இந்த ஈஜிஸிஜி-க்கு பல வகை புற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு - குறிப்பாக பெண்களின் மார்பகப் புற்றுநோய் மற்றும் முட்டை - சினைப்பை புற்றுநோய். இவை தவிர வாய், இரைப்பை, குடல், கணையம், ஈரல், நுரையீரல், தோல் போன்ற உறுப்புகளின் புற்றுநோய்களும் இந்த டீக்கு அடங்கும். நுரையீரல் புற்றுநோய் தடுக்கப்படும் என்பது தவிர, சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்காமல் பாதுகாக்கும் என்றும், புற்றுநோய்களுக்குத் தரப்படும் கதிர்வீச்சு சிகிச்சையிலிருந்து பாதுகாப்பு கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஈரல் புற்றுநோயைத் தடுப்பதோடு, மதுவினால் விளையும் ஈரல் பாதிப்புகளையும் டீ கட்டுப்படுத்த வல்லது.

அப்படியானால், மதுவுக்கு அடிமையானவர்களும் சிகரெட் புகைப்பவர்களும் டீ குடிப்பது அவசியம்தானே?

 

ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்க முடியும் என்றும், அதனால் மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு, பக்கவாதம் முதலிய வியாதிகளைத் தடுக்க முடியும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

 

காபியைப் போலவே, முதியவர்களைத் தாக்கும் மூளை - நரம்பு பாதிப்புகளான அல்ஸைமர் வியாதியையும், பார்க்கின்ஸன் வியாதியையும் டீயால் கட்டுப்படுத்த முடியும். 'மெட்டபாலிக் சிண்ட்ரோம்' என்று அழைக்கப்படும் நோய்க்கூட்டு, சர்க்கரை நோயின் முன்னோடி என்று முன்பு குறிப்பிட்டோம். இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் டீக்கு உண்டு. அதனால் சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும் என்பதும் இனிப்பான செய்திதானே? சர்க்கரை நோயினால் கண்ணில் ஏற்படும் புரை நோயும் டீ சாப்பிடுவதால் தடுக்கப்படும் என்பது கூடுதல் தகவல்.

 

டீயால் உடல் பருமனைக் குறைக்க முடியும் என்பது ஒரு முக்கிய செய்தி. குறிப்பாக, உடல் பருமனைக் குறைக்கும் வைத்திய முறைகளில் பச்சை டீக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தினமும் 4 - 6 கப்கள் பச்சை டீ குடித்தால்... உடல் எடை குறையும் என்கிறார்கள்.

 

இவ்வளவு நல்ல குணங்களை உடைய டீக்கு சில கெட்ட குணங்களும் இருக்கும்தானே..?

டீ செடிக்கு, மண்ணிலிருக்கும் ஃபுளூரைட் மற்றும் அலுமினியம் ஆகிய தாதுக்களை உறிஞ்சும் சக்தி மற்ற தாவரங்களைவிட மிக அதிகம். இந்தச் செடியின் பழைய, முற்றிய இலைகளில் ஃபுளூரைட் - அலுமினியம் அதிகம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இவற்றை பருகினால் நம் எலும்புகளில் ஃபுளூரைட் - அலுமினியம் தாதுக்களின் தாக்கம் அதிகமாகி, எலும்புச் சிதைவு நோய் ஏற்படும் ஆபத்து உண்டு. டீ இலைகளைக் கைகளால் பறிக்கும் வழக்கம் உள்ள நம் ஊரில் இந்தப் பிரச்னை வராது. ஏனென்றால், இளம் தளிர் இலைகளையே பெண்கள் பறிப்பது வழக்கம். முற்றிய இலைகளைப் பறிப்பதில்லை. ஆனால், இயந்திரங்களையே பயன்படுத்தும் பெரிய பண்ணைகளில் இது சாத்தியமில்லை. நீங்கள் குடிக்கும் டீ எந்த இலையில் கிடைத்தது என்று எப்படித் தெரியும்?

 

டீ, சில மரபணு மாற்றங்களை உண்டு பண்ண முடியும் என்பதால் கருவில் வளரும் சிசுக்களுக்கு அவ்வளவு நல்லதல்ல. ஆகவே, கர்ப்பிணிப் பெண்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்களுக்கு காபியைவிட, டீ நல்லது என்றாலும், 2 கப் டீக்கு மேல் அருந்த வேண்டாம்.

 

காபியைச் சூடாக சுவைத்தால் நல்லது. ஆனால், டீயை மிகவும் சூடாகச் சுவைத்தால்... உணவுக் குழாயில் புற்றுநோய் வரலாம். ஆகவே, டீயை சற்று ஆறிய பிறகே குடிக்க வேண்டும்.


அதெல்லாம் சரி - நீங்கள் குடிக்கும் டீ உண்மையில் டீதானா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள். அண்மையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாதலங்களில் நடந்த அதிரடி சோதனைகளில், பெரும்பாலான கடைகளில் போலி டீத்தூள் விற்பனையான செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள்தானே? .கே... காபி, டீ இரண்டில் எது நல்லது என்று உலகளவில் பட்டிமன்ற ரீதியில் விவாதித்து வருகிறார்கள். இருதரப்பு வாதங்களையும் உங்கள் முன் வைத்தேன். இப்போது நடுவர்போல் ஒரு தீர்ப்புச் சொல்கிறேன். காபி, டீ இரண்டுமே நல்லதுதான். பொதுவாக ஆண்களுக்கு காபியும்... பெண்களுக்கு டீயும் உகந்தது. காலையில் எழுந்ததும் 2 தடவை காபி அருந்துங்கள். பிறகு மாலை வரை 2 - 4 கப் டீ அருந்துங்கள்!