Tuesday, September 17, 2013

நாம் அறிந்துகொள்ள வேண்டியது எவ்வளவு இருக்கிறது!

ரம் வேண்டித்தான் உலகில் பல மக்கள் தவம் செய்கிறார்கள். எல்லோருக் கும் ஏதேனும் தேவையாக இருக்கிறது. அந்தத் தேவையை தெய்வத்திடம் இருந்து பெறுவதற்காகக் கடுமையாக நோன்பு இருக்கிறார்கள். இன்னது கொடு என்று கேட்டுப் பெறுகிறார்கள். அப்படித் தவம் செய்பவர்களைக் கண்டு, நோன்பு நோற்கிறவர்களைக் கண்டு, அவற்றைச் செய்ய இயலாத மற்றவர்கள் வியப்போடு பார்க்கிறார்கள்; செய்தவர்களைப் போற்றுகிறார்கள்.

''நீ சம்பாதித்த புண்ணியத்தில் கொஞ்சம் கொடு'' என்று கையேந்துகிறார்கள்.

''உனக்குக் கால் பிடித்துவிட்டால் அந்தப் புண்ணியம் எனக்கு வராதா?'' என்று, தவம் செய்தவனுக்குக் கால் பிடித்து விடுகிறார்கள்; விசிறுகிறார்கள்; நீர் கொடுக்கிறார்கள்; அவருக் காகப் படுக்கை சுமக்கிறார்கள்; உணவு சமைத்து வருகிறார்கள்; அவரைப் போற்றிப் பாதுகாக்கிறார்கள். ''என்னால் தவம் செய்ய இயலாது. என்னால் நோன்பு நோற்க இயலாது. ஆனால், நீங்கள் செய்து ஜெயித்திருக்கிறீர்கள். உங்களுக்கு உதவி செய்வதன் மூலம் ஏதோ கடுகளவு, எறும்பளவு சில துணுக்குகள் எனக்கும் கிடைக்கட் டும்'' என்கிறார்கள்.

ஆனால், எந்த வரமும் வேண்டாது, யாராவது தவம் செய்வார்களா? நாரதருக்கு இப்படி ஒரு நினைப்பு சட்டென்று உள்ளுக்குள் தோன்றியது. இருக்கலாம்; செய்வார்கள் என்ற நினைப்பும் இருந்தது. யார் செய்கிறார்கள்? அவர் மனத் தால் சகல பக்கமும் பார்க்க, ஓரிடத்தில் ஒளி தோன்றியது. ஒரு மலையின் ஓரத்தில், நதிக்கரையில், பர்ணசாலை அமைத்து, முனிவர் ஒருவர் தவம் செய்து வருவதைத் தெரிந்துகொண்டார். அவர் ஜைகிஷவ்ய முனிவர். அவருடைய தேஜஸ் மிகப் பிரகாசமாக இருந்தது. அருகே போவதற்குத் தீய சக்திகள் பயந்தன. நல்ல சக்திகளும் பணிவுடன் நெருங்கின. அவருடைய தவம் வெகுநாள் அமைதியாக, எந்த ஆரவாரமும் இன்றி வளர்ந்துகொண்டிருந்தது. தேவர்கள் கவலைப்பட்டார்கள். இவ்வளவு உக்கிரமாக, இத்தனை நெடுநாள் அசையாது தவம் செய்ய முடியும் என்றால், அவரால் தேவலோகப் பதவியையும் கேட்டுப் பெற முடியும். 'நான் இந்திரப் பதவிக்கு வரவேண்டும்' என்று அவர் கேட்டால், நிச்சயம் கிடைக்கும். படைப்புத் தொழிலை பிரம்மா நிறுத்திக் கொள்ளட்டும் என்று ஆணையிட்டால், பிரம்மா நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான். அவ்வளவு தவ வலிமை பெற்றவராக அவர் விளங்குகிறார். எல்லாம் வல்ல சிவபெருமான் மனம் இரங்கி, அவருக்குச் சகல வரங்களையும் கொடுத்துவிட்டால், அதன்பின் இங்கே உள்ள தேவர்கள் எல்லோரும் எந்தவித அர்த்தமும் இல்லாத வாழ்க்கையைத்தான் வாழ வேண்டி யிருக்கும். ஒரு மானுடன் வெகு எளிதில் தேவர் களை ஜெயித்துவிட முடியும் என்பதற்கு உதாரணமாக இந்த முனிவர் இருப்பார். என்ன செய்வது என்று கவலைப்பட்டார்கள். அந்தக் கவலையும் நாரதருக்குத் தெரிந்தது.

எதைக் குறித்து இந்த முனிவர் இவ்வளவு கடுமையான தவம் இருக்கிறார் என்று புரியவில்லை. மனம் ஒருமுகப்பட்டு விட்டது. ஒருமுகப்பட்டு ஒரு புள்ளியில் அமர்ந்த மனம், சிவனை முற்றிலுமாக எடுத்துக் கொண்டு விட்டது. சிவனை அசைக்க முடியாதபடி உள்ளே இறுக்கமாக பதிய வைத்து, அந்த சிவனோடே தான் இருக்கும்படியான ஒரு நிலைமை வந்துவிட்டது.

உள்ளே சிவன் வந்த பிறகு, அவரிடம் ஏதேனும் கேட்கலாம் அல்லவா? தவத்தை முடித்துக்கொள்ளலாம் அல்லவா? எதுவும் கேட்காமல், தொடர்ந்து சிவபூஜை செய்து கொண்டிருக்கிறார் இவர். ஏன்?

நாரதர் அங்கு போய் இறங்கினார். ஆஸ்ரமத்தை வலம் வந்தார். இனிய கீதங்கள் பாடினார். உள்ளுக்குள் நுழைந்தார். விழுந்து வணங்கினார். ''உட்காரட்டுமா?'' என்று அனுமதி கேட்டார். முனிவர் ஜாடை காட்ட, எதிரே உள்ள திண்ணையில் அமர்ந்தார். ஒருவரை ஒருவர் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டார்கள். சிவ முனியின் ஒளி நாரதரை நடுங்க வைத்தது. அவருடைய பார்வையின் கனிமை அவரில் நாராயணரைக் காட்டியது. எத்தனை பாடினாலும், இந்த அழகான ஒரு தெய்வீக நிலை தனக்கு வருமா என்பது சந்தே கமே என்று எண்ணி, நாரதர் மனம் நொந்தார்.

''எவ்வளவு கடுமையாக தவம் செய்கிறீர்கள்! மனத்துக்குள் உறுதியாக சிவனைப் பிடித்த பிறகும் வேறு எதுவும் கேட்காமல், அமைதி யாக சிவனோடேயே இருக்கிறீர்கள். உள்ளுக் குள்ளேயே போற்றிப் பாதுகாத்து வருகிறீர்கள். ஏன் அவரை உங்கள் எதிரே தோன்றச் செய்யாமல், உள்ளுக்குள்ளேயே இரு என்று கட்டளையிட்டிருக்கிறீர்கள்?'' என்று நாரதர் கேட்க, முனிவர் சிரித்தார்.

''உங்களுக்கும் பயம் வந்துவிட்டதா? தேவர்களும் பிரம்மாவும் என்னைப் பற்றிக் கவலை கொள்கிறார்கள் என்று தெரிய வந்ததும் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. எனக்கு எதற்கு இந்திர பதவி? எனக்கு எதற்கு படைப்புத் தொழில்? எனக்கு எதற்கு வேறு பதவியும் உலகமும்? நான் இருக்கிற இடத்தில், சிவனோடு இருக்கிறேன். இதைவிட உயர்ந்த நிலை உண்டா? நான் எது குறித்தும் தவம் செய்யவில்லை. இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்கவில்லை. என் இயல்பு தவம் செய்தல். என் இயல்பு சிவனோடு இருத்தல். இதை நான் சாதாரணமாகத்தான் செய்கிறேன். வேறு நோக்கம் எதுவும் இல்லை, நாரதரே!'' என்று முனிவர் சொல்ல, நாரதர் நிம்மதியானார். மறுபடியும் பாடல்கள் பாடி அவரை மகிழ்வித்துவிட்டு, ஆஸ்ரமத்தை வலம் வந்து, நீண்ட நெடுஞ்சாண்கிடையாக வணங்கி, சிவன் உறையும் இமயமலைச் சாரலுக்குப் போனார்.

கயிலாசநாதரை வணங்கினார். ''எவ்வளவு அற்புதமான மனிதர்! உங்களை வணங்குவது இயல்பு என்கிறார். உங்களிடம் எதுவும் கேட்காது அமைதியாக உங்களையே மனத்துக்குள் ஸ்வீகரித்துக்கொண்டிருப்பது இயல்பு என்கிறார். இப்படிப்பட்டவருக்கு நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டாமா?'' என்று சிவபெருமானைக் கேட்க, ''கேட்டால் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். என்ன கேட்பார் என்று அறிய ஆவலாக இருக்கிறோம். ஆனால், அவர் எதுவும் கேட்கவில்லையே? நாமாகப் போய் அவரைத் தொந்தரவு செய்யலாகாது என்பதில் திடமாக இருக்கிறோம்'' என்றார் சிவனார்.

''ஆனாலும், அவரது இந்தக் கடும் தவத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், எம்பெருமானே! வேறு ஏதேனும் விபரீதமாக நடந்துவிடக்கூடாது என்று தேவர்கள் கவலைப்படுகிறார்கள். எனவே, அந்த முனிவருக்குத் தரிசனம் தந்து, அவரை உங்களுக்குள் அழைத்துக் கொள்ளுங்கள்'' என்று நாரதர் வேண்ட, அதன்படியே சிவபெருமான் அந்த முனிவர் முன் திருக் காட்சி தந்து, அவரை ஆசிர்வதித்து, தன்னோடு வருமாறு கைநீட்ட, சிவனாரின் கையைப் பற்றிக் கயிலைக்கு வந்தார் முனிவர். தேவர்கள் நிம்மதியானார்கள்.

''நாராயணா... நான் அறிந்துகொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவு இருக்கிறது!

இது வேண்டும், அது வேண்டும் என்று கோரிக்கையோடு தவம் செய்யும் மனிதருக்கிடையே, 'எதுவும் வேண்டாம், இது என் இயல்பு' என்று சொல்கிற ஒரு மனிதரிடம் என்னைப் பாட வைத்தீரே! இப்படியும் ஒரு தவம் இருக்கும் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். நாராயணா... நான் அறிந்துகொள்ள வேண்டியது எவ்வளவு இருக்கிறது!'' என்று கை கூப்பி, கண்ணீர் துளிர்க்க நாராயணரை வணங்கினார் நாரதர்.

எல்லாம் அறிந்த நாரதரே இன்னும் அறிய வேண்டியது இருக்கிறது என்று எண்ணும்போது, நாரதருடைய அவையடக்கமும் மேன்மையான குணமும் நமக்குத் தெளிவாகப் புரிகிறது.

அறிந்துகொள்ளுதல் என்பதற்கு முடிவே இல்லை. மனிதர்களைவிடப் பன்மடங்கு மேம்பட்ட தேவர்களுக்கும் இது பொருந்தும். தேவர்களே தேடலில் இருப்பாரெனில், மனிதனின் கடமையும் அதுவே ஆகிறது.


- எழுத்துச் சித்தர் பால குமாரன்