Tuesday, September 3, 2013

குறிக்கோளிலே தெளிவா இருந்தாலும் மனசு அலைபாயுதே!

ரு விடுமுறை தினத்தன்று நண்பனின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவன், சென்ற வாரம்தான் வெளியாகியிருந்த தமிழ்த் திரைப்படம் ஒன்றைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். என் முகத்தில் தோன்றிய அதிருப்தியை அவன் உணர்ந்துகொண்டான். 'என்ன, திருட்டு சி.டி. பார்க்கிறேன்னு கோபமா? என்னாலே உன்னை மாதிரி இருக்கமுடியாது. நான் மெஜாரிட்டியைச் சேர்ந்தவன்!'' என்றான்.  

அப்போதும் நான் மௌனமாக இருந்ததைக் கண்டு, 'ஓகே! இனிமேல் ஒரிஜினல் சி.டி-க்களை மட்டும்தான் பார்ப்பேன்'' என்றான்.

'இரண்டு விதங்களில் எனக்கு எரிச்சல் கொடுத் திருக்கிறாய். அதில் ஒன்றைத் தான் சரி செய்திருக்கிறாய்!'' என்றேன் நான்.

நண்பன் கொஞ்ச நேரத்துக்கு மூளையைக் குடைந்துகொண்டது தெரிந்தது. பிறகு பரிதாபமாக, 'அந்த இன்னொரு கொலைபாதகம் என்னன்றதைச் சொல்லிட்டு உன் நெற்றிக்கண்ணைத் திற. சஸ்பென்ஸ் தாங்கல!'' என்றான்.  

'உன் டிபார்ட்மென்ட் தேர்வு'' என்றேன். அந்த இரண்டே வார்த்தைகளில், நான் சொல்ல வந்ததைப் புரிந்துகொண்டான்.

நண்பன் மிகவும் புத்திசாலி. திறமைசாலி. இந்நேரம் மேலும் பல பதவி உயர்வுகள் அவனுக்குக் கிடைத்திருக்கவேண்டும். தடைக்கல்லாக இருந்தது அந்த டிபார்ட்மென்ட் தேர்வு. பலமுறை நண்பன் சபதம் எடுத்துவிட்டான்... 'இந்த தடவை முழு உழைப்பையும் செலுத்தி எப்படியும் அந்தத் தேர்வுகளை எழுதிடுவேன்'' என்று. ஆனால், சரியாக தேர்வுக்குத் தயாராகவில்லை என்று காரணம் கூறி, ஒவ்வொரு முறையும் அந்தத் தேர்வுகளை (அதனால் பதவி உயர்வையும்) தவறவிட்டுக்கொண்டிருந்தான்.

அதேநேரம், அலுவலகத்தில் மிக உயர்ந்த பதவிகளை அடைவதுதான் தன் குறிக்கோள் என்றும் அவ்வப்போது கூறிக்கொள்வான்.

'அடுத்த மாதம் உன் டிபார்ட்மென்ட் தேர்வு நெருங்குகிறது. விடுமுறை நாட்களில்தான் அதிக முயற்சி எடுத்து படிக்க முடியும். உன் படிப்புக்கு நான் தொந்தரவாக இருப்பேனோன்னு தயங்கிக்கிட்டே வந்தால், நீ அதைப் பற்றிக் கவலையே இல்லாமல் சினிமா பார்த்துட்டிருக்கே..!'' என்றேன்.

சங்கடமாகச் சிரித்தான் நண்பன். 'தேர்வைச் சிறப்பா எழுதணும், உயர்ந்த பதவியிலே உட்காரணும் என்ற குறிக்கோளிலே நான் தெளிவா இருக்கேன். இருந்தாலும், அப்பப்போ மனசு வேற எதிலேயாவது அலைபாயுதே!'' என்றான்.

'அப்படியானால் நீ கடோத்கஜனாகத்தான் மாறணும்'' என்றேன்.

'யாரு... பீமனுடைய பிள்ளை கடோத்கஜனா? சாப்பாட்டை வெளுத்துக்கட்டணுமா? அல்லது, ஜிம்முக்குப் போய் உடம்பைத்​ தேத்திக்கிட்டு மிஸ்டர் இந்தியா ஆகணுமா?'' என்று கேட்டான் நண்பன்.

அப்படியானால், கடோத்கஜனின் மறுபக்கத்தை அவன் உணரவில்லை. அதைக் கூறத் தொடங்கினேன்.     

ரக்கு மாளிகையிலிருந்து தப்பித்து, சுரங்கப் பாதை வழியாக வெளியேறினர் பாண்டவர்கள். ஒரு காட்டில், மரத்தடியில் தாய் குந்தியும் சகோதரர்களும் உறங்க, பீமன் அவர்களுக்குக் காவல் இருந்தான்.  

அப்போது, அந்தப் பகுதியில் வசித்து வந்த பெரிய அரக்கனான இடும்பன், அவர்களை உணவாகக் கொள்ள ஆசைப்பட்டு, தங்கை இடும்பியை அனுப்பினான். ஆனால், இடும்பியோ பீமனைக் கண்டதும் காதல் கொண்டுவிட்டாள். பீமனை அணுகி, தன் விருப்பத்தைச் சொல்ல, அவன் மறுத்தான். பின்பு, குந்திதேவியிடம் தன் மனத்தை இடும்பி உருக்கமாக வெளிப்படுத்த, குந்தியின் மனம் கசிந்தது.

'நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்குக் குழந்தை பிறந்தவுடன், பீமன் உங்களைப் பிரிந்து விடுவான். இப்போதைக்குப் பகலில் நீ பீமனுடன் ஆனந்தமாய் இரு. இரவில் அவன் எங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பான்'' என்றாள் குந்தி. இடும்பியும் ஒப்புக்கொண்டு பீமனுடன் மணவாழ்வு வாழ, அவர்களுக்கு கடோத்கஜன் என்ற பெயரில் ஒரு குழந்தை பிறந்தது.  

தாய் வழி அரக்க குலம் என்பதால், சில மாயா சக்திகள் கடோத்கஜனுக்கு  இயல்பாகவே இருந்தன. பறக்கும் திறமையும், தன் உடலைப் பெரிதாக்கிக் கொள்ளும் திறமையும் அவற்றில் சில. மிகவும் நேர்மையானவனாகவும், எளிமையானவனாகவும் கடோத்கஜன் வளர்ந்தான். தந்தையைப் போலவே கதை பயிற்சியில் சிறந்து விளங்கினான்.

காலப்போக்கில் மகாபாரதப் போர் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாண்டவர்கள் தரப்பில் போர் புரிய, மகன் இடும்பனின் உதவியைக் கோரினார் பீமன். போர்க்களத்துக்கு வந்த கடோத்கஜன் நூற்றுக்கணக்கான கௌரவத் தரப்பு வீரர்களைக் கொன்று குவித்தான்.

துரியோதனனுக்கு கிலி ஏற்பட்டது. தோழன் கர்ணனை அழைத்து, 'எப்படியாவது கடோத்கஜனைக் கொன்றுவிடு. இல்லையென்றால், நமது ஒட்டுமொத்த சேனையையும் அவன் அழித்துவிடுவான்'' என்றான்.

அதுமட்டுமல்ல; 'உன்னிடமுள்ள இந்திராஸ்திரத்தை பயன்படுத்தி கடோத்கஜனைக் கொன்றுவிடு'' என்றும் அவன் கூற, கர்ணனுக்குப் பெரும் சங்கடம் ஏற்பட்டது.

அந்த தெய்வீக ஆயுதத்தை ஒருமுறைதான் பயன்படுத்தமுடியும் என்பதால், தன் கடும் எதிரியான அர்ஜுனனைக் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான் கர்ணன். ஆனால், துரியோதனனின் நட்பும், செஞ்சோற்றுக் கடனும் அவனைத் தயங்கவைத்தன.

பின்னர், துரியோதனின் ஆணைப்படி இந்திராஸ்திரத்தை கடோத்கஜன் மீது ஏவினான். மாயக் கண்ணனுக்கு இது ஒருவிதத்தில் வருத்தத்தை உண்டு பண்ணினாலும், மறுபுறத்தில் மகிழ்ச்சியைத் தந்தது. இனி, அர்ஜுனனைக் கொல்வதற்கு கர்ணனிடம் வேறு எந்த தெய்வீக அஸ்திரமும் இல்லை என்பதுதான் அதற்குக் காரணம்.

இந்திராஸ்திரத்தினால் தாக்கப்பட்டு இறக்கும் தறுவாயிலும், தன் தந்தையின் தரப்புக்கு மாபெரும் உதவி செய்தான் கடோத்கஜன். தன் உருவத்தை மிக பிரமாண்டமானதாக ஆக்கிக்கொண்டு, கீழே விழுந்தான். அப்படி விழும்போது அவன் உடம்பின்கீழ் மாட்டிக்கொண்டு ​நூற்றுக்கணக்கான கௌரவ வீரர்கள் நசுங்கி இறந்தனர்.

'கடோத்கஜன் தன் குறிக்கோளில் எவ்வளவு தெளிவாக இருந்திருக்கிறான், புரிகிறதா? தன் அப்பாவின் தரப்பு ஜெயிக்க  வேண்டும்; அதற்கு கௌரவ சேனையை முடிந்த அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும். இந்தக் குறிக்கோளை மனத்தில் கொண்டு அவன் கௌரவ வீரர்களைக் கொன்றதுகூட பெரிதில்லை. தான் இறக்கப் போகிறோம் என்பதை உணர்ந்த அந்தக் கடைசி நிமிடத்தில்கூடக் கதறாமல், பதறாமல், தன் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் இந்த இறுதிக் கட்டத்தில் என்ன செய்யலாம் என்று நினைத்துச் செயல்பட்டானே... அதுதான் அவன் சிறப்பு!'' என்றேன் நான்.

'புரியுது. நானும் கடோத்கஜனா மாறிடறேன். இன்னியிலிருந்து முழு முயற்சியோடு தேர்வுக்குத் தயார் செய்கிறேன்'' என்றான் நண்பன்.  

இது, இதைத்தானே நான் எதிர்பார்த்தேன்