Tuesday, October 15, 2013

விபத்து தவிர்க்கும் வழிகள்

நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அலுவலகம் போன அப்பாவோ, கல்லூரிக்குப் போன அண்ணனோ, குறித்த நேரத்தில் வீடு திரும்பாதபோது, அவரது மொபைல் போனைத் தொடர்பு கொண்டால், 'தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்' என்று வந்தால், மனசு எவ்வளவு பதறித் துடிக்கும்.  

டியூஷனுக்கு சைக்கிளில் சென்ற அக்கா, தங்கை, தம்பி வீடு திரும்பத் தாமதம் ஆகிறது. நடைப்பயிற்சிக்குச் சென்ற அப்பா, அம்மா வீடு திரும்ப வழக்கத்தைவிட வெகுநேரம் ஆகிறது.

இந்த மாதிரியான சூழ்நிலைகளில், நமக்குத் தோன்றும் முதல் எண்ணமே... 'எங்காவது வழியில் ஆக்ஸிடென்ட் ஆகியிருக்குமோ?' என்பதுதான். பதற்றமும் படபடப்பும் நம்மைத் தொற்றிக்கொள்ளும். விடாமல் அவர்களை, தொலைபேசியில் தொடர்புகொண்டே இருப்போம். சாலைப் போக்குவரத்து நமக்குப் பாதுகாப்பானதாக இல்லை என்பது கசப்பான உண்மை.

''விபத்துகள் பற்றிய போதிய விழிப்பு உணர்வு நம்மிடம் இல்லை. விபத்துக்களைத் தடுப்பதற்கான முறைகளைத் தெரிந்துகொள்வதன் மூலம், நம் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது' 

'மாரடைப்பு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்களைப் பற்றித்தான் நாம் அதிகம் கவலைப்படுகிறோம். அதைவிட முக்கியமான, நாள்தோறும் யாருக்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் ஏற்படக்கூடிய விபத்து பற்றிய கவலை, விழிப்பு உணர்வு இன்றி இருக்கிறோம்.

உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் கூட்டிய உலக பாதுகாப்பு மாநாட்டு (World Safety Conference) ஆய்வு அறிக்கையில், உலகில் மரணம் ஏற்படுத்தக்கூடிய நோய் மற்றும் காரணங்களில் சாலை விபத்து மரணமானது 2030 ஆண்டுவாக்கில் ஐந்தாவது இடத்தை எட்டும் எனவும், 'கொள்ளை நோய்' (Epidemic) என்ற நிலைப்பாட்டை அடையும் என்றும், மேலும், வளரும் நாடுகளில் 90 சதவிகிதம் பாதிப்பு இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

விபத்து நடப்பதற்கு, சூழ்நிலை மட்டுமே காரணம் இல்லை. மனம் மற்றும் உடல்நிலைதான் முக்கிய காரணம். பெரும்பாலான விபத்துக்கு அதிவேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாதது, கவனச்சிதறல் ஆகியவையே மிக முக்கிய காரணங்கள்.

செல்போனும் விபத்தும்

இந்தியாவில் ஆண்டுக்கு 1.42 லட்சம் பேர் விபத்தில் உயிர் இழக்கின்றனர். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைகின்றனர். இதில் அதிக அளவில் விபத்து ஏற்படுவதற்கு வாகனம் ஓட்டும் நேரத்தில் ஏற்படும் கவனச்சிதறலே முக்கிய காரணம். கவனச் சிதறல் ஏற்படுத்தும் காரணிகளில் முதல் இடத்தில் செல்போன் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அரக்கோணம் அருகே ரயில் விபத்து ஏற்பட அதன் டிரைவர் செல்போன் பயன்படுத்தியதுதான் முக்கிய காரணம்.

வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவது (ஹேண்ட்ஸ் ஃப்ரீ போட்டிருந்தாலும்) அல்லது எஸ்.எம்.எஸ். டைப் செய்வது போன்றவை கவனத்தைத் திசைதிருப்புகின்றன.

 கவனச்சிதறல் ஏற்படுத்தி விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை 23 மடங்கு அதிகரிக்கிறது செல்போன்.

 எஸ்.எம்.எஸ். வரும்போது அது என்ன என்று அறியும் ஆர்வம் ஐந்து நொடிகளுக்கு, கவனத்தை திசைதிருப்புகிறது. விபத்து ஏற்பட இந்த இடைவெளி போதுமானது.

  செல்போனில் இருந்து வரும் செய்திகள், நம் மனதை பல்வேறு நிலைக்கு மாற்றிவிடக்கூடியவை. சந்தோஷச் செய்தியோ, துக்கமான விஷயமோ எதுவானாலும், நம் மனதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குச் சில நொடிகள் முதல் பல மணி நேரங்கள் பிடிக்கும்.  வீடு, அலுவலகம் தவிர மற்ற பொது இடங்களில் செல்போன் பேசியபடி போவதைத் தவிர்த்துவிடுங்கள். இது உங்களுக்கும், மற்றவர்களுக்கும் காயமோ, உயிர் இழப்போ ஏற்படுவதைத் தவிர்க்கும்.

தேவை எச்சரிக்கை உணர்வு

விபத்தில் பெரும்பாலும் ஆண்கள்தான் சிக்குகிறார்கள். பெண்களுக்கு எப்போதுமே பொறுப்பு உணர்வும், எச்சரிக்கை உணர்வும் உண்டு. எதையும் நிதானமாகக் கையாளக் கூடியவர்கள். ஆண்களுக்கு, எப்போதுமே எதிலும் அவசரம். நான்தான் முன்செல்ல வேண்டும் என்ற வேக உணர்வால் ஆக்சிலேட்டரை வேகமாக முறுக்கி முன்னே சென்று விபத்தில் சிக்குகின்றனர்.

பாதுகாப்பு அவசியம்

இன்று விபத்துக்கு உள்ளாகி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தலை காயத்துடன்தான் வருகின்றனர். இருசக்கர வாகனம் ஓட்டிகள், ஹெல்மெட் அணிவதன்மூலம் தலையில் காயம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

பயணத்தின்போது, யார் இடதுபுறம், யார் வலதுபுறம் செல்வது என்பதில் கவனம் தேவை.

 நான்கு சக்கரவாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்ல, பயணிப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட்  அணிய வேண்டும். இதன்மூலம், விபத்து ஏற்படும்போது, அதன் தாக்கம் 40 சதவிகித அளவுக்குக் குறைய வாய்ப்பு உள்ளது.

 அடிக்கடி ஆக்ஸிலேட்டரை அதிகப்படுத்தியபடியே பிரேக்கைப் பிடிக்கக்கூடாது. இதனால் வண்டி ஒரு பக்கமாக விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைத் தவிர்க்கலாம்.  

 வளைவுகளில்தான் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கின்றன.  எனவே, நிதானம் தேவை.  

கவனம் தேவை

வண்டியை எடுக்கும்போது, ஸ்டாண்ட் முழுமையாக எடுக்கப்பட்டிருக்கிறதா, பிரேக், லைட் சரியாக இருக்கிறதா என்று கவனிக்கவேண்டியது அவசியம்.  

 உடல் நலக் குறைவு இருக்கும்போது வண்டியை ஓட்டாமல் இருப்பதே நல்லது.

 சிலர், வீட்டிலேயோ, அலுவலகத்திலேயோ ஏற்படும் பிரச்னைகளுடன் கோபமாக வாகனத்தை ஓட்டுவார்கள். இந்த நேரத்தில் அவர்கள் உடலில் 'அட்ரினல் ஹார்மோன்' அதிகமாகச் சுரக்கும். இதனால் படபடப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படலாம். மனக் குழப்பத்துடன் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.

வண்டியை ஓட்டும்போது, பின்னால் உட்கார்ந்து இருக்கும் நண்பர்களுடன் பேசியபடியே வண்டி ஓட்டுவதும் விபத்துக்களுக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது. சொல்லப்போனால், வாயில் பிளாஸ்திரி அணிந்து ஓட்டுவதுகூட, சேஃப்டிதான்' என்கிறார் டாக்டர் திருப்பதி.

  விபத்துத் துளிகள்:

 உலக மோட்டார் வாகனங்களில் மொத்த எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு ஒரு சதவிகிதம்தான். ஆனால்,  உலகில் ஏற்படக்கூடிய சாலை விபத்துகளில் ஆறு சதவிகிதம் இந்தியாவில்தான் ஏற்படுகிறது.

 உலகில் நிகழும் 10 சாலை விபத்து மரணங்களில், ஒன்று இந்தியாவில் ஏற்படுகிறது. அதாவது, ஒரு மணி நேரத்துக்கு சுமார் 14 பேர் மரணம் அடைகிறார்கள்.

ஒவ்வொரு 1.9 நிமிடத்துக்கும், ஒரு சாலை விபத்து மரணம் நடக்கிறது.

15 முதல் 30 வயதுக்கு உட்பட்டோர்தான் விபத்துகளுக்கு உள்ளாகிறார்கள்.

 விபத்தைத் தவிர்ப்போம்

வாகனம் ஓட்டும்போது எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை அவ்வப்போது ஸ்பீடாமீட்டரைப் பார்த்து கண்காணிக்க வேண்டும். உங்களுக்கான வேகம் எவ்வளவு என்பதில் தெளிவாக இருங்கள். இதனால், அதிவேகத்தில் செல்வதைத் தவிர்க்கலாம்.

 வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் அல்லது ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்த வேண்டாம்.

சாலை விபத்து பற்றிய விழிப்பு உணர்வு குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுத்தப்பட வேண்டும்.

மோட்டார் சைக்கிள் ரேஸ் போன்ற வீடியோ, கம்ப்யூட்டர் விளையாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும். இது குழந்தைகள் மனதில் வேகமாக வண்டி ஓட்டும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பிட்ட கால இடைவெளியில் பார்வைத் திறனைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

நன்கு ஓய்வு எடுத்தபின்பு, ஆரோக்கியமான நிலையில் வாகனம் ஓட்டுங்கள். தூக்கத்தைத் தரும் மாத்திரை மருந்துகளை உட்கொண்டுவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்.

நீண்ட பயணத்தின்போது, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை 15 நிமிடங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும்.

 வாகனம் ஓட்டும்போது தூக்கம் வந்தால், பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி ஓய்வெடுங்கள். அல்லது காபி போன்ற தூக்கத்தை விரட்டும் பானங்கள் அருந்தலாம்.

அதிகாலை 2 முதல் 6 மணி வரை மிகுந்த கவனத்துடன் வாகனம் ஓட்டுங்கள்.

மதிய உணவுக்குப் பிறகு 2 முதல் 4 மணி வரையில் வாகனம் ஓட்டும்போதும் கவனம் தேவை.

 சட்டத்தின் பார்வையில்...

 டிரைவிங் லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். ரூ.500 அல்லது மூன்று மாதங்கள் சிறை அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.  

வாகனக் காப்பீடு இன்றி வாகனம் ஓட்டினால், ரூ.1000 அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை கிடைக்கும்.

சிறுவர்கள் மோட்டார் வாகனம் ஓட்டினால், ரூ.500 அல்லது மூன்று மாதம் சிறை அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.

ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் ரூ.100 அபராதம்.

 வேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்.

 மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், ரூ.2,000 அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

 மது அருந்திவிட்டு விபத்து ஏற்படுத்தினால், காப்பீடு பலன் எதுவும் கிடைக்காது.

 வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால், ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்.