Tuesday, October 29, 2013

தீபாவளி திருக்கதை - ஸ்ரீராமனும் தீபாவளியும்!

ஸ்ரீராமனும் தீபாவளியும்!
14 வருடங்களாக பரதன் ஸ்ரீராமனை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஸ்ரீராமன் வருவதாகக் குறிப்பிட்டிருந்த நாளும் வந்துவிட்டது. ஆனால் ஸ்ரீராமனோ வந்தபாடில்லை. 'இனி யோசனைக்கு இடமில்லை. என் சங்கல்பத்தை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டது' என்று எண்ணியவன், முக்கியஸ்தர்களையும் ராஜப் பிரதானிகளையும் அழைத்து ''எனது சங்கல்பப்படி இன்று அக்னிப்பிரவேசம் செய்யப் போகிறேன்'' என்று அறிவித்தான்; 'ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்' என்று சத்ருக்னனை வற்புறுத்திப் பணித்தான். அக்னி குண்டமும் வளர்க்கப்பட்டது.
அவன் அக்னியை வலம் வந்து முடிக்கும் தறுவாயில் ஒரு குரல், 'வந்துவிட்டான் ராமன்...'  என்று! ஆமாம், அனுமன்தான் விரைந்து வந்து ஸ்ரீராமனின் வருகையை அறிவிக்கிறான். அப்போது பரதனின் நிலை எப்படி இருந்ததாம்?
வேதியர் தமைத்தொழும் வேந்த ரைத்தொழும்
தாதியர் தமைத் தொழும் தன்னை யே தொழும்
ஏதும் ஒன்று அறிகிலான் இருக்கும் நிற்குமால்
காதல்என் றீதுமோர் கள்ளின் தோற்றிற்றே! என்கிறார் கம்பர்.
ஆமாம்! ஆனந்தப் பெருக்கில் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று அறியாதவனாக, எல்லோரையும் வணங்கி தன்னையும் வணங்கி நிற்கும் பரதனின் நிலை இப்படி என்றால், அயோத்தி மக்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்! பெரிதும் மகிழ்ந்தனர். சீதாவுடன் ஸ்ரீராமனும் வந்துசேர்ந்தார். ''இத்தனை நாட்கள் நீங்கள் இல்லாமல் இருளோ என்றிருந்த அயோத்தி இனி ஒளி பெற, விளக்கேற்றி வை, சீதா!'' என்று கோசலை பணிக்க, சீதா தீப ஒளி ஏற்றினாள். அயோத்தி மக்களும் இல்லங்கள்தோறும் தீபங்களை ஏற்றி வைத்துக் கொண்டாடினார்கள்.தீபாவளிக்கான காரணக் கதைகளில் இதுவும் ஒன்று என்பர்.