Tuesday, October 29, 2013

தீபாவளி திருக்கதை - காசியும் வியாசரும்!

காசியும் வியாசரும்!
காசிக்குச் சென்றால் கர்ம வினைகள் தொலையும் என்பது நம்பிக்கை. 'இது எவ்வளவு தூரம் உண்மை?' என்று சோதிக்க நினைத்தார் வியாசர். அதற்காக சீடர்களுடன் காசிக்குப் புறப்பட்டார். ஆனால், அங்கு
அவர்களுக்கு ஒரு வாரமாக உணவு கிடைக்கவில்லை. ஒருநாள் ஓர் இல்லத்தின் முன் நின்று குரல்கொடுத்தார் வியாசர். வெகுநேரமாகியும் கதவு திறக்கப் படவில்லை. பொறுமை இழந்த வியாசர், காசி மக்களைச் சபிக்க முற்பட்டார். அப்போது இல்லத்தின் கதவு திறந்தது. வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்ட பெண்மணி, ''நிறுத்துங்கள்'' என்றாள். சாபமிடுவதற்காகத் தூக்கிய வியாசரின் கை
அப்படியே நின்றுவிட்டது. பின்னர், அந்தப் பெண்மணி வியாசரைப் பார்த்துப் புன்னகைத்ததும்தான் அவரால் கையைக் கீழே இறக்க முடிந்தது.
வியாசர் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, அவர்களை உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்து எல்லோருக்கும் இலை போட்டாள் அந்தப் பெண்மணி. பின்னர், ''எல்லோரும் சாப்பிடுங்கள்'' என்றாள். வியாசர் திகைத்தார். ''இலையில் எதையும் பரிமாறவில்லையே!'' என்று கேட்டார். தொடர்ந்து ஏதோ சொல்ல அவர் வாயைத் திறப்பதற்குள், இலை முழுதும் விதவிதமான உணவு வகைகள் நிறைந்திருந்தன. வியப்பு மேலிட அனைவரும் சாப்பாட்டை முடித்துக்கொண்டு நிமிர்ந்தால், சாக்ஷ£த் அன்னபூரணியே காட்சியளித்து மறைந்தாள்.
இந்தத் திருவிளையாடல் எதற்காக எனும் கேள்வி வியாசரை துளைத்தெடுத்தது. இதற்கான பதிலை சிவனாரைத் தரிசித்து கேட்டார் வியாசர். ''உங்களில் எவருமே சிரத்தையாக காசிக்கு வரவில்லை. இந்த ஊரைச் சோதிக்க வந்தீர்கள். அதனால் ஏற்பட்டதுதான் இந்த ஒரு வாரப் பட்டினி'' என்றார் சிவபெருமான். உண்மைதான்! நோக்கங்கள் உயர்வாக இருந்தால்தான், அனுபவமும் முறையாக இருக்கும்.