Thursday, October 3, 2013

நல்லவர்களை நல்லவர்களுக்கு மணம் முடிக்க...... - பாலகுமாரன்

காந்திப்பட்டினம் என்ற ஊரில், சம்புகண்டன் என்ற அரசர் சிறப்பாக ஆண்டு வந்தார். அவருக்குக் குணசுந்தரி என்று ஒரு மகள் இருந்தாள். பெயருக்கேற்ப மிக உன்னதமான குணங்களை உடையவள்; நல்ல அழகி.

பருவ வயது வந்ததும் அவளுக்குத் திருமணம் என அறிவித்தார் அரசர். எல்லா அரசர்களும் சுயம்வரத்தில் வந்து கலந்துகொள்ளும்படி வேண்டினார். அரசர்கள் வர மறுத்தார்கள். காரணம் கேட்டதற்கு...

''நீங்கள் அயோத்தியில் இருக்கிற ஸ்ரீராமருக்கும் அனுப்புவீர்கள். ஸ்ரீராமரும் வந்து சேருவார். ராமருடன் அவருடைய குழந்தைகளும் வருவார்கள். முன்னே ஒரு முறை, அவரின் குழந்தைகளால் ஒரு சச்சரவு ஏற்பட்டுவிட்டது. அதேபோல, மறுபடியும் நடக்கும். எனவே, ஸ்ரீராமர் வராது போனால், நாங்கள் வருகிறோம். ஸ்ரீராமரை நீங்கள் அழைத்தால் நாங்கள் வரமாட்டோம்!'' என்று தீர்மானமாகச் சொன்னார்கள்.

சம்புகண்டன் யோசித்தார். பின்பு, 'சரி' என்றார். ஸ்ரீராமரைத் தவிர, மற்ற எல்லா அரசர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அரசர்கள் வந்து கலந்துகொண்டார்கள். மிகப் பெரிய சேனைகள் காந்திப்பட்டினத்தைச் சூழ்ந்துகொண்டன. வான் வழியாகப் போய்க் கொண்டிருந்த நாரதர், சேனைகள் இருப்பதைப் பார்த்து பூமியில் இறங்கினார். நடந்து வந்தார். அரண்மனைக்குள் நுழைந்து 'என்ன நடக்கிறது இங்கே?' என்று கேட்டார். 'திருமணம்' என்று சொன்னார்கள். 'யாருக்கு?' என்று விசாரித்தார். 'அரசருடைய மகளுக்கு' என்று சொன்னார்கள்.

அரசருடைய மகளைப் பார்க்க அந்தப்புரம் வந்தார். நாரதரைத் தடுக்க, அங்கு ஆட்களே இல்லை. யாருக்கும் நாரதர் வருகை தெரியவில்லை. நாரதர், குணசுந்தரியின் அருகில் போய் நின்று ஆசிர்வதித்தார். குணசுந்தரி அவரது வருகையைத் தெரிந்துகொண்டு, திடுக்கிட்டாள். சட்டென அவரது கால்களில் விழுந்து வணங்கினாள்.

''மிக்க சந்தோஷம்! யாரிடம், எப்படிச் சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்தேன். உங்களைப் பார்த்ததில் சந்தோஷம். நான் மனக்கிலேசத்தில் இருக்கிறேன். இங்கு வந்துள்ள அரசர்களைப் பார்க்கப் பார்க்க, அந்தக் கிலேசம் அதிகமாகிறது. தயவுசெய்து எனக்கு உதவி செய்ய வேண்டும்'' என்று மறுபடியும் மண்டியிட்டாள்.

''சொல்லம்மா! நீ நல்ல பெண்; குணவதி. உனக்கு என்ன குறை, சொல்?'' என்று வாஞ்சையோடு கேட்டார் நாரதர்.

நல்லவருக்கு உதவி செய்ய நாரதருக்கு எப்போதும் பிடிக்கும்.

''இந்த அரசர்களையெல்லாம் பார்க்கும் போது எனக்கு பயமாக இருக்கிறது. அவர்கள் வீரத்தைக் கேட்கும்போது குலை நடுங்குகிறது. உத்தமமான புருஷன் என்பவர் ஸ்ரீராமபிரான்தானே! அப்படியரு உத்தமமான புருஷன் இருக்கிற ஒரு வீட்டில்தான் நான் குடியேறவேண்டும். ஒரு நல்ல குடும்பத்தில்தான் நான் வாழ்க்கைப்பட வேண்டும் ஸ்ரீராமருக்கு மருமகளாகப் போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது மிக நல்ல குடும்பம்.

சீதை என்கிற உயர்ந்த பெண்மணியும், மற்ற நல்ல அரசிகளும் இருக்கிற குடும்பம் அது. பரதனும் சத்ருக்னனும் லட்சுமணனும் அங்கு இருக்க... அவர்கள் வீர தீரச் செயல்களைக் கேட்டுக்கொண்டு, அவர்களைப் பார்த்து வியந்தபடி, அவர்களுக்குப் பணிவிடை செய்ய விரும்புகிறேன். அந்தக் குடும்பத்தில் நானும் ஒருத்தியாய்ப் போய் சேரக்கூடாதா? அவர்களின் மருமகளாக ஆகக் கூடாதா?'' என்று கெஞ்சினாள்.

நாரதர் சந்தோஷப்பட்டார்.

''நல்ல பெண்ணம்மா நீ! நல்ல பெண்ணாக இருப்பதால்தான் உனக்கு இப்படியரு நல்ல எண்ணம் தோன்றியிருக்கிறது. ஆனால், என்ன செய்வது? உனக்கு அதிர்ஷ்டம் இல்லையே! உன் தகப்பன் வேறு விதமான நடவடிக்கைகள்தானே எடுத்திருக்கிறான்! சரி, இருக்கட்டும். நான் போய் ஸ்ரீராமருடைய குடும்பத்தில் உன்னைப் பற்றி எடுத்துச் சொல்லி, அவர்களை இங்கு அழைத்து வருகிறேன். அதுவரை நீ சற்றுப் பொறுமையாக இரு!'' என்றார்.

சட்டென்று அங்கிருந்து மறைந்து, வான் வழியே சென்றார். அப்போது, தமஸா நதிக் கரையில் சத்ருக்னனுடைய மகன் யூப கேது நீராடிக்கொண்டிருந்தான். அவன் சிறிய படையோடு அங்கே வேட்டையாடுவதற்காக வந்திருந்தான். அங்கே போய் இறங்கினார் நாரதர்.

யூப கேது அவரை வணங்கி வரவேற்றான். ''உங்களைச் சந்தித்தது மிகப் பெரிய பாக்கியம்! உங்களைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போதுதான் முதன் முதலாகச் சந்திக்கிறேன். ஸ்ரீமந் நாராயணரையே நீங்கள் நெஞ்சில் தரித்திருப்பதை நான் அறிவேன். அம்மாதிரி யான கொடுப்பினை எனக்கும் வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்'' என்று கை கூப்பினான்.

''அதெல்லாம் காலாகாலத்தில் கிடைக்குமய்யா! அதற்கு முன், நீ திருமணம் செய்து கொள்ள வேண்டாமா? குடித்தனம் செய்ய வேண்டாமா? பூமிக்கு வந்துவிட்டாய்; அந்த வாழ்க்கையை முழுவதும் வாழ வேண்டாமா?'' என்று நாரதர் கேட்க,

''நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அது மாதிரியே செய்கிறேன்'' என்று அவன் மறுபடியும் நாரதரை வணங்கினான்.

'ஸ்ரீராமரை கேலி செய்கிறார்களய்யா!'' என்றார் நாரதர். யூப கேது சட்டென்று நிமிர்ந்தான்.

''யார்? யார் கேலி செய்வது?''

''சம்புகண்டன்.''

''அவர் எங்கிருக்கிறார்?''

''காந்திப்பட்டினத்தில்.''

''என்னவென்று கேலி செய்கிறார்?''

''ஸ்ரீராமரை வரவழைத்தால், உங்கள் குடும்பத்தினர் அனைவரும்

வந்துவிடுவீர்களாம். உங்கள் குடும்பம் வந்துவிட்டால், பெரிய கலவரம்தான் வரும்;

அதனால் நாங்கள் வரமாட் டோம் என்று மற்ற அரசர்கள் சொல்லியிருக்கிறார்களாம். அதனால், ஸ்ரீராமரை விட்டு விட்டு, மற்ற அரசர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பியிருக் கிறார் சம்புகண்டன்.''

''எதற்கு எல்லோரை யும் வரவழைக்கிறார் அவர்?''

''குணசுந்தரி என்று அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். மிக அழகி. குணவதி. உத்தமி. அவளுக்குத் திருமணம் ஏற்பாடு செய்து, சகலருக்கும் ஓலை அனுப்பி, சுயம்வரத்துக்கு விழா எடுத்திருக்கிறார். அரசர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். நாளை சுயம்வரம். நீ ஏதேனும் செய்யமுடியுமா? விரைந்து செயல்பட்டால், அந்த அற்புதமான பெண் குணசுந்தரி உனக்கு மனைவி ஆவாள்.

ஸ்ரீராமருக்கு, நல்ல இடத்திலிருந்து தனக்கு மருமகள் வரவேண்டும் என்பது விருப்பம். எனவே, ஸ்ரீராமரின் உள்ளம் களிக்கும்படியாக, அந்த குணசுந்தரியை நீ திருமணம் செய்து கொள்!'' என்று நாரதர் சொல்ல, அவனும் ''சரி'' என்று தன் படையோடு விரைவாகப் புறப்பட்டான்.

அங்கே, விழா உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. இசை ஒலியும், கூச்சலும், மிருகங்களின் நடமாட்டமும், மக்களின் ஆரவாரமும், விதம்விதமான கூத்தாடிகளின் சாகசங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. விருந்துகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அரசர்கள் சந்தோஷத்தில் மூழ்கியிருந்தார்கள்.

மறுநாள், விடியற்காலையில் குணசுந்தரி நீராடிவிட்டு, நன்கு உடுத்திக்கொண்டு,  அந்தப் புரத்தில் காத்துக்கொண்டிருந்தாள்.

'நாரதர் ஏதோ நடக்கும் என்று சொன்னாரே; இதுவரை ஒன்றுமே நடக்க வில்லையே! அத்தனை அரசர்களும் சபைக்கு வந்து கொண்டிருக்கிறார்களே! நாரதர் சொன்னது எப்போது நடக்கும், என்ன நடக்கும்' என்று தவித்துக்கொண்டிருந்தாள்.

அப்போது, யூப கேது தன் படையோடு அந்தப்புரத்துக்குள் நுழைந்தான். எதிர்ப்பட்டுத் தடுத்த வீரர்களை வெட்டி வீழ்த்தினான். உள்ளுக்குள் நுழைந்து, குணசுந்தரியைக் கைப்பிடித்து இழுத்தான். ''வா, என்னோடு தேரில் ஏறிக்கொள்!'' என்றான். அவள் பயந்து மயங்கிச் சரிந்தாள். அவளை அப்படியே அள்ளிக்கொண்டு போய், தேரில் கிடத்தினான். குதிரையைச் செலுத்தினான். வெகு விரைவாக அரண்மனையை விட்டு வெளியேறிப் பறந்தான்.

குணசுந்தரியை யாரோ கடத்திக்கொண்டு போகிறார்கள் என்ற செய்தி, சம்புகண்டனுக்கு எட்டியது. மற்ற அரசர்களுக்கும் தெரிந்தது. உடனே அவர்கள் தங்கள் படையோடு யூப கேதுவைப் பின்தொடர்ந்தார்கள். சம்புகண்டன் ஆரவாரமாக முன்னேறிக் கொண்டிருந்தார்.

மயக்கம் தெளிந்த குணவதியை ஒரு மண்டபத்தில் அமர வைத்துவிட்டு, யூபகேது குதிரையில் ஏறி, அவருக்கு எதிரே வந்து நின்றான். சம்புகண்டனின் படைகளைச் சிதற அடித்தான். மற்ற அரசர்கள் எதிர்க்க, அவர்களையும் தனது சிறு படையின் மூலமே அடித்து விரட்டினான். வேகமாகச் சண்டை செய்தான். அவனுடைய பலத்துக்கும் போர்த் திறமைக்கும் ஈடுகொடுக்கும்படியாக எதிரே யாரும் இல்லை. அவனது வாள் வீச்சும், ஈட்டி எறிதலும், குதிரையின்மீது நின்றபடியே அம்பு தொடுத்தலும் எதிரிகளை பிரமிக்க வைத்தன. அவன் வீரம் போற்றத்தக்க வகையில் இருந்தது. அரசர்கள் பின்வாங்கினார்கள். ''எதற்கு இந்தச் சுயம்வரம்? இங்கு சண்டையிடவா வந்தோம்?'' என்று சொல்லி, மெள்ள மெள்ளக் கழன்றுகொண்டார்கள்.

சம்புகண்டன் தனியாக விடப்பட்டார். யூப கேது அவரை வெட்டிவிட வாள் உயர்த்தியபோது, தொலைவிலிருந்து 'வேண்டாம்' என்று உரத்துக் கத்தி, குணசுந்தரி அவனைத் தடுத்தாள். ஓடிவந்தாள். 'விட்டுவிடுங்கள்' என்று கெஞ்சினாள். சம்புகண்டன் தலைகுனிந்தார்.

யூபகேது சம்புகண்டனை விட்டுவிட்டு, வாளை உறையில் இட்டான். குணசுந்தரியை அணைத்துக்கொண்டான்.

''குணசுந்தரியை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள். நான் அயோத்தியின் அரசன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தகப்பனார் சத்ருக்னன். என்னுடைய பெரியப்பாவை, என் தந்தையை, இன்னும் மற்றவர்களை சுயம்வரத்துக்கு அழைக்காதது உங்கள் குற்றம். அதற்காக நீங்கள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்'' என்று கர்ஜித்தான்.

சம்புகண்டன் செய்வதறியாது, அவனது உத்தரவை ஏற்றுக் கொண்டார். ஸ்ரீராமரிடம் பணிந்து மன்னிப்புக் கேட்டார்.

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி எளிதாக அவனை மன்னித்தார். யூபகேதுவின் வீரத்தைப் பாராட்டினார். சம்புகண்டனின் அழைப்பை ஏற்று, அவன் ஊரான காந்திப்பட்டினம் வந்தார். யூபகேதுவுக்கும் குணசுந்தரிக்கும் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது.

குணசுந்தரி தன்னுடைய இல்லத்தை விட்டு வெளியே போகும் முன்பு, நாரதரை மனத்தால் நினைத்தாள். பார்க்க வேண்டும் என்று விரும்பினாள். கை கூப்பினாள். நாரதர் அவளுக்கு மட்டும் சூட்சுமமாகக் காட்சியளித்தார்.

''மிக்க நன்றி, மிக்க நன்றி'' என்று சொல்லிப் பாதம் பணிந்தாள். அவள் பூமியை வணங்குவதாக எல்லோரும் நினைத்துக்கொள்ள, அவள் நாரதரை நோக்கிச் சிரித்தாள். நாரதர் ஆசிர்வதித்தார். அவர்கள் எல்லோரும் கிளம்பி, அயோத்திக்குப் போனார்கள்.

நல்லவர்களை நல்லவர்களுக்கு மணம் முடிக்க, ஒரு திறமை வேண்டும். யாரால் இந்தக் காரியத்தைச் செலுத்த முடியுமோ, அவரை அந்தக் காரியத்தில் செலுத்த வேண்டும். யாருக்கு உத்தமமான நட்பும் உறவும் தேவைப்படுகிறதோ, அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மனிதர்களின் மனம் அறிந்து, அவர்களின் யோக்கியதை அறிந்து உதவி செய்வது நாரதரின் இயல்பு. நாரதரைப் போற்றி வணங்கினால், அவர் நமக்கும் உதவி செய்வார்.