Monday, October 7, 2013

பலமொழிகளைக் கற்றுக் கொள்வதற்கான வழிகாட்டி!

'வெறும் பள்ளி, கல்லூரி படிப்புகள் மட்டுமே வாழ்க்கைக்கு உதவாது' என்பதை இன்றைய இளம் தலைமுறைக்கு யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பள்ளியில் படிக்கும்போதே பலவிதமான மொழிகள், புரோக்ராமிங், இசை, விளையாட்டு, நடிப்பு என்று 'எக்ஸ்ட்ரா கரிக்குலர்' எனும் 'பாடத்துக்கு அப்பாற்பட்ட'வற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவர்களிடம் ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது. எதிர்காலத்தில் வேலையில் சேரும்போது, இதுபோன்ற 'எக்ஸ்ட்ரா' தகுதிகள், நிச்சயமாக அவர்களுக்குக் கைகொடுக்கும் என்பது நிதர்சனம்!

அவர்களுக்கெல்லாம் உதவும் வகையில், இதோ... பலவிதமான மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கான வழிகாட்டி!

பிரெஞ்சு: இந்த மொழியை முழுவதுமாக கற்க, லெவல் 1 முதல் லெவல் 5 வரை படிக்க வேண்டும். பிரெஞ்சு மொழியை மட்டும் எழுத, படிக்கக் கற்றுக்கொள்வதற்கான லெவல் 1 என்பது மொத்தம் 160 மணி நேர பயிற்சியைக் கொண்டது. இதை திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் பயில்வதற்கு 9,350 ரூபாய் கட்டணம். சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களில் பயிற்சி பெற 10,450 ரூபாய் கட்டணம். புத்தகக் கட்டணமாக 600 ரூபாயும் செலவாகும்.

தொடர்புக்கு: அல்லயன்ஸ் ஃபிரான்ஸிஸ் ஆஃப் மெட்ராஸ், நம்பர் 24, காலேஜ் ரோடு, சென்னை-6, 044  -  28279803,www.madras.afindia.org..

ஜெர்மன்: இந்த மொழியில் பயிற்சி பெற, அதிகபட்சம் 45 நாட்கள் வகுப்புகளுக்கு செல்ல வேண்டியிருக்கும். வார நாட்கள் என்றால் 11 ஆயிரம் ரூபாய், சனி மற்றும் ஞாயிறு என்றால் 12 ஆயிரம் ரூபாய் கட்டணமாகச் செலுத்தவேண்டும். ஜெர்மன் மொழியைப் படிப்பது, எழுதுவது, பேசுவது ஆகியவற்றுக்கான பயிற்சிகள் வழங்கப்படும்.

தொடர்புக்கு: கோதீ இன்ஸ்டிட்யூட் சென்னை (Goethe Institute Chennai), மேக்ஸ் முல்லர் பவன், நம்பர் 4, 5-வது தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை - 6, 044  -  28331314, www.goethe.de.

ஜாப்பனீஸ்:  ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு N1 முதல் N5 வரை என ஐந்து நிலைகளாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முதல் நிலையான N5 எழுதுவது, படிப்பது, மற்றும் பேசுவது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். இதற்கு 6,128 ரூபாய் கட்டணம். அடுத்த நிலையான N4 பயிற்சி பெற, 7,534 ரூபாய். இரண்டுக்குமே தலா 182 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படும். இந்த இரண்டிலும் ஒருவர் பயிற்சி பெற்றாலே... ஜப்பான் நிறுவனங்களில் பணியில் சேர்ந்து அசத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு திறக்கப் பட்டுவிடும். தொடர்புக்கு: ஹயாகவா ஜாப்பானீஸ் லாங்வேஜ் ஸ்கூல் (Hayakawa Japanese Language School), நம்பர் 19, கிழக்கு மடத் தெரு, அமைந்தக்கரை, சென்னை-29, 044  -  26621117, 26641118,www.hayakawa.in.  

சைனீஸ்: இம்மொழியை முழுவதுமாக கற்கவேண்டும் என்று நினைப்பவர்கள், லெவல் 1 மற்றும் லெவல் 2 ஆகிய இரண்டு நிலைகளையும் முடிக்க வேண்டும். இதற்கு தலா 90 மணி நேரம் வகுப்பு நடத்தப்படும். மொத்தக் கட்டணம், 30 ஆயிரம் ரூபாய். வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மாணவர்களின் வசதிக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

தொடர்புக்கு: சைனீஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சென்னை, நம்பர் 28, 2-வது குறுக்குத் தெரு, ராகவன் காலனி, அசோக் நகர், சென்னை-83, 044  -  43335552 / 24717876, www.chennaichinese.com..

ஹிந்தி: தமிழகம் எங்கும் இருக்கும் 'தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபா' மற்றும் அதன் கிளைகளில் தொடர்பு கொண்டு ஹிந்தியைப் படிக்கலாம். 'பிராத்மிக்' என்று சொல்லக்கூடிய அடிப்படை ஹிந்தி பயிற்சியில் சேர்ந்தால்... படிக்கவும், எழுதவும் கற்றுக்கொள்ளலாம். மையங்கள் அமைந்துள்ள இடத்துக்கு ஏற்ப மாதத்துக்கு 200 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் எந்த வயதினராக இருந்தாலும் சேர்ந்து கற்றுக்கொள்ளமுடியும். பி.ஏ, எம்.ஏ, உள்ளிட்ட பட்டப் படிப்பு; எம்.ஃபில், பிஹெச்.டி உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றையும் இந்தி மொழியில் படிக்கலாம்.

தொடர்புக்கு: தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபா, தணிகாசலம் ரோடு, தி.நகர், சென்னை-17, 044-24331565/ 24345486,www.dbhpsabha.org.

ஸ்பானிஷ்: இந்த மொழியை முழுவதுமாக கற்க, லெவல் 1 முதல் லெவல் 8 வரை படிக்க வேண்டும். லெவல் 1 பயிற்சி பெற்றால் ஸ்பானிஷ் மொழியில் எப்படி எழுதுவது மற்றும் படிப்பது என்று பயிற்சி தருவார்கள். 70 மணி நேர பயிற்சிக்கு 10,500 ரூபாய் செலுத்தவேண்டும். ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு என சம்மர் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. அதற்கான கட்டணமாக 18 மணி நேர வகுப்புக்கு 5,500 ரூபாய் செலுத்தவேண்டும்.

தொடர்புக்கு: இன்ஸ்டிடோ ஹிஸ்பானியா மையம், நிம்மோ ரோடு, சாந்தோம்,  சென்னை - 4, 044  -  24614850  /  43521523, www.institutohispania.com.  

ஆங்கில மொழிப் பயிற்சி: சென்னை, 'பிரிட்டிஷ் கவுன்சில் மைய'த்தில் பல்வேறு விதமான ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதில் 42 மணி நேர ஆங்கிலப் பயிற்சி வகுப்புக்கு, 7,900 ரூபாய் செலுத்த வேண்டும். எப்படி படிப்பது, வார்த்தைகளை எப்படி உச்சரிப்பது, எப்படி எழுதுவது என்பது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் அங்கே 8 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் 28 மணிநேர சம்மர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதற்கான கட்டணம்... 6,900 ரூபாய்.

தொடர்புக்கு: பிரிட்டிஷ் கவுன்சில் டிவிஷன், 737, அண்ணா சாலை, சென்னை-2, 044  -  42050688, www.britishcouncil.in.

தமிழ்: சென்னையிலுள்ள 'தமிழ் மொழிக் கூடத்தில்' அடிப்படை தமிழ் தொடங்கி, இலக்கணம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதில் அடிப்படை தமிழ் மற்றும் இலக்கணம் கற்பதற்கான 1 மணிநேர பயிற்சி வகுப்புக்கு, 125 ரூபாய் கட்டணம். டியூஷன் பயிற்சி பெற மாதத்துக்கு 1,500 ரூபாய். இங்கே திருக்குறள் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

தொடர்புக்கு: தமிழ் மொழிக் கூடம், நம்பர் 4, சம்பந்தம் தெரு, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28, 044  -  42109486, 9282133333, www.thamizhmozhikoodam.com.