Monday, October 21, 2013

ஜூஸ் என்ற பெயரில், சுகாதாரமற்ற குளிர்பானங்கள்

கழிவறை தண்ணீரை பயன்படுத்துவதால்...ஜூஸ் குடிக்காதீங்க...

(இது திருப்பூருக்கு மட்டுமல்ல, எல்லா பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள கடைகளுக்கும் பொதுவானது.)

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள பொதுக் கழிப்பிடங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, கரும்பு ஜூஸ் தயாரித்த கடை 
களில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தரமற்ற உணவு பண்டங்கள் விற்பனை செய்த ஐந்து பேருக்கு, உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில், சேலம் பஸ்கள் நிற்கும் "ஷெட்' அருகேயும், கிழக்கு பகுதியில் உள்ள வணிக வளாகத்திலும், பழரச கடைகள் செயல்படுகின்றன. கரும்பு ஜூஸ் என்ற பெயரில், சிலர் சுகாதாரமற்ற குளிர்பானங்களை தயாரித்து விற்பதாக, உணவு 
பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தங்கவேல், முருகேசன் ஆகியோர், பஸ் ஸ்டாண்டில் உள்ள பழரச கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சுகாதாரமற்ற முறையில் பழரசம் விற்பனை செய்தவர்களை கண்டறிந்து, மேல்நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: கரும்பு ஜூஸ் என்ற பெயரில், சுகாதாரமற்ற, உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் வகையிலான குளிர்பானங்கள் விற்பதாக புகார் வந்தது. ரகசியமாக ஆய்வு செய்தபோது, அதிர்ச்சியான விஷயங்கள் தெரியவந்தது. குறிப்பாக, சேலம் பஸ்கள் நிற்கும் "ஷெட்' அருகே உள்ள ஜூஸ் கடைகளில், பாத்ரூமில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து, கரும்பையே பயன்படுத்தாமல், "சேக்ரின்' மற்றும் கலர் பவுடர்களை பயன்படுத்தி, குளிர்பானம் தயாரிப்பதை நேரிடையாக கண்டுபிடித்தோம்.

சில கடைகளில் மீன் பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகளை வைத்து, குளிர்பானம் தயாரிப்பதும் தெரியவந்தது. குறிப்பாக, மறைவாக வைத்துள்ள பெட்டிகளில் இருக்கும் அழுகி கெட்டுப்போன பழ வகைகள் மூலமாக ஜூஸ் தயாரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படும் சோடா, குளிர்பானங்களில் உற்பத்தி தேதி, நிறுவன பெயர் உள்ளிட்ட விவரங்கள் இல்லை. அவற்றை, இனி பயன்படுத்த கூடாதென 
உத்தரவிடப்பட்டுள்ளது.

தரமற்ற அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து, உடனடியாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரமில்லாத உணவு பொருட்களை விற்பனை ய்த குற்றத்திற்காக, விற்பனையாளர்கள் ஐந்து பேருக்கும் நோட்டீஸ் கொடுக்க, உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி மேல்நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், பழங்கள், பழரசங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கும்போது, தரமாக தயாரிக்கப்படுவதை உறுதி செய்து கொண்டு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.